இடைக்காட்டுச் சித்தர் சங்கப் புலவரான இடைக்காடரினும் வேறானவர்.
இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இவர்
கொங்கணச் சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது.

ஒருசமயம் இவர் பொதிய மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு
மேய்த்துக் கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால்
கேட்க, அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரிக்கவே அவரும் இவரது
அன்பைக் கண்டு மகிழ்ந்து இவருக்கு ஞானத்தை உபதேசித்து விட்டுச்
சென்றாராம். அதனால் ஏழை ஆடு மேய்க்கும் இடையன் மாபெரும்
சித்தரானார்.
தமது சோதிட அறிவால் இன்னும் சிறிது காலத்தில் ஒரு கொடிய பஞ்சம்
வரப்போகிறது என்பதை உணர்ந்தார். முன்னெச்சரிக்கையாகத் தமது
ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய எருக்கிலை போன்றவற்றைத் தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணோடு சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார். எருக்கிலை தின்பதால் உடலில் அரிப்பெடுத்து ஆடுகள் சுவரில் உராயும் போது உதிரும் வரகு தானியங்களை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டுவரப்போகும் பஞ்சத்துக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார். வற்கடம் வந்தது. பஞ்சத்தால் உணவும் நீருமின்றி உயிர்கள் மாண்டன. நாடே ஜன சந்தடியில்லாமல் வெறிச்சோடிக் காட்சியளித்தது. ஆனால், இடைக்காடர் மட்டும் என்றும் போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்திருந்தார்.
நாட்டில் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்து போக இடைக்காடரும்
அவரது ஆடுகளும் மட்டும் பிழைத்திருப்பதைக் கண்ட நவக்கிரகங்கள்
ஆச்சரியமுடன் அந்த இரகசியத்தை அறிந்துகொள்ள இவரிடம் வந்தன.
இடைக்காடருக்கோ ஆனந்தம். நவநாயகர்களும் என்குடிசையை நாடி
வந்துள்ளீர்களே! உங்களை உபசரிக்க எம்மிடம் ஒன்றுமில்லை. ஆயினும்
இந்த ஏழையின் குடிசையில் கிடைக்கும் வரகு ரொட்டியையும், ஆட்டுப்
பாலையும் சாப்பிட்டுச் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று
உபசரித்தார்.
பஞ்ச காலத்திலும் பசிக்கு உணவு தரும் இடைக்காடரைக் கண்டு
மகிழ்ந்த நவ கோள்களும் அந்த விருந்தினைப் புசித்தனர். எருக்கிலைச்
சத்து ஆட்டுப்பால் அவர்களுக்கு மயக்கத்தை வரவழைக்கவே அவர்கள்
மயக்கத்தால் உறங்கி விட்டனர்.
இந்த சமயத்தில் நவகோள்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உலகத்தைப்
பஞ்சத்தால் வருத்தும் கிரகங்களை இடைக்காடர் அவைகள் எந்த அமைப்பில்
இருந்தால் மழை பொழியுமோ அதற்குத் தக்கவாறு மாற்றிப் படுக்க வைத்து
விட்டார்.
வானம் இருண்டது, மேகம் திரண்டது, மழை பொழிந்தது. வறட்சி
நீங்கியது. கண் விழித்துப் பார்த்த நவகோள்களும் திடுக்கிட்டனர். நொடிப்
பொழுதில் இடைக்காடர் செய்த அற்புதம் அவர்களுக்கு விளங்கிவிட்டது.
நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை மெச்சி அவருக்கு
வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்றனர்.
இந்த இடைக்காடரின் புகழ் பூவுலகம் மட்டுமன்றி வானுலகமும் எட்டியது.
ஒரு சமயம் விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று எழவே சித்தரிடம் கேட்டனர்.
இடைக்காடரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறிவிட்டுச்
சென்று விட்டார். தங்களுக்குப் பதில் சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத்
தாழ்த்திக் கொண்டு சென்றுவிட்டாரோ என்று அவரது தன்னடகத்தை
எண்ணிய அவர்கள் பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது
அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது.
ஏழை - சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த
இராமன் அவதாரம்.
இடையன் - கிருஷ்ணாவதாரம்
இளிச்சவாயன் - நரசிம்மர்
தேவர்கள் இடைக்காடரின் தன்னடக்கத்தையும் நுண்ணறிவையும்
புகழ்ந்தவாறு தம்முலகு சென்றனர்.
இவைகள் இடைக்காடரைப் பற்றி வழங்கும் கதைகள். இவரது சித்தர்
பாடல் தொகுப்பில் 30 கண்ணிகள் காணப்படுகின்றன. தாண்டவக் கோனார்
கூற்றாக இவர் பாடும் கோனார் பாட்டுக்கள் ஆழ்ந்த தத்துவத்தைப்
புலப்படுத்துகின்றன.
முதலில் தாண்டவராயக் கோனார் கூற்றாக,
எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லாப் பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே
என்று கூறும் இடைக்காடர் அடுத்த நாராயணக் கோனார் கூற்றாக,
ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்
என்று தன் மனநிலையைக் கூறுகின்றார்.
தாந்தி மித்திமி தந்தக் கோனரே!
தீந்தி மித்திமி திந்தக் கோனாரே!
ஆனந்தக் கோணாரே! - அருள்
ஆனந்தக் கோணாரே
என்று இவர் ஆடும் ஆனந்தக்கூத்தும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.
ஆதி பகவனையே அன்பாய் நினைப்பாயேல் சோதி பரகதிதான்
சொந்தமது ஆகாதோ? என்று நம்மைக் கேட்கும் கேள்வியில் வள்ளுவரின்
‘ஆதிபகவன் முதற்றே உலகு’ குறளின் நிழலாட்டம் தெரிகின்றது.
எல்லாம் இருந்தாலும் ஈசர்
அருள் இல்லையேல் எதுவுமே
இல்லாத் தன்மை யாகும்
என்பதில் இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையும் உணர்த்துகின்றார்.
நெஞ்சோடு கிளத்தலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை
நீக்கும்படி அறிவுறுத்துகின்றார்.
பூமியெல்லாம் ஒரு குடைக்கீழ்ப்
பொருந்த அரசாளு தற்கு காமியம் வைத்தால்
உனக்கதி யுள்ளதோ கல்மனமே
பெண்ணாசை யைக் கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே
பொன்னிச்சைக் கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மண்ணிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே
என்று மூவாசைகளையும் துறக்கச் சொல்கின்றார்.
அறிவோடு கிளத்தலில்
கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி வாய் நீ புல்லறியே
என்று உண்மை இறையை உணர்ந்து கொள்ளச் சொல்கின்றார்.
சித்தத்தோடு கிளத்தலில் மாணிக்கவாசகரைப் போலவே தும்புவை விளித்துப் பாடுகின்றார்.
மூவாசை விட்டோம் என்றே தும்பீபற
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற
எப்பொருளும் கனவென்றே தும்பீபற
தும்பியைப் பறக்க விட்ட இடைக்காடர் அடுத்த பாடலில் குயிலைப்
பேசச் சொல்கின்றார்.
உலகம் ஒக்காளமாம் என்று ஓதுகுயிலே
எங்கள் உத்தனைக் காண்பரிதென்று
ஓது குயிலே
என்று கூறுகின்றார்.
ஆடுமயிலே நடமாடு மயிலே! எங்கள்
ஆதியணி சேடனைக் கண்டு ஆடு மயிலே
என்று மயிலை ஆடச் சொல்கின்றார். மயில் ஆடிற்றா?
அன்னத்தைக் காண்கின்றார்.
காற்றில் மரமுறியும் காட்சியைப் போல்
நல்லறிவு தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்
போகும் மடஅன்னமே
என்று கூறுகின்றார்.
குயில், மயில், அன்னத்தை கூவியழைத்து அவை திரும்பிப்
பார்க்கவில்லைபோலும். தமது புல்லாங்குழலை எடுத்து வாசிக்கின்றார்.
தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கும்
முத்திதான் இல்லை என்று ஊதுகுழலே
பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம்
அடங்க ஒட்டியே ஊதுகுழலே
குழலோசைக்கு மயங்கி நின்ற ஆடுகளைப் பால் கறக்கிறார் இந்த
இடைக்காடர்.
சாவாது இருந்திடப் பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற
இங்கு இவர் குறிப்பிடுவது குண்டலினி யோகத்தை. இறைவனை அடைய
முக்தியை அடைய யோக மார்க்கமே சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றார்.
No comments:
Post a Comment