December 11, 2010

தக்காளி தேவிசிவமயம்


ஒருகாலத்தில் சிவமணமே எத்திக்கினும் வீசப் பெற்ற திருவூறல் மாநகரினைச் சிவாதித்தன் என்னுமொரு அரசன் ஆண்டு வந்தனன் அவன் மனுநீதியும் தரும சிந்தையும் எவ்வருணத்தாரையும் காக்குங்குணமும் சிவபெருமான் திருவடியில் மாறாத அன்புடையவனாக இருந்தான்,


அவன் ஒருபொழுதும் சிவபூஜையின்றிப் புசிப்பதில்லை சிவலிங்கத்தையும், சிவனடியார்களையும், விபூதி, ருத்திராட்சதாரணம், பஞ்சாட்சர செபமுள்ள அன்பர்களைக் காணும்போது சிவபெருமானைக் கண்டதாக நினைந்து தொழுவான் சிவனடியார்கள் விரும்பிய எப்பொருள்களையும் இல்லை யென்னாது கொடுப்பான், தன்னரசின் கீழ் வாழுங்குடிகள் எவ்விதத்திலும் வருந்தாவண்ணம் காத்துவருவான்,


இக்காலத்தில் தக்கன் என்னும் ஒரு அசுரன் பிரமனை நோக்கித் தவங்கிடந்து ஆயிரம் சிங்க வலிமையுற்றுத் திருவூறல் தலத்திற்குள் மாத்திரம் பிரவேசியாது சுற்றிலுமுள்ள யாவருக்கும் உபத்திரவம் செய்துகொண்டு எல்லா அசுரர்களையும் ஜெயித்துத் தன்னிகரீன்றி வாழ்ந்து வந்தனன்,


சிவாதித்தன் என்னும் அரசன் கேள்வியுற்று அவனை எதிர்த்துச் ஜெயிக்கும் வலியிலனாய்த் திருவூறனாதனை அடைந்து விண்ணப்பித்துக் கொண்டான் அக்கருணையங்கடலாகிய பெருமான் அவ்வரசனிடத்து வைத்த அன்பின் மிகுதியால் தனது வலது பக்கத்தில் வீற்றிருந்தருளும் மயிலிளஞ்சாயல் போன்ற மலைகளை நோக்கி பார்வதி!
நமது அன்பனாகிய அரசன் வேண்டுகோளுக்கியைந்து நீ உனது மேனியினின்றும் ஒரு காளியினை உண்டாக்கி உலகத்திற்கு வெகு உபத்திரவத்தினைச் செய்துவரும் தக்காசுரனைச் சம்மாரஞ் செய்விப்பார் என்றவுடன் அம்பாளை இசைந்து ஒரு காளி தேவியை உண்டாக்கி அவளுக்குத் துணையாக ஆறு கன்னீயரைக் கூட்டிக் காளியைப் பார்த்து மாதே நீ இக்கணம் போய் தக்காசுரனைச் சங்கரித்து வரக்கடவை என்ற மாத்திரத்து அக்காளீ சிங்கத்தின்மேல் ஆரொகணித்துக்கொண்டு சென்று எங்கும் தேடிபார்த்து ஒரு மலையடிவாரத்திற் கண்டு பிடித்துச் சண்டைக்கு அழைத்தனள்.
அவ்வசுரன் தர்க்கியும் மற்றையரையும் பார்த்து மிக இரக்கமுடையான் போல் நங்கைமீர்! ஏன் வீணில் உயிரைத் துறக்கின்றீர் நான் மாதர்களை வருத்திவதில்லை இவ்விடம் விட்டு விரைந்து செல்லுவீர் என்றான் 


அப்போது தேவியார் மிகுந்த சினங் கொண்டு தக்கா! நீ புருஷனன்று போலும் நீ புருஷனாயின் யுத்தஞ் செய் இனி நீ பிழைப்பதில்லை இதோ இந்த பாணத்திற்கு விடைசொல் என்று ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்தனள் அசுரன் அந்த பாணத்தினை தடுத்துக்கொண்டு சந்திரா ஸ்திரத்தினை விடுத்தான் தேவியார் சூரியாஸ்திரம் விட்டுத் தடுத்துச் சர்பாஸ்திரத்தினை விடுத்தனள், அசுரன் கருடாஸ்திரம் விட்டுத்தடுத்து மோகனாஸ்தரம் விடுத்தனன் தேவி ஞானாஸ்திரம் விட்டுத் தடுத்து 5 பாணங்களைத் தொடுத்து அவன் சரீரத்தில் 5 துளைகளையுண்டாக்க இரத்தம் ஆறாகப் பெருகிற்றுஅவன் பயந்து தப்பித்து ஓட ஆரம்பித்தபோது சப்த கன்னியர் எதிர்த்துக் கொண்டனர்


அசுரன் மிகுந்த ஆவேசங்கொண்டு மறுபடியும் ஒரு தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு வந்தனன் தேவி அத்தண்டத்தைப் பிடுங்கி எறிந்து விட்டுத் திருவடினால் ஆகாயத்தில் தூக்கி எறிந்தனள். அவன் அனேகமாயிரங்காத தூரம் ஆகாயத்திலெழும்பி கீழே விழும் சமயத்தில் சத்த கன்னியரும் காளியும் மறுபடியும் தூக்கித்தூக்கிப் பந்து போலே எறிந்து விளையாட ஆரம்பித்தனர்


தக்கன் ஓலமிட்டனன். இங்ஙனம் சிறுதுநேரம் விளையாடிக் கொண்டிருந்து பின்னர் தேவி திருவடியின்கீழ் போட்டு மிதித்து விட்டனள், அவன்பிரமன் வமிசத்தில வந்தவனான படியால் தன்னுயிர் துறந்தபின் பிரமஹத்தி வடிவங் கொண்டு காளியைத் தொடர்ந்தனன்,
தேவி அது தெரிந்து திருவூறல் தலத்தில் பிரவேசித்தனள் அப்பிரமஹத்தி அத்தலத்திற்குள் பிரவேசிக்கமுடியாது எல்லையிலேயே நின்றுவிட்டது, இக்காலத்து அப்பிரமஹத்தி அவ்வூர் எல்லையினைக் கடவாது ஒருபுறத்திலிருந்து கொண்டிருக்கிறது,


காளி அத்தலத்தின் கீழ்திசையில் க்ஷரநதியின் தீர்த்தத்தால் ஒருசிவலிங்கம் அமைத்துப் பூசித்துப் பிரமஹத்தி தோஷத்தினை மாற்றிக்கொண்டு ஆனந்த நிர்த்தனம் செய்து கிரிராஜ கன்னிகையைத் தோத்தரித்துக் கொண்டிருக்கையில் அம்பாள் காளியின் பூசையைச் சோதிக்கக் கருதிச் சிலாநதி பிரமநதியென இரண்டையுண்டாக்கி அச்சிவலிங்கத்தை வேறோடு களையச் செய்தனள்


காளிகண்டு அஞ்சாது சிவலிங்கப்பெருமானை இறுகத் தழுவிக்கொண்டு வெள்ளத்தாள் அசையாதபடி செய்தனள் தேவிகண்டு சந்தோஷித்துக் காளியே! நினது பூசையைக்கண்டு மகிழ்ந்தோம் நீ தக்காசூரனைச் சம்மாரஞ் செய்தபடியால் உனக்குத் தக்காளி தேவி எனப்பெயர் வாய்ந்து இத்தலத்தில் தனி ஆலயங் கொண்டு உனை வணங்கும் அன்பர்கட்கு வேண்டிய வரங்களீந்து இத்தலத்திற்கு யாதொரு இடையூறும் வராத படி காத்தவரக் கடவாய், உன்னுடனிருக்கும் மற்ற 6 பெண்களும் உனக்குத் துணையாய் இத்தலத்தினைச் சுற்றிக்கோயில் கொண்டிருக்கக் கடவாரென்றுத் திருவாய் மலர்ந்தருளி மறைந்தனள்.திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment