November 18, 2017

தற்சார்பு வாழ்வியல் - 7

தற்சார்பு வாழ்வியலின் பல அங்கங்களைப் பற்றி நாம் இயன்றவரை ஆராய்ந்து வருகிறோம். அதனால் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய நன்மைகளைப் பார்த்தோம். சமூகத்தினால் தனக்கு எதுவும் தேவைப்படாத தனிமனிதர்கள், சமூக வாழ்வில் இருப்பதே ஒரு தியாகமும், சேவையும்தான் என்றும் பார்த்தோம். தற்சார்பு வாழ்வியலுக்குத் தேவையான மனநிலை எது என்று இக்கட்டுரையில் ஆராய்வோம்.


நான் சுமார் 25 வயது இளைஞ‌னாய் இருக்கும்போது என் நண்பனின் தந்தை “வாழ்வில் உன் குறிக்கோள் என்ன?” என்று கேட்டார். நான் அதிகம் யோசிக்கத் தேவையின்றி “சும்மா இருப்பதுதான் என் வாழ்வின் லட்சியம்” என்று உடனே கூறினேன். அதை அவர் பெரியதொரு நகைச்சுவையாக ரசித்தார். பின் வெகு நேரம் எனக்கு உலக வாழ்வைப் பற்றியும், பணம் எவ்வாறு வாழ்வில் முக்கியம் என்றும், வெற்றிதான் லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் போதித்தார். 22 வயதிலேயே தோரோவைப் படித்துக் கெட்டு விட்ட எனக்கு அந்தப் போதனை அதிகம் தாக்கம் ஏற்படுத்தவில்லை.
ஆனால் பின்னர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட பின் பணம் என்பது பல விதங்களில் அவசியமான ஒன்று என்று உணர்ந்து, பணத்தைத் துறந்து இல்லறம் நடத்துவது மிகக் கடினம் என்று உணர்ந்து, என் நேரத்தையும், சுதந்திரத்தையும், வாழ்வின் பெரும்பகுதியையும் அடமானம் வைத்துப் பொருள் ஈட்டினேன். ஓரளவு இல்வாழ்க்கையின் கடமைகளைக், கடன்களைத் தீர்க்க இயன்ற‌தால் என் அடமானத்தின் பெரும் பகுதி மீட்கப் பட்டுவிட்டது. ஓய்ந்து வீழும் முன்னரே ஓய்வு நேரம் அதிகமாய் உள்ள வாழ்முறையும் கிட்டியுள்ளது.
என்னுடன் வேலை செய்த பலரும் என் தற்போதைய வாழ்முறையைப் பார்த்துப் பொறாமைப் படுகின்றனர். ஆனால் என்னை விட அவர்கள் அனைவரும் பணம் அதிகம் உள்ளவர்கள்; நானோ பணம் குறைவாயினும் பெரிய செல்வந்தன்! யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத சுதந்திரமும், மன அழுத்தம் அதிகமில்லா சுய தொழிலும், கடனில்லாத வீடும், நிறைய ஓய்வு நேரமும், குழந்தைகளுடனும், மனைவியுடனும் செலவழிக்க நேரமும், (பெருமளவு) நஞ்சில்லா உணவும் உள்ளவன் செல்வந்தனா அல்லது வங்கி நிறையப் பணமும், விலை உயர்ந்த காரும், சென்னையில் கோடி ரூபாய் பெருமானமுள்ள புறாக்கூண்டு போன்ற வீடும், நச்சுக் காற்றும், நீரும், நஞ்சுள்ள பாக்கெட் உணவும், கடிகாரத்தின் இரு முட்களுக்குள் சிக்கித் திணரும் வாழ்முறையும் உள்ளவன் செல்வந்தனா?
மிகத் தெளிவாய் விடை எடுபடும் இந்தக் கேள்விக்கு யாரும் “நகர வாழ்க்கையே சிறந்தது” என்று சொல்ல முடியாது. ஆனாலும் நாம் அனைவரும் அதை நோக்கியே செல்கிறோம். கிராம மிராசுதாராய் இருந்தவர்களின் அடுத்த தலைமுறை சென்னை, மும்பை என்று தொழில்நோக்கிச் சென்று விட்டது. அதன் பின் வரும் அவருடைய சந்ததியினர் அமெரிக்கா, ஐரோப்பா என்று தொழில்நோக்கிச் சென்று விடுகின்றனர். வளர்ச்சி என்று நாம் கூறுவதும் இதைத்தான். முன்னேற்றம் என்று நாம் கருதுவதும் இதைத்தான். கிராமங்கள் முதியோர் இல்லங்கள் ஆகி விட்டன என்று வருந்தும் சிந்தனையாளர்கள், இனி நக‌ரங்களும் முதியோர் இல்லங்கள் ஆகிவிடும் ஆபத்து இருப்பதை மறுக்க இயலாது. இச் சிந்தனையின் அடித்தளத்தில் உள்ள மனவியல் காரணங்களை நாம் கூர்ந்து அறிந்து கொள்வது தற்சார்பு வாழ்வியலுக்கு மிக இன்றியமையாதது. உற்றுப் பார்த்தால் நாம் வாழ்வாதாரங்களைத் தேடிச் செல்லவில்லை என்பது புலனாகும். கிராமத்திலோ, சிற்றூர்களிலோ பள்ளி ஆசிரியராகவோ, மளிகைக் கடைக்கார‌ர் ஆகவோ தொழில் புரிபவர்கள் கூட மிக நல்ல வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். சிற்றூர்களில் உள்ள சிறு தொழில் அதிபர்கள் பலருக்கு வேலையும் கொடுக்கிறார்கள். தங்கள் உடனடி சமூகத்தில் நல்ல மரியாதையுடன் இருக்கிறார்கள்.
பின் நாம் எதைத் தேடி ஓடுகிறோம்? என் நண்பனின் தந்தை சொன்னதுபோல் வெற்றியைத் தேடி ஓடுகிறோம். ஆனால் எது வெற்றி என்பது யாருக்கும் தெரியவில்லை. புகழ் அடைந்தால் வெற்றியாகுமா? பணம் இருந்தால் வெற்றியாகுமா? அல்லது அலெக்சாண்டர், ராஜராஜன் போன்று அகிலத்தை ஆளும் தீராத ஆளுமைப் பசி வெற்றியாகுமா? ஒரு கடுமையான இலக்கை நோக்கிப் பயணிப்பதும், அதற்குப் பாடுபடுவதும், அதற்கான முயற்சியும், அதில் வரும் வெற்றி, தோல்விகளும் நம் மன வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் மிக நன்று. எதிர்ப்பே இல்லாத வாழ்வில் துயரங்கள் இல்லையெனினும், வளர்ச்சியும் குறைந்து விடும். ஆனால் இலக்கில்தான் நமக்குத் தெளிவு இல்லாதிருக்கிறது. “ஆராயப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது” (the unexamined life is not worth living) என்று கிரேக்க ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ளார். ஆராய்ந்தால் நம் எல்லோருடைய வாழ்வும் full of sound and fury signifying nothing என்று ஷேக்ஸ்பியர் சொன்னது போல் வெறும் புகை மண்டலமாய் ஒன்றும் சரக்கின்றிப் பிசுபிசுத்து விடும். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்றார் பட்டினத்தார்.
ஒரு தெளிந்த இலக்கை நோக்கிப் பயணிப்பது வாழ்வைச் செறிவுள்ளதாக்கும். ஒரு தெளிந்த இலக்காகவும், பெருமளவு அர்த்தமுள்ள வாழ்வைத் தருவதாகவும் தற்சார்பு வாழ்வியல் இருக்கிறது. எனவே எதுவென்று தெரியாத‌ வெற்றியைத் தேடுவதை விட, அன்பும் அறனும் நிறைந்த இல்வாழ்க்கையை இலக்காகக் கொள்வது நல்லது. புத்தர் அடிக்கடி நடுப்பாதை (middle path) என்று ஒன்றைக் கூறுவார். எங்கெல்லாம் குழப்பம் நேருகிறதோ அங்கு ஒரு நடுப்பாதையைக் கடைப் பிடிப்பது நன்று. அதாவது ஒரேயடியாகப் பணத்தாசை பிடித்த கருமியாகவும் இல்லாமல், பணத்தை முற்றும் துறந்த முனிவனாகவும் இல்லாமல், எனக்கிது தேவை, இது போதும் என்ற தெளிவுடன் இல்லறம் நடத்துவது ஒரு நல்ல நடுப்பாதை.
'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்ற பழமொழியின் பொருள் இதுதான். பொன்செய்ய ரசவாத வித்தையைத் தேடிப் பலரும் நெஞ்சு புண் ஆகி அலைகையில், உண்மையில் பொன் செய்யும் ரசவாதம் என்பது போதும் என்னும் மனப் பக்குவம்தான். அன்பும், அறனும் வேண்டுமாயின் பேராசை கூடாது. திருப்தி என்று சொல்லப்படும் மன‌நிறைவு தேவை. உண்மையான செல்வந்தன் தன் தேவைக்கு மேல் பணம் இருப்பவன் தான். தேவைகள் குறைந்து போதும் என்று வரையறுத்தவனிடம் சேரும் பணம், வள்ளுவர் சொன்னது போல்
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
என்று எல்லோருக்கும் பயன்படும்.
(இங்கு போதும் என்ற சிந்தனையைப் பேரறிவு என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் கவனிக்கவும்)
ஆனால் எப்படிப் போதும் என்று சொல்வது? எளிமையான தேவைகளுடன் நிறுத்திக் கொண்டால் அவற்றை எளிமையான ஒரு தொழிலால் பூர்த்தி செய்து விடலாம். “யாதானும் தொழில் புரிவோம், யாவும் அவள் தொழிலாம்” என்று நம் மீசைக்கவி சொன்னது போல் குடும்ப நிர்வாகத்துக்குத் தேவையான நிதியை எளிதாய் நிறைவு செய்யலாம். நிறைவு என்பது தற்சார்புக்கு இன்றியமையாதது. ஆழ்ந்த நிம்மதியும், உடல் - மன ஆரோக்கியமும், அன்பும், எல்லாம் இந்த நிறைவால் கிட்டிவிடும். நிறைவு இல்லையேல் என்ன கிடைத்தாலும் பற்றாக்குறைதான். நிறைவு என்பது ஒரு மனநிலைதான் - அது புறப்பொருட்களில் இல்லவே இல்லை. பிறர் நம்மை ஏளனம் செய்வார்களே, கௌரவம் குறைந்து விடுமே என்றெல்லாம் இல்லாத பூதங்களுக்கு அஞ்சினோமானால் நாம் தற்சார்பு இழந்து, பிறர் கருத்தைச் சார்ந்து, காற்றில் பட்ட‌ இலவ‌ம் பஞ்சு போல் அங்கும் இங்கும் அலைய வேண்டி வரும்.
எளிதாய்ச் சொல்ல முடிந்தாலும், இது நடைமுறையில் மிக மிகக் கடினமானது. மற்றவர்களின் நகைப்புக்கு இடமாவதை யாரும் துணிவதில்லை. நம்மை விட வலிதானவர்களைப் பார்த்துச் சற்றுப் பொறாமைப் படாதவர்களும் மிகக் குறைவே. எனவேதான் முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நாம் மந்தையுடன் சென்று, முண்டியடித்து மந்தையில் முன்வருவதை எப்போதும் விழைகிறோம். ஃபாஷன், ட்ரெண்ட் என்ற பெயரில் கூட்டமாய்ப் போவதை நியாயப் படுத்துகிறோம். தற்சார்பான வாழ்வியல் என்பது உலகியலுக்குப் பல சமயங்களில் எதிரானது. எனவே அப்பாதையில் செல்ல ஒரு துணிச்சல் வேண்டும். எனினும் எளிதானவற்றை மட்டும் செய்து கொண்டிருந்தோமானால் நாம் என்றும் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.
இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கையில், தற்சார்பு வாழ்வியல் என்பது மிகுந்த அர்த்தமுள்ள ஒரு வாழ்முறை. இதற்குத் தேவை நிறைவு, பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையின்மை, ஓரளவு துணிச்சல் ஆகியவை. ஆனால் இதனால் கிடைக்கும் விடுதலையும், மனத் தெளிவும் எல்லாக் கடின‌ங்களையும் தூசி ஆக்கி விடும். இறுதியாக திருப்தியைப் பற்றிய ஒரு கவிதையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
தன்னிறைவ

சிறிய நாடு, சிலவே மக்கள்
போர்வாள் பலவாம், பயன்பாடு இலவாம்
இறப்பைப் பெரிதாய் இருப்போர் மதித்துப்

பிறந்த இடத்தின் அருகில் இருப்போம்
படகும், ரதமும் பலவாய் இருந்தும்
பயணம் கிளம்பத் தேவை அரிதாம்
வேலும் வாளும் வேண்டிய இருந்தும்
வெளியில் எடுக்கத் தேவை இல்லை
இனிய உணவும், எளிய உடையும்
இருக்கும் இடத்திற் பெருமையும் நிறைவும்
பழகிய வாழ்வு பழகிய முறையுடன்
நிதப்படிப் பணியில் நிம்மதி காண்போம்
அண்டை நாடு கூப்பிடு தொலைவில்
அவரின் சேவல் நம்மை எழுப்பினும்
நம்முடை நாய்குரை ஒலிய‌வர் கேட்கினும்
ஒருவரை ஒருவர் காணா திருந்து
விருந்து கலந்திட வேலை இன்றி
நிறைவுடன் வாழ்ந்து நிறைவுடன் சாவோம்!
(2600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் “லாவொட்ஸே” என்பவரால் எழுதப்பட்ட “தாவோ தே ஜிங்” என்ற நூலின் 80வது பாடலின் தமிழ்வடிவம். )

Courtesy:http://www.kaani.org

No comments:

Post a Comment