December 2, 2010

தோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)

நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த Super Brain Yoga’. இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?  

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer
போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.


மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா? 

1)இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதுபற்றி கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

2)
வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3)
இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4)
அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.


இந்த தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம்.

No comments:

Post a Comment