August 22, 2015

கந்த சஷ்டி கவசம்


கந்த சஷ்டி கவசம்
(தேவராய சுவாமிகள் அருளியது)

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

July 1, 2015

இடைக்காட்டுச் சித்தர்


இடைக்காட்டுச் சித்தர் சங்கப் புலவரான இடைக்காடரினும் வேறானவர்.
இவரது  காலம்  கி.பி. 15ம்  நூற்றாண்டு  என்று  சொல்லப்படுகிறது.  இவர்
கொங்கணச்  சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே உள்ள   இடைக்காடா    அல்லது   தொண்டை   மண்டலத்தில்   உள்ள இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது.

 
 
 ஒருசமயம்  இவர்  பொதிய  மலைச்சாரலில்  வழக்கம்  போல்  ஆடு
மேய்த்துக் கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால்
கேட்க, அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரிக்கவே அவரும் இவரது
அன்பைக்  கண்டு  மகிழ்ந்து  இவருக்கு  ஞானத்தை  உபதேசித்து  விட்டுச்
சென்றாராம்.  அதனால்  ஏழை   ஆடு  மேய்க்கும்  இடையன்  மாபெரும்
சித்தரானார்.
 

தமது சோதிட அறிவால் இன்னும் சிறிது காலத்தில் ஒரு கொடிய பஞ்சம்
வரப்போகிறது   என்பதை   உணர்ந்தார்.   முன்னெச்சரிக்கையாகத்   தமது
ஆடுகளுக்கு  எக்காலத்திலும்  கிடைக்கக்கூடிய  எருக்கிலை போன்றவற்றைத் தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணோடு  சேர்த்துப்  பிசைந்து  சுவர்களை  எழுப்பிக்   குடிசை  கட்டிக்  கொண்டார். எருக்கிலை  தின்பதால்  உடலில்  அரிப்பெடுத்து  ஆடுகள் சுவரில் உராயும் போது உதிரும் வரகு தானியங்களை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டுவரப்போகும் பஞ்சத்துக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.     வற்கடம் வந்தது.  பஞ்சத்தால் உணவும் நீருமின்றி உயிர்கள் மாண்டன. நாடே  ஜன  சந்தடியில்லாமல்   வெறிச்சோடிக்  காட்சியளித்தது.  ஆனால், இடைக்காடர் மட்டும் என்றும் போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்திருந்தார்.
 

 நாட்டில் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்து போக இடைக்காடரும்
அவரது  ஆடுகளும்  மட்டும்  பிழைத்திருப்பதைக்  கண்ட  நவக்கிரகங்கள்
ஆச்சரியமுடன் அந்த இரகசியத்தை அறிந்துகொள்ள இவரிடம் வந்தன.
 

இடைக்காடருக்கோ ஆனந்தம்.  நவநாயகர்களும்  என்குடிசையை நாடி
வந்துள்ளீர்களே!  உங்களை  உபசரிக்க  எம்மிடம் ஒன்றுமில்லை. ஆயினும்
இந்த  ஏழையின்  குடிசையில்  கிடைக்கும்  வரகு ரொட்டியையும், ஆட்டுப்
பாலையும்  சாப்பிட்டுச்  சிரம  பரிகாரம்   செய்து  கொள்ளுங்கள்  என்று
உபசரித்தார்.

பஞ்ச  காலத்திலும்  பசிக்கு  உணவு  தரும்  இடைக்காடரைக் கண்டு
மகிழ்ந்த  நவ  கோள்களும்  அந்த  விருந்தினைப் புசித்தனர். எருக்கிலைச்
சத்து  ஆட்டுப்பால்  அவர்களுக்கு  மயக்கத்தை  வரவழைக்கவே அவர்கள்
மயக்கத்தால் உறங்கி விட்டனர்.

இந்த சமயத்தில் நவகோள்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உலகத்தைப்
பஞ்சத்தால் வருத்தும் கிரகங்களை இடைக்காடர் அவைகள் எந்த அமைப்பில்
இருந்தால் மழை  பொழியுமோ அதற்குத்  தக்கவாறு மாற்றிப் படுக்க வைத்து
விட்டார்.
 

வானம்  இருண்டது,  மேகம்  திரண்டது,  மழை பொழிந்தது. வறட்சி
நீங்கியது.  கண்  விழித்துப் பார்த்த நவகோள்களும் திடுக்கிட்டனர். நொடிப்
பொழுதில்  இடைக்காடர்  செய்த  அற்புதம் அவர்களுக்கு விளங்கிவிட்டது.
நாட்டின்  பஞ்சத்தை  நீக்கிய  சித்தரின்  அறிவுத்திறனை மெச்சி அவருக்கு
வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்றனர்.

இந்த இடைக்காடரின் புகழ் பூவுலகம் மட்டுமன்றி வானுலகமும் எட்டியது. 


ஒரு சமயம்  விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு  ஒரு சந்தேகம் தோன்றியது. விஷ்ணுவின்  தசாவதாரங்களில்  மிகவும்  வணங்கத்தக்கவை  எவை  என்று எழவே சித்தரிடம் கேட்டனர்.

இடைக்காடரோ  ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’  என்று கூறிவிட்டுச்
சென்று  விட்டார்.  தங்களுக்குப்  பதில்  சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத்
தாழ்த்திக்  கொண்டு  சென்றுவிட்டாரோ   என்று  அவரது  தன்னடகத்தை
எண்ணிய  அவர்கள்  பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது
அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது.

ஏழை - சக்கரவர்த்தித்  திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த
இராமன் அவதாரம்.
     இடையன் - கிருஷ்ணாவதாரம்
     இளிச்சவாயன் - நரசிம்மர்

தேவர்கள்  இடைக்காடரின்   தன்னடக்கத்தையும்   நுண்ணறிவையும்
புகழ்ந்தவாறு தம்முலகு சென்றனர்.
இவைகள்  இடைக்காடரைப்  பற்றி வழங்கும் கதைகள். இவரது சித்தர்
பாடல் தொகுப்பில் 30  கண்ணிகள் காணப்படுகின்றன. தாண்டவக் கோனார்
கூற்றாக  இவர்  பாடும்  கோனார்  பாட்டுக்கள்  ஆழ்ந்த  தத்துவத்தைப்
புலப்படுத்துகின்றன.

முதலில் தாண்டவராயக் கோனார் கூற்றாக,

எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லாப் பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே

என்று கூறும் இடைக்காடர் அடுத்த நாராயணக் கோனார் கூற்றாக,

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
     அந்த வட்டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
     மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்

என்று தன் மனநிலையைக் கூறுகின்றார்.

தாந்தி மித்திமி தந்தக் கோனரே!
தீந்தி மித்திமி திந்தக் கோனாரே!
ஆனந்தக் கோணாரே! - அருள்
ஆனந்தக் கோணாரே

என்று இவர் ஆடும் ஆனந்தக்கூத்தும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.

ஆதி  பகவனையே  அன்பாய்  நினைப்பாயேல்  சோதி  பரகதிதான்
சொந்தமது ஆகாதோ? என்று நம்மைக்  கேட்கும் கேள்வியில் வள்ளுவரின்
‘ஆதிபகவன் முதற்றே உலகு’ குறளின் நிழலாட்டம் தெரிகின்றது.

எல்லாம் இருந்தாலும் ஈசர்
அருள் இல்லையேல் எதுவுமே
இல்லாத் தன்மை யாகும்

என்பதில் இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையும் உணர்த்துகின்றார்.
 

 நெஞ்சோடு கிளத்தலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை
நீக்கும்படி அறிவுறுத்துகின்றார்.

பூமியெல்லாம் ஒரு குடைக்கீழ்ப்
பொருந்த அரசாளு தற்கு காமியம் வைத்தால்
உனக்கதி யுள்ளதோ கல்மனமே

பெண்ணாசை யைக் கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே

பொன்னிச்சைக் கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மண்ணிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே

என்று மூவாசைகளையும் துறக்கச் சொல்கின்றார்.

அறிவோடு கிளத்தலில்

கட்புலனுக்கு எவ்வளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி வாய் நீ புல்லறியே

என்று உண்மை இறையை உணர்ந்து கொள்ளச் சொல்கின்றார்.

சித்தத்தோடு கிளத்தலில் மாணிக்கவாசகரைப் போலவே தும்புவை விளித்துப் பாடுகின்றார்.

மூவாசை விட்டோம் என்றே தும்பீபற
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற
எப்பொருளும் கனவென்றே தும்பீபற

தும்பியைப் பறக்க விட்ட இடைக்காடர் அடுத்த பாடலில் குயிலைப்
பேசச் சொல்கின்றார்.

உலகம் ஒக்காளமாம் என்று ஓதுகுயிலே
எங்கள் உத்தனைக் காண்பரிதென்று
ஓது குயிலே

என்று கூறுகின்றார்.

ஆடுமயிலே நடமாடு மயிலே! எங்கள்
ஆதியணி சேடனைக் கண்டு ஆடு மயிலே

என்று மயிலை ஆடச் சொல்கின்றார். மயில் ஆடிற்றா?
 

அன்னத்தைக் காண்கின்றார்.

காற்றில் மரமுறியும் காட்சியைப் போல்
நல்லறிவு தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்
போகும் மடஅன்னமே

என்று கூறுகின்றார்.

குயில்,  மயில்,  அன்னத்தை  கூவியழைத்து  அவை  திரும்பிப்
பார்க்கவில்லைபோலும். தமது புல்லாங்குழலை எடுத்து வாசிக்கின்றார்.

தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கும்
முத்திதான் இல்லை என்று ஊதுகுழலே
பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம்
அடங்க ஒட்டியே ஊதுகுழலே

குழலோசைக்கு மயங்கி நின்ற ஆடுகளைப் பால் கறக்கிறார் இந்த
இடைக்காடர்.

சாவாது இருந்திடப் பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற

இங்கு இவர் குறிப்பிடுவது குண்டலினி யோகத்தை. இறைவனை அடைய
முக்தியை அடைய யோக மார்க்கமே சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றார்.

18 சித்தர்

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண்
சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

1. திருமூலர்,   2. இராமதேவர்,  3. கும்பமுனி,  4. இடைக்காடர்,  5.
தன்வந்திரி,  6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,  11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.   16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18.
கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச்
சித்தர், 4. சதோகநாதர்,  5. இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7.
புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9. மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச்
சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14.
விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,   16. கடுவெளிச் சித்தர், 17.
சங்கிலிச் சித்தர், 18. திரிகோணச்சித்தர்.


எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.

1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.
2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.
3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.
5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.
6. கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.
7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.
8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.
9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை.
10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.
11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.
12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.
13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.
14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.
15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.
16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்.
17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி.
18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.
February 8, 2015

வாழ்வு தரும் மரங்கள் - ஆர். எஸ்.நாராயணன்

திரு.ஆர். எஸ்.நாராயணன் அவர்கள் எழுதிய ”வாழ்வு தரும் மரங்கள்” என்ற நூல்.
நாராயணன் எனக்கு ஏற்கனவே சொல்வனம் ஆசிரியர் பிரக்ஞை ரவிஷங்கர் மூலமாக அறிமுகம் ஆனவர். நான் மரம் வளர்ப்புத் தொடர்பான தகவல்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது சொல்வனத்தில் இயற்கை வேளாண்மை குறித்தும், சூழலியல் குறித்தும் தொடர் கட்டுரைகள் எழுதி வரும் நாராயணன் அவர்களை ரவி அறிமுகப் படுத்தியிருந்தார். அவரது ஆலோசனைகளுக்காக ஒரு முறை தொடர்பும் கொண்டிருந்தேன். மரங்கள் வளர்ப்பது குறித்தும் இயற்கை விஞ்ஞானம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். காந்தி கிராமம் அருகேயுள்ள அம்பாத்துறையில் வசிக்கிறார். மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இயற்கை வேளாண்மையிலும், சூழலியலிலும் ஆர்வம் செலுத்தி ஆராய்ச்சிகளிலும் நூல்கள் எழுதுவதிலும் இயற்கை வேளாண் குறித்த பிரசாரங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார். வீட்டு மாடியில் தோட்டம் வளர்க்கும் முறையை பிரபலப் படுத்தி வருகிறார். இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், மாடியிலும் தோட்டமிடலாம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம் என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அவர் தினமணி நாளிதழில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுக்காக எழுதிய ”வாரம் ஒரு மரம்” என்ற கட்டுரைகளின் முதல் தொகுப்பாகவே “வாழ்வு தரும் மரங்கள்” வெளி வந்துள்ளது.
மரங்கள் குறித்த நூல் என்றால் ஏதோ நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் படித்த பாட்டனி பாட நூல்கள் போல கடினமாகவும் வறட்சியாகவும் இல்லாமல் மிகவும் சுவாரசியமான நடையில் ஒவ்வொரு மரம் குறித்தும் முழுமையான தகவல்களுடனும் ஏராளமான சுவாரசியமான உப தகவல்களுடனும் இந்த நூலை எழுதியுள்ளார். அரச மரம், ஆல மரம் துவங்கி கோங்கு மரம் வரையிலான 78 மரங்கள் குறித்தான முழு விபரங்கள் அடங்கிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே வாழ்வு தரும் மரங்கள். ஒவ்வொரு மரம் குறித்தும் அவற்றின் தாவரவியல் பெயர், சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியங்களில் அவற்றிற்கு வழங்கப் பட்ட பெயர், ஹிந்தியில் அதன் பெயர், ஆங்கிலப் பெயர் ஆகிய தகவல்களுடன் ஒவ்வொரு மரம் குறித்தான கட்டுரையையும் துவக்குகிறார். பின்னர் அந்த மரம் குறித்தான் புராணத் தொடர்புடைய செய்திகள், அந்த மரம் எந்த ஆலயங்களின் தல விருட்சம் போன்ற விபரங்கள், மரம் தொடர்பான இலக்கியக் குறிப்புகள், மரத்தின் மருத்துவப் பயன் பாடுகள், சமூகப் பயன் பாடுகள், மரம் வளரத் தேவையான இடம், மண், தட்ப வெட்ப நிலை குறித்த விபரங்கள், அந்த மரத்தினால் விளையும் சுற்றுச் சூழல் பயன்பாடுகள், அந்த மரம் குறித்த சுவாரசிய செய்திகள், அந்த மரக் கன்று எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள், மரம் வளர்ப்பதற்குத் தேவையான குறிப்புகள், மரத்தின் உணவு பயன்பாடுகள் அந்த மரத்தினால் ஏற்படும் சூழலியல் தாக்கங்கள்,அந்த மரம் தோன்றிய நாடுகள் அல்லது இடங்கள், அந்த மரத்தினால் பயனடையும் பறவைகள், விலங்குகள், மரத்தின் உயர, அகல அளவுகள் போன்ற எண்ணற்றச் செய்திகளை ஒவ்வொரு கட்டுரையிலும் அடர்த்தியாகத் தந்து செல்கிறார். மரத்தைப் பற்றிய சித்தர்களின் குறிப்புகளையும், ரசாயனக் குறிப்புகளையும் பரத கண்டத்தின் பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து விளக்குகிறார். ஒவ்வொரு மரம் குறித்து படித்து முடிக்கும் பொழுதும் அந்த மரம் மீது நமக்கு பிரமிப்பும் பக்தியும் பாசமும் ஏற்பட்டு விடுகின்றன. நாம் இது வரையிலும் கேள்விப்பட்டிராத கண்டிராத ஏராளமான மரங்கள் குறித்த தகவல்களையும் அள்ளித் தருகிறார். ஒவ்வொரு தாவரமும் இயற்கையின் எண்ணிலடங்காத அதிசயங்களைத் தன்னுள் கொண்டு இந்த பூவுலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை ஒவ்வொரு மரத்தின் தகவல்கள் மூலமாகவும் ஆசிரியர் விளக்குகிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவரும் உடனடியாக ஒரு மரக்கன்றையாவது நட்டு விட்டே அடுத்த வேலைக்குச் செல்வார் என்பது உறுதி. சில மரங்களின் பயன்பாடுகளைப் படிக்கும் பொழுது அதை நம் சூழல்களில் கண்டிருந்தாலும் அதன் அருமை தெரியாமல் வளர்ந்திருக்கிறோமே என்ற வெட்கமே ஏற்படுகிறது.
கீழ்க்கண்டவை போல ஏராளமான தகவல்கள் அடர்ந்த மரத்தின் இலைகள் போலச் செறிவுடன் நூல் முழுவதும் காணக் கிடைக்கின்றன.
‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறார்.
ஒரு அரச மரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்க லோக பதவி கிட்டும் என்று விருஷ ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.
பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதன் மருத்துவ காரணங்கள் உள்ளன.
அரச மரத்தின் அதிக பிராணவாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே என்றும் அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கினார்கள்.
ஆல மரம் வாக்கின் அடையாளம் என்றும் அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான பனியாக்கள் அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும் அதன் காரணமாகவே அது ஆங்கிலத்தில் பான்யன் ட்ரீ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டியவை.
சாஸ்திர முறைப் படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் ஒரு இடமும் கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பார்கள் என்றும் விருஷ ஆயுர்வேதம் நூல் சொல்கிறது.
மேலோகத்தில் கன்னியர் கிடைப்பதற்காக எவரும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க வேண்டியதில்லை இரண்டு ஆல மரத்தை மட்டும் நட்டாலே போதும் போலிருக்கிறது. ஆலம்பால் வயேகரா போலப் பயன் பட்டதே அந்த கன்னியர்கள் கிட்டும் ரகசியம்.
மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக இலுப்பை மரத்தையும் அது ஏன் ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது என்பதைப் பற்றியும் கூறுகிறார். தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.
அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி ரைட்ஸ் உருவானது.
நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.
நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் அசோக மரங்களாக கருதப் படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.
இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும், பிரமிப்பையும் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம் என்கிறார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாட்டு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.
ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களையும் நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருஷ ஆயுர்வேதம் சுட்டுகிறதாம். அந்தக் காலத்தில் இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்று இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லையம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார் ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது என்று மறைந்து விட்ட தில்லை மரத்தின் அருமைகளை அடுக்குகிறார். தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி மரம் என்றும் அவற்றை அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும் என்கிறார். செஞ்சந்தன மரம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் மோசஸ் சினாய் ஏரியில் வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத் தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும் என்கிறார். கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம் என்ற யோசனையையும் அளிக்கிறார் நாராயணன். மகிழ மரத்தை பூர்வீக வயேகரா என்றழைக்கிறார்.
நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம்,வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி,வேள்வேல்,தழுதாழை,ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, எட்டி, இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின் மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத்துவங்களை விளக்கி அவற்றை நாம் அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார். மரங்களின் தலைப்பிலேயே அதன் தன்மையை சுருக்கமாக விளக்கி விடுகிறார்.
நெல்லி-இந்தியாவின் எதிர்காலம்,
மருதம்-இதய நோய் நீக்கி,
வெப்பாலை-பல நோய் நிவாரணி,
முருங்கை-தாதுபுஷ்டி மரம்,
வேள்வேல்-மேக நிவாரணி,
கொய்யா-ஏழைகளின் ஆப்பிள்,
கருங்காலி-கருப்பு வைரம்
போன்ற தலைப்புகளே அந்தந்த மரங்களின் மேன்மையை விளக்கி விடுகின்றன. சில மரங்களை வளர்ப்பதன் வணிகப் பயன்பாடுகளையும் அவற்றின் மூலமாக ஈட்டப் படும் லாபத்தினையும் குறிப்பிட்டு அந்த வகை பணங்காய்ச்சி மரங்களை வளர்ப்பதையும் ஊக்குவிக்கிறார்.
நூலின் பின் இணைப்பாக மரங்களின் படங்கள், மரங்களின் மருத்துவக் குறிப்புகள், அவரவர் ராசி/நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள், மரக் கன்றுகளைப் பெறும் விபரங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார். இந்த நூலைப் படித்த பின்னர் தேடிப் பிடித்து மருதம், கடம்பு, செஞ்சந்தனம், எட்டி, மகோகனி, சந்தன வேம்பு, சரக் கொன்றை போன்ற அரிய வகை மரங்களாக 25 மரங்களை எனது தோட்டத்தில் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தேன். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நட்டு நம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே ஆசிரியரின் விருப்பமாக வைக்கிறார். மரங்களை வாழ்வியல் கண்ணோட்டத்தில் அணுகி அவற்றின் நுட்பமான மேன்மைகளை மிக எளிய அழகான சுவாரசிய்மான நடையில் தருகிறார் ஆசிரியர் நாராயணன். வாழ்வு தரும் மரங்கள் நூல் சுற்றுச் சூழலில், இயற்கை வேளாண்மையில், இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும். நான் எவருக்கேனும் பரிசாக ஒரு நூலை அளிக்க விரும்பினால் இந்த நூலையும் கூடவே ஒரு மரக்கன்றையும் அளிக்கவே விரும்புவேன். இந்த நூலைப் படிப்பவர் நிச்சயமாக அந்தக் கன்றை தன் கண் போலப் பாவித்து ஒரு மரமாக வளர்த்து விடுவார் என்று உறுதியாக நம்புகிறேன். வாழ்வு தரும் மரங்களைப் படித்து, அறிந்து கொள்வதோடு நின்று விடாமல் அவற்றை வளர்ப்பதும் நம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
தாமரை பப்ளிக்கேஷன்ஸ் பதிப்பான இந்த ”வாழ்வு தரும் மரங்கள் ”.

January 11, 2015

நாயுருவி என்ற நல்லதொரு நண்பன்

நாயுருவி
 
சிறுநீரகக் கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையாகத் திகழும், நாயுருவிச் செடி, ஓர் அற்புத மூலிகையாகும். இது புதன் கிரகத்தின் அம்சமாக வணங்கப்படுகிறது. பக்தர்கள் புதன் பகவானையும், ஞான தேவியையும் வணங்கும்போது, தவறாமல் நாயுருவிச் செடியையும் வழிபடுகிறார்கள். புதன் பகவான் அருள் தவழும் கோயில்களில் நாயுருவிச்செடிக்குத் தனி முக்கியத்துவம் தரப்படுகிறது.  புதன் கிரகத்தின் அம்சமான நாயுருவிச்செடி, புதன் கிரகத்தின் கதிர்வீச்சுகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. புதன் கிரகத்தின் தீய கதிர்வீச்சுகளிலிருந்து புதன் தோஷம் உடையவர்களை பாதுகாத்து, வாழவைக்கிறது.

புதன் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுகளால் கல்வி, கலை, அறிவு, ஞானம் ஆகியவை பெற்று நல்ல அறிஞர்களாக  பக்தர்கள் திகழ்வார்கள். புதன் கிரக ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நாயுருவிச்செடியை வணங்குவது நல்லது. குறிப்பாக இந்த கிரகத்துடன் தொடர்புடைய கன்னி, மிதுனம் ராசிக்காரர்கள் அவ்வாறு வணங்கிவரலாம். அந்தக் காலத்தில் மரணத்தைத் தரக்கூடிய நோயிலிருந்து ஒருவரைக் காக்கும் அருமருந்தாக இருந்து வந்தது நாயுருவிச்செடி. தெய்வத் தன்மை மிக்க நாயுருவிச் செடி, காடுகளிலும், மலைகளிலும், வேலியோரங்களிலும் வளரக்கூடியது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாயுருவிச் செடியைக் காணமுடிகிறது. ஒரு மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. நம் சித்தர்கள் இதன் மருத்துவ குணத்தை ஆராய்ந்து பல நோய்களுக்கு மருந்தாக அளித்து வந்தார்கள். ராஜ வசியம் போன்ற வசிய மருந்துகளுக்கும் நாயுருவிச் செடியை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

‘‘வேலுக்கு பல் இறுகும் வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்::’’

- என்பது சித்தர்களின் பாடல். நாயுருவிக்குக் கல்லுருவி என்ற பெயரும் உண்டு. மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, கொஞ்சங் கொஞ்சமாய் அந்தப் பாறையில் துளையிட்டு, பாறைக்கு மேலே வளர்ந்து விடும். இப்படி ஊடுருவக்கூடிய இதன் தன்மையைக் கண்டுதான், எந்த நோயையும் இது ஊடுருவிச் சென்று குணமாக்கும் என்று சித்தர்கள் கண்டுகொண்டார்கள். முக்கியமாக நம் உடலில் உண்டாகும் கட்டிகள், கழலைக் கட்டிகளை நாயுருவி குணப்படுத்தும் என்று நம்பி, அதை மருந்தாக்கி, மனிதருக்குக் கொடுத்து, அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி, கற்களை  உடைத்து, நீராக்கி, குணமாக்கும் தன்மையும் நாயுருவிக்கு உள்ளது. நாயுருவி இலைச்சாற்றை 30 மில்லி அளவில் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அருந்திவந்தால் சிறுநீரகக் கோளாறுகள் எல்லாம் தீரும் என்கிறார்கள். சிறு நீரகம் செயலிழப்பு மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்க்கும் இது நல்ல மருந்து என்றும் சித்தர்கள் கண்டுபிடித்தனர். நாயுருவி வேரோடு சிறுபீளை வேர், சாரணை வேர், சிறுகீரை வேர், சிறு
நெருஞ்சில் ஆகியவற்றை தலா 100 கிராம் சேர்த்து பாலில் வேகவிட்டு, பிறகு எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

நன்கு உலர்ந்த பின்னர், தூள் செய்து பத்திரப் படுத்திக்கொள்ள வேண்டும். இதனை காலை மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும், அப்படி செய்தால் சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதி சயமாய் குணமாவதாகவும் சித்தர்கள் பாடலாக எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுநீரக நோய் மட்டும் அதன் ஆரம்ப கட்டத்திலிருந்தே அறிகுறிகளைக் காட்டும். அதை கவனித்து, மருத்துவர் அறிவுரை, கண்காணிப்பில் சித்தர்கள் அருளிய மருந்துகளை மிகச் சிரத்தையுடன் உட்கொண்டு வந்தால், சிறுநீரகத்தை சரிசெய்துவிடலாம்.

நாயுருவிச்செடிகளை கோயில் வளாகங்களில் நம் முன்னோர் நட்டு வளர்த்து வந்துள்ளனர். பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பதும் நாயுருவியின் மற்றொரு சேவையாகும்.நாயுருவிக்கு ‘மாமுனி’ என்றொரு பெயருண்டு. மாமுனி என்பது மகாசித்தனைக் குறிப்பதாகும். அஷ்டமா சித்துகளையும் முறையே பயின்று பரம் பொருளோடு கலக்கும் வல்லமை மாமுனிகளுக்கு உண்டு. இறை தேடும் பண்டைய சித்தர்களின் மரபினர் நாயுருவி வேரால் தங்களது பற்களைத் துலக்கி வந்துள்ளனர்.

நாயுருவி வேரால் பல் துலக்கி வர, வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். நம் பண்டைய தமிழ் சமுதாயத்தில் வாழ்ந்த சித்தர்கள் நாயுருவிச் செடியின் வேரை மைபோல் செய்து உபயோகித்து வந்துள்ளனர். இந்து மதத்தில் நாயுருவிச் செடிகளின் குச்சிகளுக்கு தனி இடம் உண்டு. கோயில்களில் மேற்கொள்ளப்படும் யாகங்களுக்கு பயன்படுத்தும் குச்சிகளில் நாயுருவிச் செடியின் குச்சிக்கும் முதன்மையான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான ஹோமங்களும் வேத காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஹோமத்துக்கு ஒன்பது வகையான குச்சிகளை நம் முனிவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவை: அரசு, அத்தி, ஆல், வன்னி, இத்தி, முருக்கு, கருங்காலி, நாயுருவி, மா. இதிலிருந்து நாயுருவி மூலிகை செடியும் வேத காலத்தில் இருந்தே மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. புதன் கிரகத்திற்குரிய விருட்சமாக நாயுருவிச்செடியை நம் முன்னோர் காலத்திலிருந்தே வணங்கி வருகிறோம். தமிழகத்தில் புதன் கிரகத்தின் அம்சமாக வணங்கப்படும்  கோயில்கள் பல உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை: மதுரை மீனாட்சியம்மன் கோயில், சீர்காழி அருகில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, சென்னை அருகே உள்ள கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில்,  காஞ்சிபுரம் அருகே உள்ள திருக்காலிமேடு திருக்காலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில். வேலூர் அருகே, பொன்னையில் விநாயகபுரத்தில் இருக்கும் நவகிரககோட்டை கோயிலில் புதன் கிரகத்துடன் ஞானதேவியையும், நாயுருவிச்செடியையும் சேர்த்து இன்றைக்கும் பக்தர்கள் காலையிலும், மாலையிலும் வணங்கி வருவதை காணமுடியும்.

குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் மனம் அமைதி பெற்று தெளிவடையவும், மனதை அடக்கி ஆளவும், நம்மை ஆட்டிப்படைக்கும் மாயையில் இருந்து மனம் விடுபடவும், எண்ணம், சொல், செயல்  என அனைத்திலும் நாம் வெற்றிபெற்று வளமான வாழ்வு பெற வேண்டும் என்றால் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பக்தர்களைக் காத்து அருள்பாலிக்கும் புதன் கிரக பகவானையும், சுவேதாரண்ய க்ஷேத்ரத்தில் (திருவெண்காடு) எமனைத் தடுத்து நிறுத்திய சுவேதாரண்யேஸ்வரரையும் வணங்குவோம். 

அங்கு புதன் கிரகத்தின் விருட்சமாய் இருந்து பூமி முழுவதும் நேர்மறையான சக்தியை பரப்பிக் கொண்டிருக்கும் நாயுருவிச் செடியையும் வேண்டி வணங்கி வருவோம். கெட்ட கதிர்வீச்சுகளைத் தான் ஈர்த்துக்கொண்டு சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கும் வல்லமை கொண்டது நாயுருவிச்செடி. புதன் தோஷம் உள்ளவர் கள் கலை, அறிவு, புத்தி, வெற்றி, மனிதர்களின் புகழுக்கு அதிபதியாக விளங்கும் புதன் கிரகம் உறைந்திருக்கும் நாயுருவிச் செடியை வணங்கி உடல் நலமும், மன நலமும் பெற்றிடுவோம்.

தி.பெருமாள் மலர்மதி

January 1, 2015

Girivalam Day Calendar - 2015

MonthGirivalam DayStart Date, Day, TimeEnd Date, Day, Time
January04/01/2015 Sunday04/01/2015 Sun 11:27am05/01/2015 Mon 07:30am
February03/02/2015 Tuesday03/02/2015 Tue 03:38am04/02/2015 Wed 03:19am
March04/03/2015 Wednesday04/03/2015 Wed 09:39pm05/03/2015 Thu 11:09pm
April03/04/2015 Saturday03/04/2015 Sat 05:28pm04/04/2015 Sun 05:09pm
May03/05/2015 Sunday03/05/2015 Sun 09:39am04/05/2015 Mon 09:20am
June01/06/2015 Monday01/06/2015 Mon 10:11pm02/06/2015 Tue 09:52pm
July01/07/2015 Wednesday01/07/2015 Wed 10:44am02/07/2015 Thu 06:46am
July30/07/2015 Thursday30/07/2015 Thu 07:38pm31/07/2015 Fri 03:40pm
August29/08/2015 Saturday29/08/2015 Sat 04:31am30/08/2015 Sun 10:44pm
September27/09/2015 Sunday27/09/2015 Sun 01:25pm28/09/2015 Mon 07:38am
October26/10/2015 Monday26/10/2015 Mon 10:19pm27/10/2015 Tue 04:32pm
November25/11/2015 Saturday25/11/2015 Sat 11:44pm26/11/2015 Sun 05:41pm
December24/12/2015 Thursday24/12/2015 Thu 07:45pm25/12/2015 Fri 01:57pm