November 18, 2017

தற்சார்பு வாழ்வியல் - 4

ஒரு காட்டின் கதை - சாட்சி

முன்னொரு காலத்தில் திருப்தி என்றொரு காடு இருந்தது. அதில் நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், சிங்கம், புலி, ஓநாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளும், மான், முயல், மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்குகளும், ஓடை, ஆறு, நீர் வீழ்ச்சி, மரங்கள் அவற்றில் மீன்கள், பலவகைப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மற்றும் பல்லி, பூரான், பாம்பு போன்ற ஊர்வன எல்லாம் ஒருமித்து வாழ்ந்தன. ஒன்றுக்கொன்று உணவாகவும், எதிரியாகவும் இருப்பினும், அவற்றின் வாழ்வாதாரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இனமும் அளவின்றிப் பெருகி விடாதபடி, ஒரு வகை சுழற்சியும், சமன்செய்யும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருந்தன. இதனைக் கதை ஆசிரியரான நாம் 'இயற்கை' என்று பெயரிடலாம்.
அமைதியும், நிறைவும் கொண்ட இந்தத் 'திருப்தி' என்ற காட்டில் ஒரு நாள் ஒரு வித்தியாசமான நான்கு சக்கர வண்டி வந்தது. ஓசையும், புகையும் எழுப்பி வந்த அதில் இருந்து நான்கைந்து இரண்டு கால் பிராணிகள் இறங்கின. தங்கள் தோலிற்கு மேல் பல வண்ணங்களில் ஆடை அணிந்திருந்த அவர்கள் காலணிகள் , தலையணிகள், கண்ணுக்கு கருப்பு உறை என்றெல்லாம் அணிந்து மிக நேர்த்தியாகவும், துளியும் மேலே அழுக்கின்றியும் பளபளவென மிளிர்ந்த வண்ணம் நடந்து வந்தனர். நேரே காட்டின் அரசனான சிங்கத்திடம் போய் “நாங்கள் மனிதர்கள். உங்கள் காட்டை மேம்படுத்தி நாகரிகமாக்குவதற்காக வந்துள்ளோம். அரசனாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தந்தால் நாங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகிலேயே மிக முன்னேறிய காடாக இதை மாற்றி விடுவோம்” என்றனர்.
இத்தகைய மிருகங்களைக் கண்டும் இது போன்ற வார்த்தைகளைக் கேட்டும் அறியாத சிங்கம், “நாங்கள் மிகுந்த நிறைவுடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பசிக்கும் பொழுது உணவும், குடிக்க நீரும், மனைவி குழந்தைகளுடன் இனிமையான வாழ்வும், நிறைய ஓய்வும், விளையாட்டுமாய் உள்ள எங்கள் வாழ்வை நீங்கள் எப்படி இதைவிட‌ முன்னேற்றுவீர்கள் ? ” என்று கேட்டது.
வளர்ச்சி, முன்னேற்றம், வசதி மற்றும் மதிப்பு
இதற்கு ஒரு அழகிய பெண், சிங்கத்திடம் வந்து “ஐயா, அரசரே. என் பெயர் நவீனம். நான் போட்டிருக்கும் இக்கண்ணுறையின் பெயர் கறுப்புக் கண்ணாடி. இதை அணிந்தால் வெய்யிலே தெரியாது நீங்கள் அணிந்து பாருங்கள்” என்று சிங்கத்தின் மீது விழாத குறையாக அதற்குக் கண்ணாடி போட்டு விட்டாள். அதை அணிந்த சிங்கமும் “ஆம் குளிர்ச்சியாக உள்ளதே” என்று வியந்தது. அந்த மனிதப் பெண்ணின் மேல் வீசிய ஒருவித இனிய வாடையும் அரசனைக் கிறங்க அடித்தது. அப்போது கர்ஜனை செய்த அரசியின் அருகில் ஒரு உயரமான வாலிபன் சென்று , 'அரசி நீங்கள் இந்த நறுமணத் தைலத்தைப் பூசிப் பாருங்கள். உங்கள் அரசன் ஆயுளுக்கும் உங்கள் பின் அலைவார்' என்று அரசியின் மேல் ஒரு திரவியத்தைத் தெளித்தான். அரசியும் கிறங்கினாள். என் பெயர் வாணிபம் என்று அந்த இளைஞன் இனிய குரலில், பணிவுடன் அரசியிடம் அறிமுகம் செய்து கொண்டான்.
அப்பொழுது ஒரு வயதான பெரியவர், நரைத்த தலையுடன் தன்னை 'நவீன பொருளாதாரம்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அரசனைப் பார்த்து: “நீங்கள் அரசன் என்கிறீர்கள்; உங்களுக்கும் பிற சிங்கங்களுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் வலிமையைப் பறைசாற்ற நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களுக்குச் சேவகர்கள் உண்டா? மாட மாளிகைகள், அரண்மனை எதுவும் உண்டா? நாளை உணவுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? தினம் தினம் வேட்டையாடித் தின்பதுவும் ஒரு வாழ்க்கையா? உங்கள் குடும்பத் தேவைக்கான உணவை நீங்களே வேட்டையாடுகிறீர்களே, இது காட்டுமிராண்டித்தன்மல்லவா? எப்போதும் மான், முயல் கறி தானா? நாகரீகம் என்றால் வண்ண,வண்ண உடை அணிவது, பல சுவைகளில் விதம்,விதமாய் உண்பது, உழைக்காமல் சேவகர்களை வைத்து உணவு உற்பத்தி செய்வது, பணியாட்கள் பலரை ஏவல் செய்வது, பிறர் நம்மைப் பார்த்துப் பொறாமைப்பட வைப்பது, நாலு பேர் நடுவில் கௌரவமாய், மரியாதையாய் இருப்பது, இது போன்றதுதான். அரசனான நீங்கள் இனிமேலும் இப்படி இல்லாமல் எங்களைப் போல் நாகரீகமும், முன்னேற்றமும் அடையுங்கள் - இப்படித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது; நீங்களும் காலத்துக்கு ஏற்றபடி மாறி விடுங்கள்” என்று பலவாறாகப் போதித்தார். அவரின் குரல் வளமும், அழுத்தமும், தன்னம்பிக்கையும் சிங்க ராஜனைக் குழப்பத்தில் ஆழ்த்தின. “சரி என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள் ?” என்றார் அரசன். “அப்படிக் கேளுங்கள். முதலில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்புத் தேவை. இருக்க நல்ல இட வசதியுடன் வீடு தேவை. மண்ணிலிருந்து விளையும் புல்லைத் தின்பதும், அப்புல்லைத் தின்னும்
விலங்குகளை நீங்கள் தின்பதுவும் எல்லாம் மிக அநாகரீகமான செயல். முதலில் நீங்கள் எங்களை நிறையக் கடை திறக்க அனுமதியுங்கள். பணம் என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொடுக்கிறேன். இதுதான் ரூபாய். இதைக் கொண்டு போய் கடையில் கொடுத்தால் உங்கள் தேவைக்கான உணவுப் பொருட்களும், வேறு வசதிகளும், வேலையாட்களும் எல்லாம் கிடைப்பார்கள். நீங்கள் பாடுபடவே வேண்டாம். வளர்ச்சி என்பதும் முன்னேற்றம் என்பதும் நிறையப் பணம் சேர்ப்பதுதான். மற்றவை எல்லாம் வீண். ” - என்றார் திருவாளர் பொருளாதாரம்.
“சரி பணம் எங்களுக்கு எப்படிக் கிடைக்கும் ?” என்ற சிங்கத்தின் கேள்விக்கு, வாணிபம் “எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்கள் ஆட்சியிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாங்கள் வாங்கிக் கொள்வோம். உதாரணமாக ஒரு மானை வேட்டையாடி நீங்களே தின்னாமல் எங்களிடம் கொடுத்தால் நூறு ரூபாய் கொடுப்போம். அந்தப் பணத்தைக் கொண்டு போய் சந்தையில் உஙளுக்குப் பிடித்தபடி வேக வைத்த மானோ, முயலோ, இல்லை கோழிக்கறியோ எது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தை வெட்டித் தந்தீர்களானால் 500 ருபாய் தருவோம். உங்களால் மரம் வெட்ட இயலாதென்றால் நீங்கள் அதற்கு யானைகளை அடிமை கொள்ளலாம். பழம் பறிக்கக் குரங்குகளையும், மீன் பிடித்து எங்களிடம் விற்க நாரை, கொக்கு, மீன்கொத்தி போன்ற பறவைகளையும் நீங்கள் பணிக்கு அமர்த்தலாம். அவையும் வெட்டியாய்த் திரியாமல் ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழலாம்; உங்கள் குடிமக்களில் ஒருவர் கூடப் பசி என்றால் என்னவென்றே தெரியாது இருப்பார்கள். எல்லாமே கடைத்தெருவில் கிடைத்து விடும். நிறையக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்” என்று விளக்கமளித்தார்.
இப்படியாக மேம்படுத்துதலும், வளர்ச்சியும், மனிதனும் குடி புகுந்த காடு ஒரு முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருந்தது? அதன் கதை என்னவாயிற்று? காலச்சுவட்டைப் புரட்டி அருகில் சென்று பார்ப்போம்.
வளர்ச்சியின் வெற்றி
சிங்கங்கள் எல்லாம் மான்களை வேட்டையாடி ஆடிப் பணமாய் மாற்றிச் சேர்த்தன. புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் வேட்டையாடும் நிலப்பரப்பில் கடுமையான வன்மை ஏற்பட்டு அடிக்கடி ஒன்றொடொன்று போர் புரிந்தன. யானைகள் எப்பொழுதும் சங்கிலிகளுடன் காட்டில் மரங்களைச் சாய்த்து இழுத்து வந்து கொண்டிருந்தன. மான்களும், மாடுகளும், வரிக்குதிரைகளும் தங்கள் பாதுகாப்பிற்கென ஓநாய்களுக்குச் சம்பளம் கொடுத்துக் காவலாளிகளாக்கின. அவை தம் இனத்தைப் பாதுகாப்பதற்குப் பணம் தேவையென்பதால் பால் பண்ணை வைத்து மனிதனிடம் அதைக் காசாக்கின. அவற்றின் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாத சவலைக்குழந்தைகளானாலும், உயிரோடும் பாதுகாப்போடும் இருக்க முடிந்ததை நினைத்து மகிழ்ந்தன. பழம் தூக்கித் தூக்கி முதுகு வளைந்து விட்ட குரங்குகள் தாங்கள் பறித்த பழங்கள் விலை அதிகமானதால், மரத்தின் வேர்களில் உள்ள கிழங்குகளைச் சாப்பிட்டு வாழப் பழகி விட்டன.
புத்திசாலித்தனமும், த‌ந்திரமும் நிறைந்த குள்ளநரிகள் எல்லாம், யானைகளுக்குப் புண்ணுக்கு மருந்து தரும் மருத்துவர் தொழில், மீன்கொத்திகளுக்கும், நாரைகளுக்கும் மீன்பிடிக்கக் கற்றுத் தரும் பள்ளி- கல்லூரி நடத்துதல், மான்களுக்கும், மாடுகளுக்கும் ஆயுள் காப்பீடு, சிங்கம், புலிகளுக்கு ஆலோசகர் தொழில் போன்ற நூதனமான, யாரும் நுழைய முடியாத தொழில்கள் அமைத்து நிறையப் பணம் சேர்த்தன. அழகிய மயில்கள், விளம்பரங்களில் நடிப்பதும், மனிதர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதுமாகத் தங்கள் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தன.
தந்திரமோ, பேச்சுத் திறமையோ இல்லாத கழுதை, எருமை, ஆடு போன்ற நேர்மையான மிருகங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டு சமூக ஏணியின் அடித்தட்டில் வைக்கப்பட்டன. ஏய்க்கும் தொழில்களே மரியாதைக்குரியனவாக உயர்வு பெற்றன. காட்டில் செழிப்பைக் கண்ட மனிதர்கள், பெரும் அளவில் காட்டிற்குப் பெய‌ர்ந்து, மேலும் பணம் சேர்த்தனர். இதைச் சற்று யோசிக்கத் தெரிந்த கிழக் கழுதைகள் கேள்வி கேட்ட போது, இதுதான் வளர்ச்சி, இதுதான் ஒரே வழி மற்றெல்லாம் பழம்போக்கு என்று பெருமளவில் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப் பட்டன. தொடர்ந்து தொல்லை கொடுத்த கழுதைகளை தேச துரோகக் குற்றங்களுக்காக சிறையில் அடைத்தனர். இதற்காகப் பல சட்ட திருத்தங்கள் போடப்பட்டன.
சில கழுதைகள் தங்கள் பாட்டனார்கள் இதை எதிர்த்து அன்றே எழுதி வைத்ததைப் படித்து விட்டு, எல்லா மிருகங்களிடமும் சென்று “நாமெல்லாம் இப்படி அடிமைப்படப் பிறந்தவர்கள் இல்லை. யானைகள் விலங்கென்றால் என்னவென்றே அறிந்ததில்லை,பறவைகள் பறப்பதற்குப் பிறந்தவை.நேர்மையான சிங்கம் வருடத்தில் 15 முதல் 20 முறைதான் வேட்டையாடும்.உணவைத் தவிர வேறு எதற்கும் வன்முறையே அறியாதவர்கள் நாம். நம் வாழ்வாதாரங்களான நீர், மண், மரம் இவற்றை விலங்குகளான நாம் ஒரு போதும் அழிக்க முற்பட்டதில்லை. பணம் என்பது இல்லாமலே நல்ல வாழ்க்கை வாழ் முடியும், நாமெல்லாம் இந்தக் காட்டை விட்டு அந்த மலையின் பின்புறம் உள்ள முட்கள் நிறைந்த‌ காட்டிற்குச் சென்று விடுவோம். அங்கே மனிதர்களும், வளர்ச்சியும் வராது. நிம்மதியாய் இருப்போம். நம்மை நம்பி விடுதலையை விரும்பி வருபவர்கள் வரட்டும். மற்றவர்களுக்காக நாம் பரிதாபப்படுவோம், பிரார்த்தனை செய்வோம் - ஆனால் நம்மால், நம் ஆற்றலால் இந்தக் காட்டை மீட்க இயலாது. பேராசையும், களவும், காமமும், பொறாமையும் புரையோடி விட்டன. வசதிகள் குறைந்தாலும் ஒரு தற்சார்பான வாழ்வைத் தேடுவதே நல்லது. எனவே வெளியேறுவது ஒரு நல்ல தீர்வு” என்றன. மகாகவி என்ற ஒரு கழுதை “மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்று பாடியது. கேட்டிருந்த வெகுசில மிருகங்கள் தீராத விடுதலை வேட்கை கொண்டன. தன்னம்பிக்கையும், துணிவும் உள்ள சில கழுதைகள் தனித்து வெளியேறின.
மேலும் இருபது வருடங்களுக்குப் பின்
மனிதர்கள் மட்டுமே தனியாகக் கூடி ஒரு நள்ளிரவில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தன. இக்கூட்டத்திற்கு மனித நாட்டிலிருந்து பற்பல பெரிய மனிதர்கள் வந்திருந்தனர். கூட்டத்தைக் கூட்டிய பொருளாதாரம் விளக்கிக் கொண்டிருந்தார்: “கடந்த ஐம்பது வருடங்களில் நாம் இந்தக் காட்டிலிருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைச் சுரண்டி விட்டோம். சாதி, மதம், இனம், நிறம் என்று பற்பல பிரிவினைகளை இவர்களுக்குள் உருவாக்கி இவர்களை ஆண்டோம். மேம்படுத்துதல் என்ற பெயரில் நாம் முடிந்தவரை சுரண்டி விட்டோம், இங்கே சந்தை தேக்க நிலைக்கு வந்து விட்டது. இப்போது இந்தக் காடு வளம் மிகவும் குன்றி விட்டது. கூலி வேலை செய்யும் நம் குடிப்படைகள் மிகவும் நோயுற்று விட்டார்கள். நாம் வெளியேறி வேறு காட்டை நோக்கிப் போக இது மிக நல்ல தருணம்.பேசாமல் இந்த மிருகங்களுக்கு தன்னாட்சி. மக்களாட்சி என்ற புதிய பெருங்காயப் பெட்டிகளைக் காட்டி வெளியேறிவிடுவோம்” என்று பல புள்ளி விவரங்களைக் கூறியது. கூடியிருந்த பல மனிதர் இன நிபுணர்களும் அதை வரவேற்றனர். இந்தச் சுரண்டலுக்குத் திட்டமிட்ட திருவாளர் பொருளாதாரத்திற்கு மனித இனத்தின் மிகப் பெரிய மரியாதையாகக் கருதப்பட்ட நோபல் பரிசு வழங்கப்பட்டது. நம் திருப்தி என்ற காடும் மக்களாட்சி பெற்றது.
[பின் குறிப்பு: இந்தக் காட்டிற்கு திருப்தி என்ற பெயர் கதாசிரியர் வைத்ததுதான். வாசகர்கள் அவரவர் விருப்பப்படி இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, பிரேசில், பெரு, பிலிப்பைன்ஸ் போன்ற பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லா இடத்திலும் கதை ஒன்றுதான்!]

Courtesy:http://www.kaani.org

No comments:

Post a Comment