June 19, 2011

திருமுறை பாடல் - 3

திருவெண்ணெய்நல்லூர்


பித்தாபிறை சூடீபெரு
    மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
    அல்லேனென லாமே.


பொழிப்புரை பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!


குறிப்புரை பொருளியைபுக்கேற்பத் திருப்பாடல்களுள் மொழிமாற்றி உரைக்கப்படுமாற்றை அறிந்துகொள்க. பித்தன் - பேரருள் உடையவன்; பேரருள் பித்தோடு ஒத்தலின், `பித்து` எனப்படும். எனவே, பேரருள் உடைய சிவபெருமானுக்கே, `பித்தன்` என்னும் பெயர் உரியதாயிற்று. இனி, `சிவபெருமான்` பிறர்வயம் இன்றித் தன்வயம் உடைமையாற் செய்யுஞ் செயல்கள் பிறரால் அறிதற்கு அரிய நெறியினவாய், ஒருநெறிப்படாத பித்தர் செயலோடு ஒத்தல் பற்றியும் அவன், `பித்தன்` எனப்படுவன் என்ப. அச்செயல்களாவன, `வேண்டப்படுவதனைச் செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல்` என்பன. இவற்றை முறையே, `கர்த்திருத்துவம், அகர்த்திருத்துவம், அந்யதாகர்த்திருத்துவம்` என்பர். எனவே, `பித்தன்` என்றது, பின்வரும், `பெருமான் (பெருமை யுடையவன் - தலைவன்)` என்றதன் காரணத்தைக் குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று. `பிறைசூடி` என்றதும், `பித்தன்` என்றதனாற் பெறப்பட்ட பேரருளை ஆளுந்தன்மைக்குச் சான்றாய், பின்வரும், `அருளாளன்` என்பதன் காரணத்தை அங்ஙனம் உணர்த்தியதேயாம். தக்கனது சாபத்தால் இளைத்து வந்த சந்திரனை அவன் அழியாதவாறு காக்க அவனது ஒரு கலையைச் சிவபெருமான் தனது முடியிற் கண்ணியாகச் சூடிக்கொண்டமையால் அஃது அவனது பேரருளுக்குச் சான்றாயிற்று. அருட்டுறைப் பெருமான் சுவாமிகளை நோக்கி, `முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே - என்பெயர் பித்தன் என்றே பாடுவாய்` (தி.12 பெ.புரா. தடுத்.73) என்று அருளினமையின், இத்திருப்பதிகத்தின் முதற்சொல்லாகிய, `பித்தா` என்பது, இறைவன் அளித்த சொல்லாதல் வெளிப்படை. இனி, `அச்சொல்லை இறைவன் முன்னை ஆசிரியரது திரு மொழியினின்றே எடுத்து அளித்தனன்` என்பது, அச்சொல்லை அடுத்து சுவாமிகளது பயிற்சி வாயிலாகத் தோற்றுவித்த, `பிறைசூடி` என்னும் தொடரால் பெறப்படும். அஃது எங்ஙனம் எனின், `பித்தா பிறைசூடீ` என்னும் தொடர், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப் பாடலிடத்து முன்பு தோன்றி விளங்குதலின் என்க. அத்தொடர் அமைந்த அவரது திருப்பாடல்: விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே (தி.1 ப.89 பா.3) வன்றொண்டப் பெருமானாரை இங்ஙனம் முன்னை ஆசிரியர் திருமொழிவழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது, இவரை, முன்னை ஆசிரியர்களது பெருமையையும், அவர்களது திருமொழிப் பெருமையையும் இனிது விளக்கி அடியார்க்கு அடியாராம் வழிநிலை ஆசிரியராகுமாறு செய்யும் குறிப்பினைப் புலப்படுத்தவாறாம். முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும். அதனை இவர், `நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை` (தி.7 ப.67 பா.5) என்று குறித்தருளுவார். அத் திருப்பாடலிற்றானே, ` தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை` என்று, தம்மை இறைவன் வழிநிலை ஆசிரியராக்கினமையையும் குறிப்பால் அருளிச்செய்வர். அங்ஙனம் இவர் அருளிச்செய்வதற்கு ஏற்ப, இவரைத் திருவாரூரில் இறைவன் தன் அடியார்க்கு அடியராகச் செய்து, திருத்தொண்டத் தொகை பாடுவித்தமையையும், அது பற்றிப் பின்னரும் இவர், `நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்` (தி.7 ப.78 பா.10) எனத் தம்மைக் குறித்தருளினமையையுங் காண்க. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் ஆகிய அவ்விருவர்க்கு முன்னரும் ஆசிரியர் உளராயினும், ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று திருப்பதிகம் அருளிச்செய்து திருவருள் நெறியைப் பரப்பும் தொண்டினை அவ்விருவர் வாயிலாகவே நிகழச் செய்தமையால், பேராசிரியப் பெருந்தன்மையை அவ்விருவரிடத்தே இறைவன் வைத்தானாவன். அதனைத் திட்பமுற உணர்ந்தே சேக்கிழார் நாயனார், அவ் விருவரையே, `பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் ணிரண்டு` (தி.12 பெ.புரா.திருநாவு. 185) என வரையறுத்து அருளிச் செய்தார். அவ்வாசிரியர்வழி நிற்பிக்கப்பட்ட இச்சுவாமிகளை இறைவன் முதற்கண், `மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்றும், பின்னரும், `இன்னும் பல்லாறுலகினில் நம்புகழ் பாடு` என்றும், (தி.12 பெ. புரா. தடுத். 70,76) ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று பாடப் பணித்தமையால், ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பேராசிரியராயது எவ்வாறு என்பது இனிது விளங்கும். இனி, செல்லும் இடங்களில் எல்லாம் ஞானசம்பந்தரைச் சிவிகை, சின்னம் முதலியவைகளுடன் செல்லச் செய்தமையால், அவ்விருவருள்ளும் தலைமைத் தன்மையை இறைவன் ஞானசம்பந்தரிடத்து வைத்தமை புலனாகும். இவற்றானே, நால்வர் ஆசிரியருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் முதற்கண் வேறு வைத்து, `மூவர் முதலிகள்` என வழங்குமாறும் இனிது என்பது பெறப்பட்டது. இனி, பலவிடத்தன்றிச் சிலவிடத்துச் சென்று இறைவன் பொருள்சேர் புகழை மிகப்பாடிய அருளாசிரியர் திருவாதவூரடிகளே யாதலின், அவர் நான்காம் ஆசிரியர் ஆயினார் என்க. அன்றியும், மூவர் தமிழும் இசைத் தமிழாயும், அடிகள் தமிழ் இயற்றமிழாயும் இருத்தல் கருதத்தக்கது. உளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து பாடி அன்பு மீதூர்ந்து இன்புறும் அன்புப் பாடல்களுக்கு இயற்றமிழினும், இசைத்தமிழே சிறந்து நிற்பது என்பது, `கோழைமிட றாககவி கோளும்இல வாகஇசை கூடும்வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன்` (தி.3 ப.71 பா.1) எனவும், `கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால் ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே` (தி.3 ப.52 பா.7) எனவும், `அளப்பில கீதம்சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே` (தி.4 ப.77 பா.3) எனவும் போந்த ஆசிரியத் திருமொழிகளால் பெறப்படும். இத்துணையும் இத்திருப்பதிகத்தின் தொடக்கத்தால் அறியற் பாலவாயின என்க. `எதனால்` என்பது, `எத்தால்` என மருவிற்று. `எத்தாலும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `வைத்தாய்` என்பதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வைத்தது தவங் காரணமாக என்க. `திருவெண்ணெய்நல்லூர்` என்பது தலத்தின் பெயர்; `அருட்டுறை` என்பது கோயிலின் பெயர். `இப்பொழுது அல்லேன் எனல் ஆமே` என்றதனால், `ஆளாயது முன்பே` என்பது போந்தது. `முன்பு` என்றது, திருக்கயிலையில் இருந்த காலத்தை. `ஆமே` என்ற ஏகார வினா, `ஆகாது` என எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே (தொல். சொல். 246) என்பது இலக்கணமாதலின் இத்திருப்பாடல், சுவாமிகள் தம் முன்னை நிலையை நினைந்து அருளிச்செய்தது.

No comments:

Post a Comment