November 18, 2017

தற்சார்பு வாழ்வியல் - 5

புரிதலும் புரட்சியும் - சாட்சி

ஜனநாயகம் என்று அழைக்கப்படும் மக்களாட்சி என்பது மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் ஒரு வகைத் தன்னாட்சி என்ற மாயை உலகெங்கும் பரப்பப்பட்டுள்ளது. இத் தொடர் பரப்புரையின் விளைவால் உலகின் பெரும் பகுதிகளில் மாற்று ஆட்சிகளான‌ மன்னராட்சியும், பொதுவுடைமையும் பெரிதும் வலுவிழந்து விட்டன. உண்மையில் மக்களாட்சியில் நாம் நம்மை ஆள்வது இல்லை - நம்மை ஆளும் அதிகாரத்தைச் சிலரிடம் கொடுக்கிறோம் அவ்வளவே. அதில் தவறு செய்துவிட்டோமானால் திருத்திக் கொள்ளப் பல ஆண்டுகள் கழித்தே வாய்ப்புக் கிடைக்கிறது.இம்முறை தோற்றுக் கொண்டிருப்பதற்கான காரணம் நாம் தேர்ந்தெடுக்கக் கொடுக்கப்படும் தெரிவுகள்/விருப்பங்கள் எதுவுமே நமக்கு விருப்பமில்லாது இருப்பதுதான்.
இரண்டாயித்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் ஐந்து வகையான ஆட்சி முறைகளை வரிசையிட்டார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ:
மன்னராட்சி - Aristocracy
அறிஞனான ஒரு அரசன் ஆள்வது. (இந்திய வ‌ரலாற்றில் அதிகமாய்க் காணப்பட்ட ஆட்சி).
ராணுவ ஆட்சி - Timocracy
வீரத்தையும், பெருமையையும் நாட்டின் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட, படை வலிமையால் ஆன ஆட்சி (தாலிபான் அரசு போல்)
செல்வந்தர் ஆட்சி - Oligarchy
நிலக்கிழார்கள் குறுநில மன்னர்போல் ஆள்வது. செல்வந்தர்களுக்கு, வறியவர்கள் கட்டுப்பட்டு நடப்பது. எல்ல அரசியல் முடிவுகளும் பணமும், பலமும் படைத்த செல்வந்தர்களால் எடுக்கப்படுவது. (இதுவும் இந்தியாவில் ஜமீந்தார்/ பாளையக்காரர்/ நாட்டாமை முறையில் போன்ற பல வடிவங்களில் அமலில் இருந்த ஒன்று. பேரரசனுக்குக் கப்பம் கட்டி விட்டு சிற்றரசர்கள் தன்னிச்சையாய் ஆள்வது போன்று.)
மக்களாட்சி - Democracy
தங்களை ஆள்பவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது. இம்முறை இந்திய வர‌லாற்றில் இருந்திருக்கிறது. தமிழகத்தில் சோழர் ஆட்சியில் குடவோலை முறையில் உள்ளூர் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்ததும், தற்போதையா பீகாராய் இருக்கும் வைசாலி என்னும் நகரில் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் அரசைத் தேர்ந்தெடுத்ததும் குறிப்புகளில் உள்ளன. எனினும் மன்னராட்சியே இந்தியாவில் மிகப்பெரும் பகுதிகளில் நடைபெற்றது என்பதை மறுக்க இயலாது.
சர்வாதிகாரம் எனப்படும் கொடுங்கோல் ஆட்சி - Tyranny
இது என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். பேய் அரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்று மகாகவி பாடியது இதுதான் - இது பொதுவுடைமை, மன்னராட்சி, மக்களாட்சி என்று என்ன‌ போர்வை போர்த்தியிருந்தாலும், சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. வறியவரை, வலியவர் சுரண்டும் முறைமை இது. இன்று உலகில் கிட்டத் தட்ட எல்லா நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது!
நல்லாட்சி எதுவென்று ஆராயப் புறப்பட்ட பிளேட்டோ, ராணுவ ஆட்சியும், செல்வந்தர் ஆட்சியும் தவறென்று உடனே ஒதுக்கி விட்டார். எஞ்சிய மக்களாட்சி, மன்னராட்சி மற்றும் கொடுங்கோலாட்சியில், மக்களாட்சி தவறான ஒரு ஆட்சி முறை என்று அன்றே எச்சரித்தார். மக்களாட்சியின் விளைவு பேராசையின் பெருக்கமாக இருக்குமென்றும், இது கொடுங்கோல் ஆட்சியில் முடியும் என்றும், மக்களாட்சி வெல்ல வேண்டுமானால் மக்கள் எல்லோரும் தெளிந்த அறிவு படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார். உலகெங்கும் இப்போதைய அர‌சியலையும், பொருளாதாரத்தையும் பார்க்கையில் அவர் சொன்னது மெய்யென்றே தோன்றுகிறது
மக்களாட்சிக்கும் தன்னாட்சிக்கும் வித்திட்ட பிரெஞ்சு, ருசிய, சீனப் புரட்சிகளும், அமெரிக்கா பிரிட்டனுக்கு எதிராய்க் கிளர்ந்து எழுந்த அமெரிக்கப் புரட்சிப் போரும், பின்னர் நடந்த இந்திய சுதந்திரப் போராட்டமும் எல்லாம் ஆட்சி மாற்றத்திற்குத் தான் வழி வகுத்தன - உண்மையான மக்கள் விடுதலைக்கு அல்ல. வரலாற்றைப் புரட்டினால் எல்லாப் புரட்சிகளும் தாங்கள் எதற்காகத் துவங்கப் பட்டனவோ அவ்விலக்கை எட்டவே இல்லை. நம் இந்தியாவில் காந்தி தோற்கவில்லை - அவரைப் பின்பற்றத் தவறிய நம் சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்கள்தான் தோற்று விட்டனர். உண்மையான மக்களாட்சியில் புரட்சிக்குத் தேவையே இல்லை. எனினும் இப்போதுள்ள அரசியல், சமூகச் சூழலில் மக்களை மாக்களாக மாற்றும் ஆட்சிதான் நடைபெறுகிறது.
மன்னராட்சிக்குத் திரும்ப இயலாத‌ இந்நிலையில், ஒரு மாற்றமும், மருந்தும் தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நிலைமை மிகவும் புரையோடிப் போய் ஒரு புற்றுநோயைப் போல் இருக்கிறது. அநீதி எதிர்ப்பு என்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் கடமை. ஆனால் எந்த வழியில் எதிர்ப்பது? புரட்சி இயக்கங்கள் தொடங்கலாம்; ஆனால் அவையும் மனித இயல்பால் மாற்று ஆட்சியை ஏற்படுத்துமேயன்றி மாற்று நிலைமையை ஏற்படுத்தாது. பின் என்னதான் செய்வது?
எல்லோராலும் உடனடியாக அவரவர் இருக்கும் இடத்தில், நிலையில் செய்யக் கூடிய ஒன்று தனி மனிதன் தன்னைத் தானே ஆண்டு கொள்ளலாம். அதற்கு மற்ற யாரையும் எதிர்நோக்க வேண்டியது இல்லை. பூரண சுயராஜ்ஜியம் என்று காந்தி , குமரப்பாவினால் வருணிக்கப்பட்ட இந்தத் தன்னாட்சி என்பது ஒரு வகை மௌனப் புரட்சி. உண்மையான‌ தன்னாட்சி என்பது என்ன? இது சாத்தியமா? சாத்தியமென்றால் எப்படி? இதன் விளைவுகள் எப்படி இருக்கும்? இதற்கான தடைகள் என்ன? வரும் இதழ்களில் ஆராய்வோம்.
புரிதலும், புரிதலாற் பிறக்கும் தெளிந்த செயலுமே உண்மைப் புரட்சி

Courtesy:http://www.kaani.org

No comments:

Post a Comment