July 28, 2011

திருமுறை பாடல் - 6

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை(வு) இலை
கண்ணில் நல்லஃ(து) உறும் கழுமல வள நகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.


பொழிப்புரை உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


குறிப்புரை கதிக்கியாதும் - கதிக்கு + யாதும். ஓர் குறை இ ( ல் ) லை. கண்ணின் நல்லது உறும் - கண்ணுக்கினிய நல்லவளத்தையுடைய. கழுமலவளநகர் கண்ணின் நல்லஃது.July 15, 2011

பாகல்மேடு மாநாடு

மக்களாட்சி வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக 1957-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாகல்மேடு மாநாட்டை கூறலாம். சமுதாய வளர்ச்சித்துறையை தன்னிடம் எடுத்துக்கொண்ட பின்னர்காமராஜிடம் எழுந்த எண்ணம்தான் பாகல்மேடு மாநாடு.

மக்களுக்கும் அரசுக்கும் எல்லா மட்டத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமென விருப்பிய காமராஜ், மக்களின் பங்களிப்பு இல்லாமல் சமுதாய மேம்பாடு இருந்திட முடியாது எனக் கருதினார். அது போல, அரசு அதிகாரிகள் மக்களோடு ஒன்றினைந்து, எல்லா வகையிலும் மக்களுக்கு உதவி புரிய இருப்பதைக் காட்டிக்கொள்ளவில்லை என்றால், மக்களின் பங்களிப்பை முழுமையாக எதிர்பார்க்க முடியாது என்பதையும் காம்ராஜ் உணர்ந்திருந்தார்.

சிகப்பு நாடா முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் குறிப்பாக சமுதாய மேம்பாடு திட்ட செயல்பாடுகளில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட காமராஜ் விரும்பினார்.

எனவே, ஆட்சியாளர்களும் மக்களும் ஒரே இடத்தில் கூடி, கலந்துரையாடி, பிரச்சனைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டால்தான் விருப்புகிற, எதிர்பார்க்கிற வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் நடந்தேற வாய்ப்புண்டு என காமராஜ் கருதினார். அந்த வகையில் ஏற்பாடு செய்ய்பட்டதுதான் செங்கள்பட்டு மாவட்டம்ஊத்துக்கோட்டை பகுதி, பாகல்மேடு பிர்கா மாநாடு. 

பிர்கா என்பது கிராம பஞ்ச்சாயத்திற்கும் மாவாட்ட பஞ்சாயத்திற்கும் இடைபட்ட ஐந்தாறு கிராமங்களை உள்ளடக்கிய 1958ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்திற்கு முன்பு செயல்ப்ட்டு வந்தது.பாகல்மேடு பிர்கா கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இந்த மாநாட்டிற்க்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழக்
முதல்வர் காமராஜ் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், பொது மக்களால் முன் வைக்கபடும் சமுதாய மேம்பாட்டுப் பிரச்சனைகளுக்கு உடனடியாக அங்கேயே தீர்வு காணப்படுமெனவும் அறிவிக்கபட்டிருந்தது. முதல்வர் காமராஜ், தலைமைச் செயளர், சமுதாய மேம்பாட்டுத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சி தலைவர்கீழ்நிலை அதிகாரிகள் உடன் பாகல்மேடு மற்றும் பிர்கா கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக, அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் கண்காட்சியைத் தமிழக முதல்வர் காமராஜ் திறந்து வைத்தார்.

மாநாட்டின் அடிப்படையை முதல்வர் காமராஜ் முதலில் விளக்கினார். நேரிடையாக மக்கள் பிரச்சனைகளை அறிந்து, இயன்றவரை உடனடி தீர்வு காண தான் வந்திருப்பதாகவும் கூறிய காமராஜ், அரசு மீதான மக்கள் நம்பிக்கையை எற்படுத்தவும் தன்னுடைய அரசு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பதை மக்கள் உணர்ந்திட வேண்டுமெனவும் கூறினார். சுற்றுபுற கிராமத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி சமுதாய தேவைகளைக் குறித்து கலந்துரையாடுவதன் மூலமாக, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை எல்ல கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியுமென்றும் காமராஜ் கூறினார்.

மேலும், குழுமியிருந்த அரசு அதிகாரிகளைப் பார்த்து, மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவது தான் அவர்களுடைய முதன்மையான பணியாக இருந்திட வேண்டும், அப்படி நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி அடைவதன் மூலமே மிகப்பெரிய செயல்களை எளிமையாக் அதிகாரிகளால் நிறைவேற்ற இயலும் என்பதையும் காமராஜ் எடுத்துரைத்தார்.

அதன்பின்னர், பிரச்சனகளைப் பற்றி பேச பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். தங்கள் கிராமத்தில் ஒருவர் கூட படித்தவர் இல்லையென்றும், தங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்றும் ஒரு கிராமவாசி கூறி,  தங்கள் கிராமத்தை சேர்ந்த 36 பேர்களுடைய பெருவிரல் ரேகை இட்ட மனுவை காமராஜரிடம் அளித்தார். முழுமையாக அரசு செலவிலேயே தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென்று இன்னொறு கிராமவாசி கூறினார். நெடுந்தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வயல் வெளியில் தங்கள் கிராமத்தை சார்ந்த பெண் குழந்தை பெற்றதாகவும் அதனால் தங்கள் கிராமத்திற்க்கு மருத்துவ மனை வேணுமென்று மற்றொரு கிராமவாசி கூறினார். பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் வெள்ளத்தில் மூழ்கிப் போய்விட்டான் எனக்கூறி, தங்கள் கிராமத்திலேயே பள்ளிக் கூடம் வேண்டுமென்று ஒரு கிராமவாசி கூறினார். கிராம தொழிகளில் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.  தங்களுடைய குடியிருப்புகளில் குடிநீர் கிணறுகளும் பள்ளிகளும் வேண்டுமென்வும் தங்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட வேண்டுமென்று தாழ்த்தப்பட்டோர் சார்பாக பேசியவர் கோரிக்கை வைத்தார்.

இப்படி இரண்டு பெண்கள் உள்பட ஐம்பது கிராமவாசிகள் தங்கள் குறைகளை முதல்வர் காமரஜரிடம் நேரிடையாக எடுத்துரைத்தனர். அதன் முடிவில், தலைமைச் செயளர், மாவட்ட ஆட்சித்தலைவர் பிற
அதிகாரிகளுடன் முதல்வர் காமராஜ் ஆலோசனை மேற்கொண்டார். ஏழு கிராம சாலைகள் அமைக்கவும், ஐந்து கிணறுகள் தோண்டவும், மூன்று பள்ளிகள் திறக்கவும் அந்த இடத்திலேயே முடிவு செய்து அறிவிக்கப் பட்டது. மேலும் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் முழுமைப் பெற காலக்கெடு வரையறை செய்யப்பட்டது.

மக்களின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்த இந்த பாகல்மேடு மாநாடு முறையில் மக்கள் குறைகளுக்கு தீர்வு காணுப் முயற்சி தழிழ் நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. பாகல் மேடு பாணி மக்களிடையே பலத்த வரவேற்பை கண்ட திராவிட முன்னேற்ற கழக தலைவர் அண்ணாத்துரை இதற்காக காமராஜ் அரசை பாராட்டியதோடு மட்டுமின்றி, தன்னுடைய தொகுதியிலும் பாகல்மேடு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சட்ட மன்றத்தில் வழியுறுத்தினார்.

எந்த ஜனநாயக நாட்டிலும் மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக் பாகல்மேடு முயற்சியை காமராஜ் அறிமுகப் படுத்தினார். இப்படி, அரசுக்கும் மக்க்ளுக்கும் இடைவெளி இல்லாத நிலையை காமராஜ் மேற்கொண்டதால் தான், அவருடைய அரசு மக்கள் அரசாக விளங்கியது என்பது உறுதி.


காமராஜர் காலைமுதல் மாலை வரை…

சின்னஞ்சிறு வயதில் பெருந்தலைவருடன் வாழ்ந்த அந்த நினைவுகளுடன் ஜவகர், மோகன் ஆகியோர் கூறியதாவது
காலையில் தன்னை எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் என்று உதவியாளரிடம் சொல்லி விட்டுதான் காமராஜர் படுக்கைக்குச் செல்வார். படுக்கை அறையை உட்புறமாகப் பூட்டிக் கொள்வதில்லை. அவரது உதவியாளர் அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவார்.படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம். இரவு 12 மணிக்கும் படுக்கச் சென்றாலும் புத்தகம் படித்து விட்டுத் தான் தூங்குவது அவர் வழக்கம். (ரயில் பிரயாணத்தின் போதும் இரவு நெடு நேரம் படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவர் வழக்கமாம்).


தூங்கும் போது குறட்டைச் சத்தம் பலமாக இருக்குமாம்.காமராஜர் எழுப்பச் சொன்ன நேரத்தில் உதவியாளர் தாழ்ப் பாளைத் திறந்து கொண்டு அவர் அருகே சென்று அவரைத் தொட்டுத்தான் எழுப்ப வேண்டும். உடனே எழுந்து படுக்கையில் சம்மனமிட்டு அமர்ந்து கொள்வார். உதவியாளர் கொண்டு வரும் பில்டர் காபியைக் குடிப்பார். காலைச் செய்தித் தாள்கள் முழுவதையும் படுக்கையில் அமர்ந்தபடி படித்து முடித்து விடுவார். அதன் பின் கண்ணாடி முன் அமர்ந்து தானே முகச்சவரம் செய்து கொள்வார். இன்னொரு காபி அருந்தி விட்டு எதையாவது கொஞ்ச நேரம் படிப்பார். 
அப்போது அவரது நேர்முக உதவியாளர் அவர் அறைக்குச் சென்று அவரது அன்றைய அலுவல்கள் என்னென்ன என்பதை நினைவூட்டுவார்.காலை 8.30க்கு மேல் 9 மணிக்குள் மாடியிலிருந்து இறங்கி கீழ்த்தளத்துக்கு வருவார். முன் அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருப்பவர்களை ஒவ் வொரு வராக அழைத்துப் பேசுவார். அதன் பின் முதலமைச்சரைக் காண்பதற் கென்றே (முன் அனுமதி மெறாமல்) வந்திருப்பவர்களையும் ஒவ்வொருவராக அழைத் துப் பேசுவார்.


அதன்பின் அவரது கடித உதவியாளர்வந்து முதலமைச்சருக்கு வந்துள்ள கடிதங்களை ஒன்றொன்றாக எடுத்துப் படிப்பார். பதில் எழுத வேண்டிய கடிதங்களுக்கு என்ன பதில் எழுத வேண்டும் என்று காமராசர் சுருக்கமாகச் சொல்லுவார். வரவேற்பு அறையை விட்டு எழும் முன், தனது உதவியாளரை அழைத்து வெளியே மேலும் யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்க்கும்படி சொல்வார். பொது மக்கள் யாராவது வந்திருந்தால் அவர் களை ஒவ்வொரு வராகச் சந்திப்பார்.


அதன்பின் மாடிக்குச் சென்று விடுவார். குளித்து சலவை செய்த உடைகளை அணிந்து கொண்டு தயாராகி விடுவார். அவர் கையெழுத்து போட வேண்டிய கடிதங்கள் டைப் செய்யப்பட்டு தயாராக இருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்து, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் திருத்தி மீண்டும் டைப் செய்து கையெழுத்து போடுவார். காலை 11 மணிக்கெல்லாம் கைக்குத்தல் அரிசிச் சாதம் சாப்பிடுவார். காலை 11.30க்கு கோட்டைக்குப் புறப் படுவார். கோட்டையிலும் பார்வை யாளர்கள் காத்திருந்தால் அவர்களை முதலில் சந்தித்து விடுவார்.


அதன்பின் அரசு அதிகாரிகள் அவரைச் சந்தித்து உரையாடுவார்கள். பகல் 1.30 வரை கோட்டையில் இருப்பார். அதன்பின் வீடு திரும்பி சற்றே ஓய்வு எடுப்பது உண்டு. கோட்டையிலேயே பகல் 2 மணிக்கும் மேல் அலுவல் இருந்தால் 3 மணிக்கு 1 தோசை ஒரு காபி சாப்பிடுவார். மாலையிலும் காமராசரைப் பார்வை யாளர்கள் சந்திக்க முடியும். அதன்பின் மாலை நேர அலுவல்களில் கலந்து கொள்வார். அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கலந்து கொள்வார். காலம் தவறு வது அவருக்குப் பிடிக்காது.


மாலையில் வீட்டிலிருந்து புறப்படும் முன் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டுதான் புறப்படுவார். இரவில் திரும்பி வந்த பிறகும் ஒரு குளியல் உண்டு. இரவில் 2 அல்லது 3 இட்லிகளும் தேங்காய் சட்னியுமே அவரது உணவு. அதன்பின் ஒரு டம்ளர் பால். அதில் ஈஸ்ட் பவுடரும் தேனும் கலந்திருக்கும். அவருக்கு சுகர்வந்த பின் பாலுக்குப் பதில்காம்பிளான் அருந்துவார்.


அதன்பின் தனது படுக்கை அறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்து விடுவார்.
காமராசரிடம் பென்சிலோ பேனாவோ கிடையாது. ஏதாவது கையெழுத்து போடும் போது உதவியாளரிடம் பேனா வாங்கி கையெழுத்து போடுவார். கைக் கடிகாரமோ பாக்கட் கடி காரமோ அவர் வைத்திருந்த தில்லை. தனது சட்டைப் பையில் பணமும் வைத்திருப்பதில்லை.


மாலையிலோ காலையிலோ வேறு அலுவல்கள் இல்லை என்றால் ராட்டையை எடுத்து நூல் நுற்பதும் உண்டு.ஒரு நாளில் 3 அல்லது 4 முறை உடைகளை மாற்றுவார். பளிச் சென்று சலவை செய்யப்பட்ட கதர் வேஷ்டி சட்டை துண்டு அணிவார். பனியனோ அண்டர் வேரோ அணிவதில்லை.
தினசரி 3 அல்லது 4 முறை குளிப்பார். அப்போது களையும் ஆடைகளை அவரே மடித்து உரிய இடத்தில் வைத்து விடுவார். பின் அவை சலவைக்கும் போகும். வேஷ்டியோ சட்டையோ கிழியும் வரை அவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் குளிர்ந்த நீரில் தான் குளியல். குளிர் காலத்தில் மட்டுமே வெதுவெதுப் பான இளம் வென்னீர் தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்ட வழக்கமே இல்லையாம்.


பலதரப்பட்ட புத்தகங்களை காமராசர் படிப்பதுண்டு. சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவதிலும் அவர் வல்லவர். அவரிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது காமராஜரின் குருநாதர் சத்தியமூர்த்தி. அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி காமராஜரை பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.
அவர் கூறிய தகவல்கள் வருமாறு:
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1930_ம் ஆண்டு நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் தேரடி வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்பா சத்தியமூர்த்தி சுதந்திர போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொப்டிருப்பார். அப்போது எனக்கு 5 வயது. நான் துள்ளி விளையாடும் பருவம். வீட்டில் அங்கும் இங்கும் விளையாடிக் கொப்டிருப்பேன். காமராஜர் அப்பாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவருக்கு 18 வயது இருக்கும். அவர் என்னிடம் அய்யா இருக்கிறாரா? என்று பணிவுடன் கேட்பார். அப்பாவை அவர் எப்போதும் அய்யா என்றுதான் அழைப்பார். நான் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் சென்று அப்பாவிடம் அப்பா, அப்பா காமராஜர் உங்களை பார்க்க வந்துள்ளார்'’ என்று கூறுவேன். அவர் உடனே என்னிடம் மரியாதையாக பேசு அம்மா என்பார். ஏன் என்றால் நான் சிறு பிள்ளைதனமாக துடுக்குடன் அவர் பெயரை சொன்னதை அப்பா மரியாதை குறைவாக நினைத்து விட்டார். காமராஜரை அப்பா வீட்டுக்குள் அழைத்து பேசுவார். அவர்களது பேச்சு நாட்டை பற்றியும், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை பற்றிதான் இருக்கும். நான் சிறுமியாக இருந்ததால் அப்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி அதிகம் தெரியாது. சிறிது நேரம் காமராஜர் அப்பாவிடம் பேசி விட்டு சென்று விடுவார்.


அப்பாவை காமராஜர் எப்படி கவர்ந்தார்? என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். மதுரையில் அப்பா ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் அப்பாவின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான்.
அந்த சிறுவனை அப்பா கூட்ட மேடைக்கு அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்டார். என் பெயர் காமராஜர் அய்யா'’ என்று பணிவுடன் கூறினார். அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார்'’ என்று கூறினார். இப்படித்தான் அப்பாவிடம் காமராஜருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
காமராஜர் அப்பாவை குருநாதராகவும், தன்னை சீடராகவும்தான் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது. அப்பாவுக்கு நம்பிக்கை உரியவர் ஆனார்.


1940_ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். அப்பா தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார். இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக அப்பாவிடம் கேட்டார். அப்பா அவரிடம், “நாட்டின் நன்மையை கருதி நீங்கள்தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். அப்பா கூறியதை தட்ட முடியாத காமராஜர் போட்டியிட்டார். தேர்தல் தியாகராஜநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடந்தது. அப்பா இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, “நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்'’ என்று கேட்டுக் கொண்டார்.


தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். அப்பா காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த அப்பாவின் தியாகத்தை பற்றி நான் சொன்னால் அது சரியாக இருக்காது.


காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அப்பா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55_வது வயதில் இறந்து விட்டார். அப்பாவின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார். காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூற முடியும்.


காமராஜர் முதல்_அமைச்சர் ஆனபிறகு தியாகராயநகரில் இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். அவர் எங்களிடம் என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்'’ என்று கூறுவார்.
ஒரு நாள் அவரது தாயார் சிவகாமி அம்மையார் எங்களது வீட்டுக்கு வந்தார். அம்மா பாலசுந்தரத்திடம்விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க'’ என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். அம்மா அதை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார். உடனே அவர், “முதல்_அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்'’ என்று அம்மாவிடம் கூறினார். இதை கேட்ட அம்மா மவுனம் ஆகிவிட்டார். இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் அம்மாவிடம் எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்'’ என்று கூறினார்.


காமராஜர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அம்மா கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார். காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. எங்களை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். நாங்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டோம். அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை நாங்கள் அவரது திருமண விழாவாக நினைத்து கொண்டோம்.
அவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார். முதல்_அமைச்சராக இருந்தபோது அவரும், நாங்களும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆந்திர முதல்_மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் என்னுடைய மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார்.


திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் டயர்கள்'’ சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்_அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பா மீது அவர் அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு என்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால்தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.


மாநகராட்சி வளாகத்தில் அப்பாவின் உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
எங்கள் தந்தையை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார். 


குரு சிஷ்யன் காமராஜரைப் பற்றி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேட்டி சத்தியமூர்த்திதான் காமராசரின் குரு. 1940_ல் த.நா. காங் கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராசர் இருந்தார். அவரது குரு சத்தியமூர்த்தி த.நா.காங்கிர சின் செயலாளர்.


வெள்ளைக்கார அதிகாரிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருந்த காலம் அது. சென்னை மாநகர மேயராக இருந்த சத்தியமூர்த்தி சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினைக் காகப் பெரிய பெரிய திட்டங் களை எல்லாம் கொண்டு வந் தார். பூண்டி நீர்த்தேக்கத் திட்டம் அப்போது உருவானதுதான். மாநில அரசு அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அப்போது சென்னை கவர்ன ராக இருந்த ஆர்தர் ஹோம் பூண்டி நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் சத்திய மூர்த்தியும் விழாவில் கலந்து கொண்டார்.


சத்தியமூர்த்தி மீது காமராஜுக்கு வருத்தம் ஏற்பட்டது. சத்தியமூர்த்தியைப் போய் சந்தித்தார்.வெள்ளைக்கார கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டது ஏன்?'’ என்று கேட்டார். தண்ணீர் பிரச்சினை மிக முக்கியமானது. மேலும் நான் மேயர் என்ற முறையில்தானே கவர்னர் விழாவில் கலந்து கொண்டேன்'’ என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
மேயராக இருந்தாலும் காங்கிரஸ்காரர்தானே. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுதான் எனக்கு முக்கியம்'’ என்றார் காமராஜ். நீ என்னப்பா சொல்ற? நடந்தது நடந்து போச்சு இப்போது என்னை என்ன செய்யச் சொல்ற'’ பதறினார் சத்தியமூர்த்தி. நீங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டு த.நா. காங்கிரஸ் கமிட்டிக்கு உங்கள் கைப்பட எழுதி கொடுங்கள் மன்னிப்புக்கேட்டும் நீங்கள் எழுத வேண்டும்'’ காமராஜ் குரலில் உறுதி இருந்தது.


சற்று நேர அமைதிக்குப் பின் காமராஜ் கேட்டது போலவே ஒரு கடிதம் எழுதி சத்தியமூர்த்தி காமராஜ் கையில் கொடுத்தார். அதை காமராஜ் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார். சில நாட்களில் டெல்லியில் இருந்து காமராஜருக்கு ஒரு தபால் வந்தது. காங்கிரசின் மேலிடத் தபால். சத்தியமூர்த்தி கவர்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது அது பற்றி எழுதவும்'’ என்பதுதான் சாராம்சம். உண்மைதான்! ஆனால் மேயர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்திருக் கிறார் என்று த.நா.கா.க. தலைவர் என்ற முறையில் காமராசர் பதில் எழுதினார். அந்தப் பதிலோடு அந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போய் விட்டது.

காமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கே முன்னுரிமையளித்தார். அவரது ஆட்சி காலத்தில் தமிழகம் வளமிக்க மாநிலமாக பொற்கால ஆட்சி நடந்ததற்கு சில நற்சான்றுகளாய் விளங்கும் சாதனைகள் வருமாறு:
காமராஜரின் ஆட்சி காலத்தில்தான்
கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள்
அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.


காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.
தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்
கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.
தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.
உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.


பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை.
பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்

சிமெண்ட் தொழிற்சாலைகள்.
மேட்டூர் காகித தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை
சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.
சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.


மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.
அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.
தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.


15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.
18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.
471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.


தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.
6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.
தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்


இவை
போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது
கர்மவீரர் காமராஜர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை.


சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார். முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும். அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராசரின் உத்தரவு.


முதல்-அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை.முதல்-அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். அதைப் பணமாக மாற்றுவதற் காகவே காமராசரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது.


முதல்-அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார். அவரது அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் செய்தால் விமான டிக்கெட்டு களை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும்.


பழைய தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு பணம் கொடுத்து விடுவார்கள். மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார். மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பார்.
அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.வெளியூர்களில் பயணம் செய்யும் போது பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா) தான் பெரும்பாலும் தங்குவார். அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பயணிகள் விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.


காமராசரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார். யாராவது யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும்.


காமராசரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராசரே கொடுத்து வந்தார். (எனக்குதான் டிரைவர் அலவன்ஸ்'’ என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே, அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார், பெருந்தலைவர்)


காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. (இது அப் போதைய அமைச்சர் ராசாராம் சொன்ன தகவல் என்று `சாவிஎழுதியுள்ளார்) காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.


ராம் மனோகர் லோகியா என்று வட இந்தியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டவர். வெளி நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் வெளிநாட்டு இலாக்கா என்று ஒரு பிரிவு இருந்தது. அந்த வெளிநாட்டு இலாக்காவுக்கு லோகியாதான் தலைவ ராக இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதையத்தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேறிய லோகியா சோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.


லோகியாவுக்குக் காங்கிரஸ் கட்சியே பிடிக்கவில்லை. நேரு என்றாலே வெறுப்பு. நேருவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு. நேருவின் கொள்கைகளை மிகவும் கடுமையாகச் சாடுவது லோகியாவின் வாடிக்கையாகி விட்டது.


நேரு பிரதமராக இருந்தபோது லோகியா எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே நேருவுக்குப் பின் யார் என்று ஒரு பிரபலமான கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.
ஒரு முறை ஒரு பத்திரிகை நிருபர் நேருவுக்குப் பின் யார் _ உங்கள் கருத்து என்ன?” என்று லோகியாவைச் சீண்டினார். காமராஜ் இருக்கும் போது என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று லோகியா சொன்னார்.


நேரு இறப்பதற்குப் பல ஆண்டு களுக்கு முன்பே லோகியா இவ்வாறு சொன்னார். அகில இந்திய காங்கிரசில் லோகியா இருந்த போதே தமிழ்நாட்டு காமராசரை லோகியா உன்னிப் பாகக் கவனித்து வந்துள்ளார். நேருவுக்குப் பின் காமராசர் தான் வருவார் என்பதை அப்போதே கணித்து வைத்து விட்டார்.


நேருவுக்குப் பின் காமராசர் டில்லி அரசியலில் கிங் மேக்கர் ஆனார். ஆனால் அதைக் காண்பதற்கு லோகியா உயிருடன் இல்லை. நேருவுக்குப் பின் யார்? சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காக பணியாற்றிய தலைவர்கள் மறைந்து விட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


இப்படிப்பட்டவர்களில் பெருந்தலைவர்'’ என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்து துதிக்கும் தலைவர்தான் காமராஜர். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர். நாட்டு நலனே எனது நலன்'’ என்று கருதி காந்திய வழியில் நின்று அரும்பாடுபட்ட காமராஜர் தான் கொண்ட கொள்கைகளை பதவி சுகத்துக்கு பறிகொடுக்காத உத்தமர்


பெருந்தலைவர் காமராஜர்

இன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம். காமராஜ்  எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர்,தென்னாட்டு காந்திபடிக்காத மேதைஅரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை
சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்


காமராஜரின் பொன்மொழிகள்

* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்
* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது
* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து
* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்
* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்
* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
* நான் வட இந்தியாவைப்ம் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான்.
* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை
* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது
* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்
* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்
* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது
* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது'’
* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்
* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.
* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது
* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து மீ்ட்க்க முடிந்த மட்டும் பாடுபடு வேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை
* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்
* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்


July 11, 2011

ஜென் தத்துவத்தின் சாராம்சம்

நீ நீயாக இரு, இயல்பாக இரு.
அந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.
கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. 
யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.
எளிமையாக இரு. 
நான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா. 
இயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு. 
இதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா. 
எதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது. 
- இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். 


உள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் துறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்னின் சிறப்பு அம்சங்களாகும்.


ஒரு சிறிய ஜென் தத்துவம்.
பசித்தால் சாப்பிடு.
தூக்கம் வந்தால் தூங்கு.July 6, 2011

ஏழு விஷயங்கள்

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவி செய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்க கற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

திருமுறை பாடல் - 5

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே


பொழிப்புரை இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும், மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும், வீசுகின்ற தென்றலின் சாயலும், செறிந்த இளவேனிலின் மாட்சியும், ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்.

குறிப்புரை மாசில் - குற்றமில்லாத; சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய. மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி. பௌர்ணிமை மதியைக் குறித்தது. வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய. இளவேனில் - சித்திரை, வைகாசி மாதங்கள். மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள். அறை - ஒலிக்கின்ற. பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை. ஈசன் எந்தை, இருபெயரொட்டு. தலைவனாகிய என் தந்தை. இணையடி - இரண்டு திருவடிகள். திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ; வீணை, செவி. மதியம், கண்கள். தென்றல், மூக்கு. வண்டு அறை பொய்கை, வாய். வேனில் மெய். இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார்.

நாவுக்கரசரைக் கொடும் சுண்ணாம்பு அறையில் அடைத்தார். சிவபெருமானின் இணையற்ற திருப்பாதங்களை நிழலாக நினைத்த நாவுக்கரசருக்குச் சுண்ணாம்பின் வெப்பம் ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு அது எப்படி இருந்தது தெரியுமா? இனிமையான வீணை இசையும், மாலை நிலாவும், வீசும் தென்றலும், குளிர்ச்சியான பொய்கையும் போன்று இதமாக இருந்தது. இதை அவர் இப்படி, அழகாகப் பாடி இன்புற்றார்.

July 2, 2011

திருமுறை பாடல் - 4

திருமழபாடி பண் :  நட்டராகம்

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.பொழிப்புரை பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து ,  மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?