February 20, 2011

சப்த கன்னிகைகள் பூசித்த சருக்கம்


தேவர்களுடன் அசுரர்கள் பலதரம் எதிர்த்துத் தோற்று விடுவதைக் கண்டு, தேவர்களைச் ஜெயிப்பதற்கு யாதொரு சூட்சியும் தோன்றாது தங்கள் குல குருவாகிய சுக்கிர பகவானைக் கண்டு பணிந்து தேவர்கட்கு வெற்றியை உண்டாவதற்குக் காரணம் என்னவென்று கேட்க.


சுக்கிரபகவான் அசுரர்களை நோக்கி ஐயன்மீர்! தேவர்கள் எக்காலமும் தோல்வி அடையாதபடி அத்திரி. ஆங்கிரசர். கௌதமர். சமதக்கினி. பரத்தவாசர். வசிஷ்டர். விஸ்வாமித்திரர் ஆகிய சப்த முனிவர்களும் மகாகயிலாயத்தின் அடிவாரத்தில் யாகம் செய்து கொண்டு அப்பலனைத் தேவர்கட்குக் கொடுத்து வருகிறார்கள், அம்முனிவர்களைக் கொல்ல உங்களால் முடியாது, அவர்கள் செய்து வரும் யாகத்தினைக் கெடுத்து விடுவீர்களானால் உங்கட்கு ஜெயம் உண்டாகுமென்றனர்,


அதைக் கேட்ட அசுரர்கள் உடனே முனிவரிடம் சென்று யாகம் விருத்தியாகாதபடி அனேக இடையூறுகளைச் செய்து தேவர்களை எதிர்க்க எத்தனித்து இருந்தார்கள்.
இது சங்கதி இந்திரன் அறிந்து மேற்படி முனிவர்களின் பத்தினிமார்களாகிய சப்த கன்னிகையரை வணங்கி நடந்த வரலாற்றைக் கூறி மேலும் சொல்லுவானாயினான்,  
இருடி பத்தினிகளே! நீங்கள் கிருபை கூர்ந்து தட்சண திசையில் பாலிநதி தீரத்தில் திருவூறலெனும் திவ்விய திருப்பதியில் தக்கோல விருட்சத்தின் அடியில் கிரிராஜ கன்னிகாம்பாள் பாகத்தில் ஞானசாம் பிராச்சிய கருப்பகத்தருவில் பழுத்த சிவ மணங் கமழும் தெய்வக் கன்னியைத் தரிசித்து எங்கள் குறைகளைச் சொல்லித் தவம் புரிந்து உங்களுடைய கணவர்கள் வளர்க்கும் யாகத்திற்கு இடையூறு உண்டாகாதபடி வரம் பெற்று வரக் கடவீர்கள் என்றனர்,


சப்த கன்னியர்களும் மனமுவந்து அங்ஙனமே சென்று திருவூறல் தலத்தினை அடைந்து தவஞ்செய்து வருகையில். இதனைக் கேள்வியுற்ற அசுரர்கள் இவர்கள் தவத்தினையும் கெடுக்க அத்தலத்தினைக் குறுகினார்கள்,


உடனே அத்தலத்துச் சிவ சண்முகக் கடவுள் ஒரு மனித கோலங்கொண்டு எதிரே சென்று சிறிது நேரம் வேடிக்கையாக யுத்தஞ் செய்து அசுரர்களையெல்லாம் ஒரு குன்றுக்கருகே மடியச்செய்து சப்த கன்னியர் முன் வந்து பிரத்தியட்சமாக நடந்த வரலாற்றினைக் கூற அக்கன்னிகைமார்கள் பாக்கியமே! பாக்கியம். எங்கட்கு வந்த இடையூற்றினை மாற்ற எங்கட்குத் தெரியாமலே சென்று எங்கள் பகையாளிகளைச் செயித்த கருணையங்கடலே! கிருபாசமுத்திரமே! எங்களின் பொருட்டு அசுரனைக் கொன்ற இடம் கந்தப்பர் குன்றென வழங்கக்கடவது,


தேவரீர் கந்தப்பர் எனும் அருமைத் திருநாமத்துடன் இத்தலத்தில் திருக்கோயில் தனியே கொண்டெழுந்தருளியிருந்து இத்தலத்து அடியார்கள் யாவருக்கும் கிருபை செய்தருள வேண்டுமென்றனர், அங்ஙனமே யாகுகவெனக் கிருபையாலித்தருளி ஆறுமுகச்சிவனார் அந்தர்த்தாமாயினர்


கன்னிகைமார் பழைய படியே தவஞ் செய்து வருகையில் ஒரு நாள் பரமசிவன் பார்வதி சமேதராய்ப் பிரத்தியட்சமாகி அவர்கள் தவத்தினுக்கு வியந்து பாராட்டி அவர்கள் கோரிக்கையின் படி அவர்கள் நாயகர்களாகிய முனிவர்களின் யாகத்திற்குச் அசுரர்களாக யாதொரு விக்கினமும் எக்காலத்தும் உண்டாகாதபடி வரந் தந்தருளி எழுந்தருளினர்,


சப்த கன்னிகைமாரும் வெகுகாலம் அத்தலத்துச் சிவாலயத்திலேயே பலநாள் தவஞ்செய்து கொண்டிருந்து தங்களிருப்பிடம் சென்றடைந்து சுகமே வாழ்த்து வந்தனர்,

No comments:

Post a Comment