November 20, 2018

ரூபேயை கண்டு யாருக்கு பயம்?

உலக அளவில் பணப் பரிமாற்ற மின்னணு அட்டை வர்த்தகத்தில் கிரெடிட் அட்டை/ டெபிட் அட்டை) மூன்றாமிடம் வகிக்கும் மாஸ்டர்கார்டு நிறுவனம், இந்தியாவின் "ரூபே' அட்டைக்கு எதிராக, அமெரிக்காவிலுள்ள உலக வர்த்தக அமைப்பில் புகார் செய்தது. தேசியவாத அணுகுமுறையுடன் மோடி தலைமையிலான இந்திய அரசு ரூபே அட்டையின் வர்த்தகத்துக்கு துணை புரிகிறது என்பதே மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் குற்றச்சாட்டு. இது சர்வதேச வணிக ஒப்பந்தத்துக்கும் உலகமயமாக்கல் கொள்கைக்கும் எதிரானது என்று வாதிட்டது.


"ரூபேயை' கண்டு மாஸ்டர்கார்டு நிறுவனம் பீதியடைந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மின்னணு பணப்பரிமாற்ற அட்டை வர்த்தகத்தில் போட்டியின்றி ஆதிக்கம் செலுத்திவந்த பன்னாட்டு நிறுவனங்களான "விசா', "மாஸ்டர்கார்டு' ஆகியவை, அண்மைக்காலமாக தங்களது இறுக்கமான பிடியை இழந்து வருகின்றன. அவற்றின் இடத்தை இந்தியாவின் ரூபே அட்டை பிடித்துவிட்டது. தங்கள் வர்த்தகத்தில் துண்டு விழத் தொடங்கியதால் பன்னாட்டு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதே நிலைமை நீடித்தால், உலக அளவிலும் ரூபே ஸ்திரமாகிவிடும் என்பதை உணர்ந்துள்ளதால், அவை புலம்பத் துவங்கியுள்ளன.


இந்த வர்த்தகப் போட்டியைப் புரிந்துகொள்ள, மின்னணு அட்டை மூலம் பணம் வழங்கும் பணப் பரிமாற்ற நிறுவனங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.


ரொக்கப் பணப் புழக்கத்துக்கு மாற்றாக, மின்னணு அட்டை மூலம் பணப் பரிமாற்றம் செய்வது அமெரிக்காவில் 1960களில் துவங்கியது. இத்தொழிலில் விசா, மாஸ்டர்கார்டு போன்ற பண செலுத்துகை நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இந்த நிதி நிறுவனங்களை அமெரிக்க வங்கிகள் இணைந்து ஆரம்பத்தில் துவக்கினாலும், விரைவில் அவை தனித்த அதிகாரமுள்ள நிறுவனங்களாக வளர்ந்துவிட்டன. இவை அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகிவிட்டன.


கடன் அட்டை (கிரெடிட் கார்டு), பற்று அட்டை (டெபிட் கார்டு), முன்தொகை செலுத்திய அட்டை (பிரீபெய்டு கார்டு), எண்ம அட்டை (விர்ச்சுவல் கார்டு) எனப் பல வகையான பணப் பரிமாற்ற அட்டைகள் புழக்கத்திலுள்ளன. ஒருவரது வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் ஏ.டி.எம். இயந்திரங்களின் உதவியுடனோ, பி.ஓ.எஸ். கருவிகளின் உதவியுடனோ பயன்படுத்த முடிவது இந்த அட்டைகளின் சிறப்பு. வங்கிக் கணக்கில் பணம் இல்லாதபோதும் கடன் அட்டைகள் மூலம் செலவு செய்ய முடியும். இதுவே அமெரிக்கர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.


அமெரிக்கா போலவே உலக நாடுகளிலும் இந்த அட்டைகள் மிக விரைவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கின. ஒவ்வொரு நாடும் தனக்கென பிரத்யேகமான பணப் பரிமாற்ற அட்டைகளை உருவாக்கத் துவங்கின. அதற்காக பண செலுத்துகை நிறுவனங்களும் துவங்கப்பட்டன. யூனியன் பே (சீனா), டிஸ்கவர் (அமெரிக்கா), ஜேசிபி (ஜப்பான்), நெட்ஸ் (சிங்கப்பூர்), பி.சி.கார்டு (தென்கொரியா), எலோ (பிரேசில்) போன்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டதால், மின்னணு பணப் பரிமாற்ற அட்டைகளின் புழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தது.


மின்னணு அட்டை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிட்ட சதவீத செயல்பாட்டுக் கட்டணத்தை அட்டை வழங்கும் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இத்தொகையை பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் இரு வங்கிகளோ, ஒரு வங்கியோ செலுத்திவிடும். அத்தொகை வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதன்மூலமாக பலகோடி ரூபாய் லாபத்தை பண செலுத்துகை நிறுவனங்கள் பெறுகின்றன.


2016ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இத்துறையில் உலக அளவிலான பங்களிப்பில், அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், சீனாவின் யூனியன் பே முதலிடம் வகிக்கிறது (43%); இரண்டாமிடத்தில் அமெரிக்காவின் விசா (21%), மூன்றாமிடத்தில் மாஸ்டர் கார்டு (16%) ஆகியவை உள்ளன. பிற நிறுவனங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு 20 % ஆக உள்ளது.


இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றம் அதிகரித்து வந்தபோது, நமக்கென தனித்த மின்னணு அட்டையின் தேவையை ரிசர்வ் வங்கி உணர்ந்தது. இதற்காக, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய 6 பொதுத்துறை வங்கிகளும், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய 2 தனியார் வங்கிகளும், ஹெச்எஸ்பிசி, சிட்டி பாங்க் ஆகிய 2 பன்னாட்டு வங்கிகளும் இணைந்து முதலீடு செய்து, இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தை (National Payment Corporation of India- NPCI) 2008-இல் துவக்கின.

இந்நிறுவனம் லாப நோக்கமற்ற சுயேச்சையான அமைப்பாகும். வங்கிகளுக்கு இடையிலான சில்லறை பணப் பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பதும், இணைய வழி நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்துவதும் இதன் நோக்கம். ஒருங்கிணைந்த கொடுக்கல் இணைப்பு (யுபிஐ), பாரத் பணப் பரிமாற்ற இணைப்புச் செயலி (பீம் செயலி) ஆகியவையும் இதன் பணிகளாக உள்ளன.


இந்நிறுவனத்தின் முயற்சியால் ரூபே அட்டை உருவாக்கப்பட்டது. விசா, மாஸ்டர்கார்டு போன்ற அட்டைகளுக்கு நிகராகவும், மாற்றாகவும் சுதேசி பணப் பரிமாற்ற அட்டையாக ரூபே அட்டை (RuPay card) 2014 மே மாதம் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையின் சர்வதேச அளவிலான அங்கீகாரத்துக்காக, அமெரிக்காவின் டிஸ்கவர்


ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சீனாவின் யூனியன் பே போன்ற பன்னாட்டு பண செலுத்துகை நிறுவனங்களுடன் இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூபே இதுவரை பற்று அட்டை, கடன் அட்டை, முன்தொகை செலுத்திய அட்டை, எண்ம அட்டைகளை வெளியிட்டுள்ளது. காந்தப்பட்டை, இஎம்வி சிப், தனிப்பட்ட எண் ஆகியவற்றுடன் கூடிய இந்த அட்டை மிக விரைவில் உள்நாட்டில் 65% பங்களிப்பை பெற்று சாதனை புரிந்துள்ளது (2018, நவம்பர் 9 நிலவரம்). ரூபே அட்டையின் வளர்ச்சிக்குத் துணையாக தற்போதைய மத்திய அரசு பல வகைகளில் முன்னிற்பதே இதற்கு காரணம்.

மின்னணு அட்டைகள் மூலமான பணப் பரிமாற்றத்தால் செயல்பாட்டுக் கட்டணமாக பன்னாட்டு பண செலுத்துகை நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருவதைத் தடுக்கவும், சுதேசிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ரூபே அட்டையை தற்போதைய மத்திய அரசு கருவியாகப் பயன்படுத்துகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமை அரசால் கொண்டுவரப்பட்ட போதிலும், இதனை பொருளாதார ஆயுதமாக மாற்றுவதில் தற்போதைய பாஜக அரசு வெற்றி கண்டுள்ளது.


நாட்டிலுள்ள சுமார் 3 லட்சம் ஏடிஎம் மையங்களிலும், 26.15 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்களிலும், ரூபே அட்டையைப் பயன்படுத்த முடிகிறது. நாட்டிலுள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட 1,100 வங்கிகளில் ரூபே ஏற்கப்படுகிறது. பல்வேறு நாடுகளுடனும், பன்னாட்டு பண செலுத்துகை நிறுவனங்களுடனும் செய்துள்ள இருதரப்பு ஒப்பந்தம் மூலமாக, இந்தியாவுக்கு வெளியிலும் ரூபே அட்டைகள் செல்லுபடியாகின்றன.

தவிர, விவசாயிகளுக்கான கடன் திட்டமான கிஸான் கிரெடிட் கார்டும் ரூபே அட்டையாக வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் முன்பதிவுக்கான முன்தொகை செலுத்தும் திட்டத்திலும் பிரீபெய்டு அட்டைகளை ரூபே வழங்குகிறது. இந்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலும் ரூபே மூலமான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.100 ரொக்கச் சலுகை (கேஷ் பேக்) தருவதாக அறிவித்துள்ளது.


ரூபே அட்டையின் செயல்பாட்டுக் கட்டணம் பிற பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் 23 % குறைவு. எனவே உலக அளவில் மிக விரைவில் அங்கீகாரம் பெற்றுவிட்டது ரூபே. தவிர, இந்திய அரசின் தீவிர முயற்சிகளும் அதனை மக்களிடையே பரவலாக்கியது.


உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யும்போது இருதரப்பு ஒப்பந்தங்களில் முக்கிய அம்சமாக ரூபே இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. உதாரணமாக, கடந்த மே மாதம் சிங்கப்பூரில் ரூபே அட்டையின் அறிமுக நிகழ்ச்சியில் அந்நாட்டுப் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டதைக் குறிப்பிடலாம். அதன்மூலமாக, சிங்கப்பூரின் நெட்ஸ் உடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

தற்போது இந்தியாவில் 9.25 கோடி மின்னணு பணப் பரிமாற்றஅட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரூபேயின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல். 2016-17இல் ரூபே மூலமாக செய்யப்பட்ட சில்லறைப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை 19.5 கோடி. இதுவே 2017-18இல் 45.9 கோடியாக (135 % வளர்ச்சி) அதிகரித்தது. மின் வணிக இணையதளங்களில் ரூபே அட்டையின் பயன்பாடும் 137 % அதிகரித்துள்ளது.


மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அளித்த தகவல்படி, 2016இல் ரூ. 800 கோடியாக இருந்த ரூபே அட்டை பரிமாற்றம் 2018 செப்டம்பரில் ரூ. 5,730 கோடியாக உயர்ந்துள்ளது. ரூபே அட்டையின் இந்த அசுர வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களின் அட்டைகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக விசாவும், மாஸ்டர் கார்டும் அண்மையில் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டுக் கட்டணத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன.


இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் விரும்பிய மாற்றம் இதுதான். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி ""ரூபே அட்டைகளை நாம் பரவலாக்கி வருகிறோம். அதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆரோக்கியமான போட்டிச் சூழலை ஏற்படுத்த முடியும்'' என்று கூறியதை இங்கே நினைவுகூரலாம்.

இதுவே கள நிலவரம். சுமார் 4 ஆண்டுகளில் ரூபே அட்டையின் வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடுவதாக மாறியிருப்பதால்தான், அவை பன்னாட்டு வர்த்தக அமைப்புகளில் புகார் கூறத் துவங்கியுள்ளன. அவற்றின் கட்டற்ற வர்த்தகத்துக்கு தற்போது கடிவாளம் இடப்பட்டுள்ளது.

அவற்றின் சர்வதேச வர்த்தக நெறிமுறை மீறல்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசின் முயற்சியில் குற்றம் காணவே இயலாது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் இப்போதைய காலகட்டத்தில் தேசியவாதம் நோக்கியே நகர்கின்றன.


எனவே இந்த விஷயத்தில் இந்தியாவை தனிமைப்படுத்த இயலாது.

ஆயினும், ரூபே அட்டைகள் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் 65 % பங்களிப்பைக் கொண்டிருப்பதால் ரூபே அட்டைகளின் முக்கியத்துவம் தற்போது உணரப்படுகிறது. இதே வேகத்தில் ரூபே அட்டை உலக அளவில் வளர்ச்சியுற்றால், இந்த அட்டைகளை நிர்வகிக்கும் என்பிசிஐ பன்னாட்டு நிறுவனமாக விஸ்வரூபம் எடுக்கும் என நிச்சயம் கூறலாம்.