November 18, 2017

தற்சார்பு வாழ்வியல் - 8

ஏசுநாதரும் தற்சார்பும்நிறைவு அடைவதும் என்று கடந்த கட்டுரைகளில் கண்டோம். முழு நிறைவுக்கு எடுத்துக் காட்டாய்ச் சீன ஞானி லாவோ ட்சேவின் கவிதை ஒன்றையும் கண்டோம். புறத் தற்சார்பு என்பது சூழல் சுவட்டைக் குறைக்கும் எளிமையான வாழ்முறையால் அமையினும், அகத் தற்சார்பு என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்ப்பொருள் காணும் தன்னாட்சியில்தான் அமையும் என்றும் கண்டோம். தற்சார்பு அடையத் தேவை, போதும் என்ற மனமே என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். ஆனால் இன்னொரு முக்கியமான அங்கத்தையும் நாம் இங்கு ஆராய வேண்டும். உலகில் 95% பேர் கடவுள் என்று ஒரு சக்தி இருப்பதாக நம்புகின்றனர். அவரவர் பிறப்பின்படியோ, பின் ஏற்பட்ட விருப்பின்படியோ கடவுளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறோம். எனவே தற்சார்பு வாழ்வியல் என்ற கோட்பாடு, ஒவ்வொரு மதத்தாலும் ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதா என்று நாம் ஆராய வேண்டும்.
நான் ஒரு சாட்சி மட்டுமே; எதிலும் சார்பற்றவன். நான் பிறந்த சூழலும், வளர்ப்பும் உருவாக்கிய‌ தாக்கமும், அதனால் உருவான நம்பிக்கைகளையையும் கடந்து அறிவை மட்டுமே பயன்படுத்தப் பழகிக் கொண்டிருக்கும் ஒரு நடுநிலை ஆய்வாளனாக நான் இக்கட்டுரைத் தொடரை எழுதிகிறேன். இதன் ஒரே நோக்கம் திருமூலரைப் போல நான் பெற்ற இன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே. வேறு எந்தப் பரப்புரையும் நோக்கமும் இல்லை. எனக்குத் தெரிந்த இரு மொழிகள் தமிழும், கொஞ்சம் ஆங்கிலமுமே. அவற்றில் நான் படித்த நூல்களும் மிகச் சிலவே. அவற்றுள் என்னை மிகவும் நெகிழ்வித்த நூல் ஏசுநாதரின் சீடர்கள் எழுதிய புதிய ஏற்பாடு (New Testament). என்னைப் பொறுத்தவரை ஏசுநாதர், கடவுள், தேவ தூதன் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளர் - ஞானி - வழிகாட்டி. மிகக் குழப்பமான நேரங்களில் விவிலியத்தின் வரிகள் எனக்கு உறுதுணையாய் இருந்ததுண்டு. விவிலியம் காட்டும் வாழ்முறையைக் கடைப்பிடிக்கத் துவங்கினால் அது தற்சார்பு வாழ்முறையில்தான் முடியும்! எப்படி என்று பார்ப்போம். (பிற மதங்களைப் பின்பற்றுவதால் விவிலியத்தைப் படிக்காதிருப்பது அவரவர்களுக்கு ஒரு விதத்தில் நட்டமே!)
முதலில் ஏசுநாதர் போதனைகளில் மிக முக்கியமானவை எளிமை, நேர்மை, அகிம்சை, அடக்கம், மனித நேயம்,எதிர்காலத்தைப் பற்றிய அச்சமின்மை, பொருளாசைப் படாமை ஆகியவை.
“வானத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, கிடங்குகளில் சேமிப்பதும் இல்லை. ஆனாலும் கடவுள் அவைகளுக்கு உணவளித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவற்றை விட நீங்கள் உயர்ந்தவர்கள் அல்லவா?”
இதை விட எளிமையாக மனித இனத்தின் கவலைகளை யார் நையாட இயலும்? நாகரிகம் என்பது எங்கு துவங்கியது? உற்று நோக்கினால், உணவை மனிதன் கிடங்குகளில் சேமிக்க ஆரம்பிக்கும் போதுதான் நாகரிகம் தோன்ற இயலும். நாளை நமக்கு உணவு இருக்கிறது என்ற திமிரில்தான் நாகரிக மனிதன் இத்தனை அழிவை உருவாக்குகிறான். பசி வந்தால் அனாவசியங்கள் தானாய் விலகி விடும்.
“எனவே நாளை என்பதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்; இன்றைய தீமை இன்றைக்குப் போதும்” என்றும் ” இறந்த காலம் தன் இறந்தவர்களைப் புதைத்துக் கொள்ளட்டும்” என்றும் கூறினார். நிகழ்காலத்தில் வாழ்வது ஏசுவின் போதனைகளுள் முதன்மையானது. இதையே பின்னாளில் பாரதி “சென்றதினி மீளாது மூடரே” என்றும் “ஊனுடலை வருத்தாதீர் உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்” என்றும் கடந்த கால ,எதிர்காலக் கவலைகளைப் புறக்கணிக்கிறான்.
பொருளீட்டுவதைப் பற்றி ஏசுநாதர் என்ன சொல்கிறார்? ” திருடர்கள் புகுந்து திருடும்படியும், கரையானும், துருவும் அரிக்கும்படியும் உங்கள் புதையல்களைச் சேர்க்காதீர்கள். எங்கே உங்கள் சொத்து உள்ளதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்” என்கிறார். மேலும் ” பணத்தின் மேல் உள்ள ஆசையே அனைத்துத் தீமைகளுக்கும் ஆணி வேர்” என்கிறார். (கூர்ந்து கவனிக்க. அவர் பணத்தைச் சாடவில்லை - அதன் மேல் மனிதர்களுக்குள்ள ஆசையைத் தான் சாடுகிறார்.) வேறொரு நேரம் ஒரு பணக்காரன் அவரிடம் வந்து “நான் பத்துக் கட்டளைகளையும் கடைப் பிடிக்கிறேன், தினமும் பிரார்த்தனை செய்கிறேன், நல்லவனாய் வாழ்கிறேன், ஏழைகளுக்குத் தானம் வழங்குகிறேன், எனக்கு தேவ ராச்சியம் கிட்டுமா” என்று கேட்பான். அவர் சிறிது நேரம் அவனைப் பார்த்து விட்டு “உன் சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு வா” என்பார். அவன் மிகுந்த மன உளைச்சலுடன் ” அது என்னால் இயலாதே” என்று போய் விடுவான். அப்போது அவர் ” ஒரு ஒட்டகம் கூட ஊசியின் காதில் நுழைந்து விடும்; ஆனால் ஒரு பணக்காரன் தேவ ராச்சியத்தில் நுழைவது அதை விடக் கடினம்” என்று கூறுவார்.
“எந்த மனிதனுமே இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய இயலாது. எனவே நீங்கள் கடவுளுக்கு வேலை செய்கிறீர்களா, பணத்திற்கு வேலை செய்கிறீர்களா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்” என்பார் வேறு ஒரு கட்டத்தில். சரி குடும்பம் நடத்தப் பொருள் தேவையே என்று கேள்வி எழலாம். அதற்கும் அவர் தெளிவான பதில் கூறுகிறார் “சீசருக்கு உரியதை சீசரிடம் கொடுங்கள்; ஆண்டவனுக்கு உரியதை ஆண்டவனிடம் கொடுங்கள்” - இதன் உட்பொருள் நாம் நம் தேவைகளுக்கு ஏற்ப ஒரு அடிப்படை வருமானத்தை ஈட்டிக் குடும்ப நிர்வாகம் செய்து விட்டுப் பின் நிகழ்வில் வாழ்வது என்பதே.
தோரோ, தான் தனியாய்க் காட்டில், வால்டன் குளக்கரையில் வசிக்கையில் தன்னைப் பார்க்க வரும் கிறுத்துவ நண்பர்களிடம் விவிலியத்தைப் படித்துக் காட்டி “நீங்கள் எல்லாம் ஏன் இதைப் பின்பற்றுவதில்லை” என்று கேட்பானாம். இந்த உண்மைகளை யாரும் சந்திக்கத் தயாரில்லை என்று அவன் எழுதுவான்.
அன்பைப் பற்றி ஏசுநாதர் என்ன கூறுகிறார்? ” ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு” ,” ஒருவன் உன் சால்வையைப் பிடுங்கிக் கொண்டால் அவனுக்கு உன் சட்டையையும் கழற்றிக் கொடு” , “உன் அண்டை வீட்டுக் காரனை நேசி” . ஒட்டு மொத்த மனித இனத்தை நேசிப்பது மிகச் சுலபமான செயல்; ஆனால் பக்கத்து வீட்டுக் காரனை நேசிப்பது கடினமான செயல்! இதைக் கடைப் பிடித்தால் வரப்புச் சண்டைகள் முதல் வியட்னாம், இந்தியா-பாகிஸ்தான், ஈரான்-ஈராக், ருசிய-அமெரிக்கச் சண்டைகள் ஏதும் வருமா? தவறிழைத்தவனை மன்னிக்கும் பெருந்தன்மை கிறுத்துவுக்கே உரியது. தன்னைச் சிலுவையில் அறையும்போது “என் தந்தையே இவர்களை மன்னித்து விடுங்கள்; தாம் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் கொலைகாரர்களை மன்னிக்கிறார்.
அடக்கத்தைப் பற்றி அவர் “தன்னைத் தான் தாழ்த்திக் கொள்பவன் உயர்வான்; தன்னைத் தான் உயர்த்திக் கொள்பவன் தாழ்வான்” என்கிறார்.
திரைகடல் ஓடித் திரவியம் தேடும் இக்காலத்தில், ஏசுநாதரின் போதனைகள் யாராலுமே கடைப்பிடிக்க இயலாதவை. (எல்லா மதங்களிலும் இதே கதைதான் என்று பின் வரும் கட்டுரைகளில் காண்போம் !) .ஆனாலும் ஒரு உண்மைக் கிறுத்தவன், ஏசுநாதர் சொன்னது போல் இருந்தால் எப்படி இருப்பான்? பணத்தாசை இன்றி, எதிர்காலத்தைப் பற்றிய கவலை இன்றி, மனித நேயத்துடன், எல்லோரையும் மதித்தும், மன்னிக்கும் பாங்குடனும், எளிமையான‌ வாழ்முறையுடனும், அடக்கத்துடனும் இருப்பான். வன்முறையை விரும்பாத அவன், தன் எளிய தேவைகள் நிறைவு பெற்றதும் மிகுந்த திருப்தியுடன் இறைவனைப் புகழ்ந்து கொண்டு , தன் வாழ்வுக்கு நன்றி சொல்லி இருப்பான் - பிறரிடம் ஏதும் சாராத வாழ்முறை தற்சார்பாக இருக்கும். அவன் சூழல் சுவடும் மிகக் குறைவாக இருக்கும்!
தற்சார்பு வாழ்வியல் என்று நாம் கூறுவது புதிய மொந்தையில் பழைய கள்தான். எல்லோரும் பல விதங்களில் பலவாறாய்க் கூறியதை நாம் வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்குகிறோம் அவ்வளவே. காந்தி கூறியது போல் “நான் சொல்வதில் எதுவும் புதிது அல்ல; சத்தியமும், அகிம்சையும் மலைகளைப் போல் பழமையானவை”. இனி வரும் கட்டுரைகளில் வேறு யார்,யார் எந்த மொழிகளில் கூறியிருக்கிறார்கள் என்று நோக்குவோம்!

Courtesy:http://www.kaani.org

No comments:

Post a Comment