November 18, 2017

தற்சார்பு வாழ்வியல் - 9

சித்தர்களும் தற்சார்பும் - சாட்சிசென்ற இதழில் இயேசு கிறிஸ்து கூறியவற்றில் தற்சார்பு வாழ்வியல் இழையோடி இருப்பதைக் கண்டோம். இவ்விதழில் இந்து மதமும் தற்சார்பும் என்று எழுதலாம் என்று துவங்கியபோது, அது மூன்று பக்கங்களுக்குள் அடக்க இயலாத ஒரு கடல் என்றும், இந்து மதத்திலேயே சம்கியம், யோகம், நியாய‌ம், வைசேசிகம்,மீமாம்சம், தர்க்கம், லோகாயதம், மாயாவாதம்,வேதாந்தம் என்று எண்ணற்ற எண்ணப் பிரிவுகள் உள்ளன; (நாத்திகமும் ஒரு அங்கம் தான்!) எனவே இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆராய வேண்டும் என்றும் தோன்றியது.
இதற்கிடையில் சென்ற கட்டுரையைப் படித்து விட்டுச் சிலர் “நம் நாட்டு இலக்கியங்களை விட்டு ஏன் விவிலியத்திற்குப் போனீர்கள்” என்றும், வேறு சிலர் “தற்சார்பு வாழ்வியல் என்று எங்களை எல்லாம் துறவியாகச் சொல்கிறீர்களா” என்றும் கேட்டனர். மற்றொரு நண்பர், ” மதங்களை ஏன் இழுக்கிறீர்கள் , அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை, விருப்பு, தேர்வு” என்றார். இதற்கெல்லாம் பதில் அளிப்பது என் கடமையாதலால் முதலில் அதைச் செய்து விட்டுப் பிறகு தொடர்கிறேன். முதலில், வாழ்விற்கு ஒரு கோட்பாடும், கொள்கையும், நெறியும் தேவை. அது நமக்கு ஒரு இலக்கையும், அவ்விலக்கை நோக்கி ஒரு தெளிவான பாதையையும் அளிக்கும்.
இந்தக் கோட்பாட்டையும் நெறியையும் கொடுப்பதற்குத்தான் மத நம்பிக்கைகள் தேவை. வழியைக் காட்டும் ஒரு வரைபடம் போல பெரும் ஞானிகள் கூறிய வார்த்தைகள் நமக்கு வழி காட்டுகின்றன. மதம் என்பதே ஒரு கோட்பாடுதான் ; அதனால்தான் பாரதி “யானெதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே, நீவிர் என் மதத்தைக் கைக்கொள்மின்” என்று தன் கோட்பாட்டைப் பறை சாற்றினார். எல்லா மதமும் தற்போது மரபாய் இருப்பினும் அது உதிக்கும்போது ஒரு புரட்சியான சிந்தனையாகத்தான் தோன்றியது. அந்தக் கால கட்டத்திற்கு அத்துணிகர சிந்தனைகள் அவசியமாக இருந்தன. நாம் நம்முடைய பல‌வீனங்களாலும், அறியாமையினாலும், ஆட்டு மந்தைகள் போல் வழி,வழியாக மதங்களைப் பின்பற்ற ஆரம்பிக்கும்போதுதான் அது மரபாக மாறித் தான் உதித்த நோக்கை மறக்க நேரிடுகிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால், “தற்சார்பு வாழ்வியல் என்பது ஒரு கோட்பாடு - ஒரு கொள்கை. அதனைப் பல மதங்களும் ஏற்கனவே வெவ்வேறு விதங்களில் சுட்டியிருக்கின்றன. இக்கோட்பாடு எம்மதத்திற்கும் எதிரி அல்ல” என்பதே.
தற்சார்பு என்பது உலகில் பற்பலரும் அவரவர் நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக முயற்சித்தும் அடைந்தும் வருவது. எனவே இக்கோட்பாட்டிற்கு இனம், நிறம், மொழி, நாடு போன்ற பிரிவினைகள் எதுவும் இல்லை. அறிஞர்களில் நம்நாட்டு அறிஞர், வேற்று நாட்டு அறிஞர் என்றெல்லாம் பிரிவினை இல்லை. அறிவுள்ளோர் அறிஞர். அவர் கூற்றில் அறிவையும் அறிவுரைகளையும் காண்பது நம் பொறுப்பு அவ்வளவே!
தற்சார்பு வாழ்வியல் என்பது முற்றும் பொருட்களைத் தியாகம் செய்யும் துறவு அல்ல. சதா பொருளையே தேடி, வாழ்வதற்கு நேரம் இன்றி நெஞ்சு புண்ணாகும் லோகாயுதத் தேடலும் அல்ல. புத்தர் சொன்னது போல் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நடுப்பாதை. வள்ளுவர் சொன்னதுபோல இல்வாழ்வில் எவ்வாறு வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது என்ற தேடலுக்கு ஒரு விடை.
சரி இந்து மதத்திற்கு வருவோம்! சங்கியம் என்பது பிரபஞ்சம் பிரகிருதி (பொருள்)என்றும் , புருஷன் (ஆத்மா/ப்ரக்ஞை) என்றும் இரண்டால் உருவானது என்ற கோட்பாடு. அனைத்துமே சத்வம், ரஜஸ் , தமஸ் ஆகிய முக்குணங்களின் கலவையினால் ஆனது என்பது சங்கியம். யோகம் என்பது இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்கிறது - ஆனால் தனிமனிதன் எப்படித் தெய்வமாகலாம் என்பதையும் வழிவகுக்கிறது. இதற்குக் கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம், மந்திர யோகம், தந்திர யோகம், அட யோகம் என்று வழிகளை வகுக்கிறது. யோகா என்றால் வடமொழியில் இணைதல் என்று பொருள். மனிதன், இறைவனோடு இணையும் பாதை யோகா என்று அழைக்கப் படுகிறது. நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள், தந்திர யோகம், ராஜ யோகம் ஆகியவற்றைப் பின்பற்றியவர்கள் - அட்டாங்க யோகம் என்று பொதுவாய் அழைக்கப்படும் எட்டு அங்கங்கள் கொண்ட, உடலை மையமாகக் கொண்ட ஆத்ம தேடல் இது.
அவ்வையார், திருமூலர், நக்கீரர் (விநாயகர் அகவல்) போன்றோரின் பாடல்களும் இவ்வழி முறையையே காட்டுகிறது. உடலில் தலை முதல் புணர்ச்சி அங்கம் வரை ஆறு சக்கரங்களில் ஆன்மசக்தி (குண்டலினி) மேலிருந்து கீழாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது; உணவுக் கட்டுப்பாடு, மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி, தியானம், போன்ற பயிற்சிகளால் இம்மின்சாரம் போன்ற சக்தியை மேல்நோக்கித் திருப்புவது குண்டலி யோகம். “மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக் காலால் (காற்றால்/மூச்சால்) எழுப்பும் கருத்தறிவித்தே” என்ற அவ்வையாரின் விநாயகர் அகவலில் இருந்து நாம் இதை அறியலாம்.
தற்சார்பு என்றால் சித்தர்கள் எளிமையின் விளிம்பில் இருந்தவர்கள். காற்றைப்போல் தங்கள் உடலை லேசாக்கிக் கொண்ட இவர்கள் நாளில் ஒரு முறை ஏதோ உணவும், கோவணம் உடையாகவும், கிடைத்த திண்ணையில் தூங்கியும் தங்கள் உடல்ரீதியான தேவைகளை அவ்வப்போது மிக எளிதாகப் பூர்த்தி செய்து வாழ்ந்தனர். எல்லா சித்திகளும் கைக்குள் இருந்தும் ஒரு மடம் உருவாக்குவதோ, மதம் உருவாக்குவதோ, போதனைகள் செய்வதோ, சீடர்கள் வளார்ப்பதோ எதுவுமே செய்யாமல் வெட்டவெளி தன்னை மெய் என்றிருந்தனர். உலகால் அவர்களுக்கு எப்பயனும் இல்லை; எல்லாத் தேவையும் கடந்த அவர்களால்தான் உலகுக்குக் அளவற்ற பயன் கிட்டியது.
தன் தேவைகளைப் பற்றிப் பேசும்போது பட்டினத்தார், “ஆறுண்டு தோப்புண்டு; அணி வீதி அம்பலம் தானுமுண்டு; நீறுண்டு; கந்தை நெடுங்கோவணம் உண்டு; செஞ்சில் அஞ்செழுத்துமுண்டு - நித்தம் மாறுண்டு உலாவும் மடநெஞ்சே, மனைதோறும் சென்று சோறுண்டு தூங்கிப் பின் சும்மா இருக்கச் சுகமும் உண்டே!” என்றும் “நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும் இச்சையிலே தான் அங்கு இருப்பதுவும் - பிச்சைதனை வாங்குவதும் உண்பதுவும் வந்து திருவாயிலிலே தூங்குவதும் தானே சுகம்” என்று எழுதுவார்.
இவர்கள் பாடல்கள் பெருமளவு துறவிகளுக்கேயாயினும், இல்வாழ்வுக்கு நல்ல போதனைகளும் அளித்திருக்கிறார்கள்.
மையாடு கண்ணியும், மைந்தரும், வாழ்வும் , செந்தீ ஐயா! நின் மாயை அருள்வெளித் தோற்றம் - அகிலத்து மெய்யாய் இருந்தது - நாட்பட, நாட்பட வெட்டவெறும் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே!
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை; நம்பும் பொம்ம‌ லாட்டமென்றே இரு பொல்லா உடலை ; அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை; வாழ்வைக் குடம் கவிழ் நீரோட்டமென்றே இரு ; நெஞ்சே உனக்கு உபதேசம் இதுவே
என்கிறார். பொருளாசை கூடாது என்று வீடு வரை உறவு, வீதி வரை மனைவி என்று வலியுறுத்தினார். மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தவரையும் , எரிந்த கட்டை மீதில் இடைக்கோவணத்தை உரிந்துருட்டிப் போட்டு விடுவார்கள் என்று எச்சரிக்கிறார். அகப்பேய்ச் சித்தரோ, “யார் அலைந்தாலும் அகப்பேய் நீயலையாதேடி ஊர் அலைந்தாலும் அகப்பேய் ஒன்றையும் நாடாதே” என்று சும்மா இருக்கச் சொல்கிறார். பத்திரகிரியார் 'பற்றற்று நீரில் படர்தாமரை இலை போல்' ஒட்டும் ஒட்டாது வாழ்வில் ஈடுபடச் சொல்கிறார். காடுவெளிச் சித்தர் (கடுவெளி என்ற நூல்களில் அச்சிடுகிறார்கள் - காடுவெளி என்பதே சரி- காடு என்பது பூரணத்தையும், வெளி என்பது சூனியத்தையும் குறிக்கிறது. சூனியமாகவும், பூரணமாகவும் ஒருங்கே இருப்பதால் அவருக்கு இப்பெயர்) “நல்லவர் தம்மைத் தள்ளாதே அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித் தள்ளாதே” . நாலெட்டு அறம் என்பது 32 வகையான் அறங்கள் - துறவியர், ஏழைகள், போன்றோருக்கு தானம் வழங்குவதில் தொடங்கி, பறவைகளுக்கு நீர் அளித்தல், ஆநிரைகளுக்கு நீர்த் தொட்டி அமைத்தல் வரை 32 விதமான புரவலப் பொறுப்பு ஒரு இல்வாழ்வில் உள்ளோருக்கு உள்ளது.
நக்கீரர் “பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தம், கண்டது மாயைக் கனவெனக் காட்டி” என்று பட்டினத்தாரைப் போல் முற்றும் கனவென வாழ்வில் இயங்கச் சொல்கிறார். சிவவாக்கியர் மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்குகிறார்.
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
என்று வெளிப்பூசைகளை, வெறும் பாவனைகளைச் சாடுகிறார்.
இதே தொனியில் அகப்பேய்ச் சித்தரும்
பூசை பைசாசமடி - அகப்பேய் போதமே கொட்டமடி ஆசை அற்றவிடம் - அகப்பேய் ஆனந்தம் கண்டாயெ
ஈசன் பாசமடி - அகப்பேய் எங்ஙனம் சென்றாலும்
என்று சுயநலமான இறைவழிபாட்டையும், ஆன்ம தேடலையும் ஒதுக்குகிறார். குதம்பைச் சித்தர்
தாவரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி
என்று 'நீ அற்ற எல்லையிலே சும்மா இரு' என்று தாயுமானவரைப் போலச் சும்மா இருக்கச் சொல்கிறார்.
திருமூலர்
ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள் ஈசனோடாயினும் ஆசையறுமின்கள் ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆன‌ந்தமாமே! என்று போதிக்கிறார்.
இந்த சித்தர்களின் போதனைகளைக் கொஞ்சமேனும் கடைப்பிடிக்க முயற்சித்தால் நம் வாழ்வு எப்படி இருக்கும்?
பொருளாசை குறைந்து விடும். ப‌குத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம். சும்மா இருக்கப் பழகுவோம். சும்மா இருப்பது என்பது சோம்பித் திரிவதல்ல. தற்சார்பான சும்மா இருத்தல் என்பது நம் தேவைகளை நாமே நிறைவு செய்து கொள்வது. தன் தேவைக்கு மீறி எந்த வன்முறையான‌ பிடுங்கலிலும் ஈடுபடாதது - இதுதான். மனிதனைத் தவிர எந்த உயிரினமும் தேவைக்கு அதிகமாய் அபகரிப்பதில்லை. மனிதர்கள் எல்லாரும் இப்படிச் சும்மா இருந்தால் உலகம் எவ்வளவு இனிமையாய் இருக்கும்! இயற்கை அழிவு இருக்காது. பற்றாக்குறை என்பதே இருக்காது. அன்பும் அறமும் உள்ளதாய் வாழ்விருக்கும். உடல், மனம், உலகு மூன்றுமே வளமாய், நலமாய் இருக்கும். உண்மையில் பார்த்தால் 99 சதம் மனிதர்க‌ளுக்குப் பணம்தான் மதம், - ராமர், சிவன், கிருஷ்ணர், புத்தர், இயேசு, அல்லா என்பதெல்லாம் வெளிப்பூச்சுத் தான்.அன்பும், பகிர்ந்து கொள்வதும், நுகர்ச்சியைக் குறைப்பதும், விட்டுக் கொடுப்பதும் யாரும் விரும்புவதில்லை. நம்மால் இயன்ற தர்மக் கூச்சல் நாம் ஒரு மூலையில் போடுக்கொண்டே இருப்போம்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொன்னவரும் ஒரு சித்தர்தான்!

Courtesy:http://www.kaani.org

No comments:

Post a Comment