January 11, 2015

நாயுருவி என்ற நல்லதொரு நண்பன்

நாயுருவி
 
சிறுநீரகக் கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையாகத் திகழும், நாயுருவிச் செடி, ஓர் அற்புத மூலிகையாகும். இது புதன் கிரகத்தின் அம்சமாக வணங்கப்படுகிறது. பக்தர்கள் புதன் பகவானையும், ஞான தேவியையும் வணங்கும்போது, தவறாமல் நாயுருவிச் செடியையும் வழிபடுகிறார்கள். புதன் பகவான் அருள் தவழும் கோயில்களில் நாயுருவிச்செடிக்குத் தனி முக்கியத்துவம் தரப்படுகிறது.  புதன் கிரகத்தின் அம்சமான நாயுருவிச்செடி, புதன் கிரகத்தின் கதிர்வீச்சுகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. புதன் கிரகத்தின் தீய கதிர்வீச்சுகளிலிருந்து புதன் தோஷம் உடையவர்களை பாதுகாத்து, வாழவைக்கிறது.

புதன் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுகளால் கல்வி, கலை, அறிவு, ஞானம் ஆகியவை பெற்று நல்ல அறிஞர்களாக  பக்தர்கள் திகழ்வார்கள். புதன் கிரக ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நாயுருவிச்செடியை வணங்குவது நல்லது. குறிப்பாக இந்த கிரகத்துடன் தொடர்புடைய கன்னி, மிதுனம் ராசிக்காரர்கள் அவ்வாறு வணங்கிவரலாம். அந்தக் காலத்தில் மரணத்தைத் தரக்கூடிய நோயிலிருந்து ஒருவரைக் காக்கும் அருமருந்தாக இருந்து வந்தது நாயுருவிச்செடி. தெய்வத் தன்மை மிக்க நாயுருவிச் செடி, காடுகளிலும், மலைகளிலும், வேலியோரங்களிலும் வளரக்கூடியது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாயுருவிச் செடியைக் காணமுடிகிறது. ஒரு மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. நம் சித்தர்கள் இதன் மருத்துவ குணத்தை ஆராய்ந்து பல நோய்களுக்கு மருந்தாக அளித்து வந்தார்கள். ராஜ வசியம் போன்ற வசிய மருந்துகளுக்கும் நாயுருவிச் செடியை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

‘‘வேலுக்கு பல் இறுகும் வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்::’’

- என்பது சித்தர்களின் பாடல். நாயுருவிக்குக் கல்லுருவி என்ற பெயரும் உண்டு. மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, கொஞ்சங் கொஞ்சமாய் அந்தப் பாறையில் துளையிட்டு, பாறைக்கு மேலே வளர்ந்து விடும். இப்படி ஊடுருவக்கூடிய இதன் தன்மையைக் கண்டுதான், எந்த நோயையும் இது ஊடுருவிச் சென்று குணமாக்கும் என்று சித்தர்கள் கண்டுகொண்டார்கள். முக்கியமாக நம் உடலில் உண்டாகும் கட்டிகள், கழலைக் கட்டிகளை நாயுருவி குணப்படுத்தும் என்று நம்பி, அதை மருந்தாக்கி, மனிதருக்குக் கொடுத்து, அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி, கற்களை  உடைத்து, நீராக்கி, குணமாக்கும் தன்மையும் நாயுருவிக்கு உள்ளது. நாயுருவி இலைச்சாற்றை 30 மில்லி அளவில் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அருந்திவந்தால் சிறுநீரகக் கோளாறுகள் எல்லாம் தீரும் என்கிறார்கள். சிறு நீரகம் செயலிழப்பு மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்க்கும் இது நல்ல மருந்து என்றும் சித்தர்கள் கண்டுபிடித்தனர். நாயுருவி வேரோடு சிறுபீளை வேர், சாரணை வேர், சிறுகீரை வேர், சிறு
நெருஞ்சில் ஆகியவற்றை தலா 100 கிராம் சேர்த்து பாலில் வேகவிட்டு, பிறகு எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

நன்கு உலர்ந்த பின்னர், தூள் செய்து பத்திரப் படுத்திக்கொள்ள வேண்டும். இதனை காலை மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும், அப்படி செய்தால் சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதி சயமாய் குணமாவதாகவும் சித்தர்கள் பாடலாக எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுநீரக நோய் மட்டும் அதன் ஆரம்ப கட்டத்திலிருந்தே அறிகுறிகளைக் காட்டும். அதை கவனித்து, மருத்துவர் அறிவுரை, கண்காணிப்பில் சித்தர்கள் அருளிய மருந்துகளை மிகச் சிரத்தையுடன் உட்கொண்டு வந்தால், சிறுநீரகத்தை சரிசெய்துவிடலாம்.

நாயுருவிச்செடிகளை கோயில் வளாகங்களில் நம் முன்னோர் நட்டு வளர்த்து வந்துள்ளனர். பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பதும் நாயுருவியின் மற்றொரு சேவையாகும்.நாயுருவிக்கு ‘மாமுனி’ என்றொரு பெயருண்டு. மாமுனி என்பது மகாசித்தனைக் குறிப்பதாகும். அஷ்டமா சித்துகளையும் முறையே பயின்று பரம் பொருளோடு கலக்கும் வல்லமை மாமுனிகளுக்கு உண்டு. இறை தேடும் பண்டைய சித்தர்களின் மரபினர் நாயுருவி வேரால் தங்களது பற்களைத் துலக்கி வந்துள்ளனர்.

நாயுருவி வேரால் பல் துலக்கி வர, வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். நம் பண்டைய தமிழ் சமுதாயத்தில் வாழ்ந்த சித்தர்கள் நாயுருவிச் செடியின் வேரை மைபோல் செய்து உபயோகித்து வந்துள்ளனர். இந்து மதத்தில் நாயுருவிச் செடிகளின் குச்சிகளுக்கு தனி இடம் உண்டு. கோயில்களில் மேற்கொள்ளப்படும் யாகங்களுக்கு பயன்படுத்தும் குச்சிகளில் நாயுருவிச் செடியின் குச்சிக்கும் முதன்மையான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான ஹோமங்களும் வேத காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஹோமத்துக்கு ஒன்பது வகையான குச்சிகளை நம் முனிவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவை: அரசு, அத்தி, ஆல், வன்னி, இத்தி, முருக்கு, கருங்காலி, நாயுருவி, மா. இதிலிருந்து நாயுருவி மூலிகை செடியும் வேத காலத்தில் இருந்தே மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. புதன் கிரகத்திற்குரிய விருட்சமாக நாயுருவிச்செடியை நம் முன்னோர் காலத்திலிருந்தே வணங்கி வருகிறோம். தமிழகத்தில் புதன் கிரகத்தின் அம்சமாக வணங்கப்படும்  கோயில்கள் பல உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை: மதுரை மீனாட்சியம்மன் கோயில், சீர்காழி அருகில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, சென்னை அருகே உள்ள கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில்,  காஞ்சிபுரம் அருகே உள்ள திருக்காலிமேடு திருக்காலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில். வேலூர் அருகே, பொன்னையில் விநாயகபுரத்தில் இருக்கும் நவகிரககோட்டை கோயிலில் புதன் கிரகத்துடன் ஞானதேவியையும், நாயுருவிச்செடியையும் சேர்த்து இன்றைக்கும் பக்தர்கள் காலையிலும், மாலையிலும் வணங்கி வருவதை காணமுடியும்.

குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் மனம் அமைதி பெற்று தெளிவடையவும், மனதை அடக்கி ஆளவும், நம்மை ஆட்டிப்படைக்கும் மாயையில் இருந்து மனம் விடுபடவும், எண்ணம், சொல், செயல்  என அனைத்திலும் நாம் வெற்றிபெற்று வளமான வாழ்வு பெற வேண்டும் என்றால் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பக்தர்களைக் காத்து அருள்பாலிக்கும் புதன் கிரக பகவானையும், சுவேதாரண்ய க்ஷேத்ரத்தில் (திருவெண்காடு) எமனைத் தடுத்து நிறுத்திய சுவேதாரண்யேஸ்வரரையும் வணங்குவோம். 

அங்கு புதன் கிரகத்தின் விருட்சமாய் இருந்து பூமி முழுவதும் நேர்மறையான சக்தியை பரப்பிக் கொண்டிருக்கும் நாயுருவிச் செடியையும் வேண்டி வணங்கி வருவோம். கெட்ட கதிர்வீச்சுகளைத் தான் ஈர்த்துக்கொண்டு சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கும் வல்லமை கொண்டது நாயுருவிச்செடி. புதன் தோஷம் உள்ளவர் கள் கலை, அறிவு, புத்தி, வெற்றி, மனிதர்களின் புகழுக்கு அதிபதியாக விளங்கும் புதன் கிரகம் உறைந்திருக்கும் நாயுருவிச் செடியை வணங்கி உடல் நலமும், மன நலமும் பெற்றிடுவோம்.

தி.பெருமாள் மலர்மதி

No comments:

Post a Comment