April 10, 2011

அண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்

27 வயது இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய கோபம், 72 வயது காந்தியவாதிக்கு ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவோரைத் தண்டிக்க வகை செய்ய லோக்பால் திருத்த மசோதாவை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே.

உண்ணாவிரதம் என்றால் வீட்டிலேயே டிபன் முடித்துவிட்டு பந்தலுக்கு வந்து காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்துபோகிற உண்ணாவிரதம் அல்ல இது. காந்திய உண்ணாவிரதம். தனது அறப்போராட்டத்தைத் தொடங்கு முன்பாக, எனிமா உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முடித்துக்கொண்டு முறையாகத் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம்.

அவரது கோரிக்கை மிக எளிமையானது. லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்; அதில் மக்களின் பிரதிநிதிகள் சரிபாதி பேர் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது சட்டத்தை ஓட்டைகள் இல்லாதபடி கடுமையானதாக உருவாக்கினால் மட்டுமே, இதனால் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது ஹஸாரே முன்வைக்கும் நியாயமான வாதம்.

அமைச்சர்கள் மட்டுமே ஒன்றுகூடி அதிகாரிகளின் துணையோடு உருவாக்கும் சட்டம், அவர்கள் தவறு செய்தால் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வசதியாக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. இவர்கள் மட்டுமே ஒன்றுகூடி, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை அதில் ஓட்டைகள் இல்லாமல் உருவாக்க மாட்டார்கள், உருவாக்கப் போவதில்லை. அதனால்தான் இந்தக் கோரிக்கை.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காகத் தண்டனை பெற்ற அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஒருசிலர் மட்டுமே. அத்தனை அமைச்சர்களும் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபர்கள். எப்படி இத்தனை சொத்துக் குவிந்தது என்று கேட்க ஆளில்லை. அதைத் தடுக்க முறையான சட்டமும் இல்லை.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரத்தைத் தர வேண்டியதில்லை என்று சொல்லும் நியாயம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். அரசு ஊழியர்கள் சொத்து வாங்கினால் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விதிகள் இருந்தும், மதிக்கப்படாத ஒரு சட்டமாகவே அது இருந்து வருகிறது. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லை, தண்டிக்கவும் முடியவில்லை என்றால் மக்களாட்சி என்பதற்கு என்னதான் அர்த்தம்?

சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை மட்டுமே லஞ்சம் கொடுத்துச் செய்யலாம் என்ற நிலைமை மாறி, சட்டப்படி ஒரு குடிமகனுக்கு உரிமையுள்ள வருமானச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், சாதிச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், அரசு தரும் இலவச டி.வி.க்கும் லஞ்சம், குடும்ப அட்டை பெற லஞ்சம், குடும்ப அட்டையை வேறு முகவரிக்கு மாற்றினால் அதற்கும் லஞ்சம் என்கிற நிலைமை. ஒரு ஏழையின் குமுறலை, சராசரி இந்தியக் குடிமகன் அன்றாடம் படும் அவஸ்தையை யார் அறிவார்? அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இந்த வலி தெரிய நியாயமில்லை. ஆனால் அண்ணா ஹஸாரே போன்றோருக்குத் தெரிகிறது.

உண்ணாவிரதம் மூன்று நாள்களை எட்டிய பிறகு, குறிப்பாக அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகும்போதுதான் மத்திய அரசுக்கு இதன் தீவிரம் புரிகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வந்து பேச்சு நடத்துகிறார். கூட்டுக்குழுவில் பங்கு பெறலாம். ஆனால், அந்த விவரம் அரசாணையில் இடம்பெறாது; அரசியல் சட்டநிர்ணயத்தின்படி சில சிக்கல் இருப்பதால்தான் இந்த ஏற்பாடு என்கிறார்.

இது ஏதோ நல்ல யோசனை என்பதாகத் தோன்றக்கூடும். ஆனால், இது பசிக்காக அழுகிற குழந்தைக்குப் பஞ்சு மிட்டாயைக் காட்டி கவனத்தைத் திருப்பும் உத்திதான். இதற்கு உடன்பட்டால் என்ன ஆகும்? இக்கூட்டுக் குழுவில் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை வலியுறுத்துவார்கள். அமைச்சர்கள் தலையாட்டுவார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்த கருத்துகள் நீர்த்துப்போய், சட்டத்தின் ஓட்டைகள் மீண்டும் கண்திறக்கும். அந்த நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெறாதவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இந்த மக்கள் பிரதிநிதிகள் இருக்கக்கூடும். ஆகவேதான், இதைச் சட்டப்படியாக, மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பையும் அரசாணையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் ஹஸாரே தரப்பினர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலையும், கார்கில் வீரர்கள் பெயரில் வீடுகட்டும் ஊழலையும் பெரிதாகப் பேசும் எதிர்க்கட்சியினர், இப்படி ஒரு சட்டத்தை முதலிலேயே சரியானபடி நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியிருந்தால், இந்தச் சட்டம் முறையாக அமலாக்கம் செய்யப்பட்டிருந்தால், இத்தனை ஊழலும் நடந்திருக்குமா?

ஹஸாரே என்ற தனிமனிதரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு பெருகுகிறது. தில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய அவரது உண்ணாவிரதத்தின் தாக்கம் பெருநகரங்களைத் தாக்கி, இப்போது இந்தியாவின் நகர்ப்புறங்களைக் கடந்து கிராமப்புறங்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறது.

சராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹஸாரே பிரதிபலிக்கிறார். அண்ணா ஹஸாரேயின் உண்ணாவிரதம் முடிவுக்கு வர வேண்டுமானால் பிரதமரின் மௌனம் கலைய வேண்டும். அரசின் பிடிவாதம் தளர வேண்டும்.

மக்கள் குரலே மகேசன் குரல். அண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்!

நன்றி தினமணி

No comments:

Post a Comment