December 25, 2010

கண்ணே, நலமாபத்து வருடங்களுக்கு முன்னால், குணப்படுத்தவே முடியாது என்று கருதப்பட்ட கண் நோய்கள் எல்லாம் இன்றைக்கு அதிநவீன சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடிகிறது. இருந்தாலும், மக்கள் மனத்தில் சில தவறான எண்ணங்களும், சந்தேகங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.
இவற்றை நீக்கவும், நவீன கண் மருத்துவ சாத்தியக்கூறுகளை விளக்கவும் இந்தக் கையேட்டினை ‘தி ஐ ஃபவுண்டேஷனி’ன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, ‘மங்கையர் மலர்’ வாசகியருக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்."


காடராக்ட் என்றால் என்ன?
நம் நாட்டில் பார்வைக் குறைவுக்கு மிக முக்கியக் காரணம் காடராக்ட் அல்லது கண்புரை அல்லது படலம்.
நம் எல்லோர் கண்களிலும் இயற்கையாகவே லென்ஸ் இருக்கிறது. அதன் வழியாக ஒளிக்கதிர், பின்னாலுள்ள விழித்திரையில் விழும்போது, நம்மால் பார்க்க முடிகிறது. இந்த லென்ஸ் வெளுத்துப்போய், வெளிச்சத்தைக் கண்ணுக்குள் புகாமல் தடுக்கும்போது, அதைக் கண்புரை, படலம் அல்லது காடராக்ட் என்கிறோம்.


காடராக்ட் வந்திருக்கிறது என்று எப்படி அறிவது?
கண் பார்வை மங்க ஆரம்பித்தால், அது புரை அல்லது படலத்தால் இருக்கலாம். இதைத் தவிர, எதிரே தெரியும் ஒளியைச் சுற்றி வானவில் மாதிரி வர்ணங்கள் தெரியும். கண்கள் கூசும். இரவுப் பார்வை குறைபாட்டாலும் இது உண்டாகும். இதுவும் புரை அல்லது படலத்தால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியே.


இதற்கு என்ன மருத்துவச் சிகிச்சை?
கண் புரையை அகற்ற (அதாவது காட ராக்டை குணப்படுத்த) அறுவை சிகிச்சை ஒன்றே தீர்மானமான வழி. பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னும் மிகச்சரியான மருந்துகள் காடராக்ட் வராமல் தடுக்கவோ, குணப் படுத்தவோ கண்டுபிடிக்கப்படவில்லை. காடராக்ட் என்பது, வயதாவதன் அறிகுறிகளில் ஒன்று; தலைமுடி நரைப்பது போல. பார்வைக் குறைபாட்டை அது உண்டாக்கும் போது, அதை நீக்கத்தான் வேண்டும். செயற்கை லென்ஸைப் பொருத்தி, சிகிச்சை அளித்துப் பார்வையைப் பெற முடியும்.


புரை முற்றிய பிறகுதான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா?
அல்ல. இது ஒரு தவறான கருத்து எப்போது பார்வைக் குறைபாடு அறியப்பட்டுவிட்டதோ, எப்போது நம் அன்றாட வேலைகளில் ஒரு தடை ஏற்படுகிறதோ, அப்போதே அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
முற்றிப் போனால் கண்ணுக்கும் ஆபத்து. அறுவைச் சிகிச்சையும் கடினமாகி விடும்.


அறுவைச் சிகிச்சைக்குப் பின் சோடா புட்டி கண்ணாடி அணிய வேண்டியிருக்குமா?
இப்போது அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது! ஒவ்வொரு வருக்கும் ஏற்ற மாதிரி, மிகத் துல்லியமாக பவர் கணக்கிடப்பட்டு, கண்ணுக்குத் தகுந்த லென்ஸ் பொருத்துவதால், கனமான கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இல்லை.


அப்படியானால் கண்ணாடி போடுவதை முற்றிலும் தவிர்க்க முடியுமா?
நிச்சயம் தவிர்க்க முடியும். சாதாரண மோனோஃபோகல் லென்ஸ் பொருத்திய பிறகு படிக்கவும், எழுதவும் கண்ணாடி தேவைப்படும். நிறைய சிலிண்டர் பவர் இருந்தாலும் தூரப் பார்வைக்கு இலேசான கண்ணாடி தேவைப்படலாம். இப்போது அதையும் தவிர்க்கிற மாதிரி மல்ட்டிஃபோகல் லென்ஸ் வந்து விட்டது. இது நவீன கண்ணாடி போல, பக்க-நடுத்தர-தூரப் பார்வை என எல்லாவற்றுக்கும் பயன்படும். படிப்பதற்கும் கண்ணாடி தேவையில்லை. இதே போல் சிலிண்டர் பவரைத் தவிர்க்க, டாரிக் லென்ஸ் ( Toric Lens ) இப்போது கிடைக்கிறது.


மல்ட்டிஃபோகல் மற்றும் டாரிக் லென்ஸ் தவிர லென்ஸ்களில் வேறு என்ன முன்னேற்றம்?
ஆஸ்ஃபெரிக் ( aspheric ) இன்ட்ரா ஆக்யுலர் லென்ஸைப் பொருத்தலாம். இதைப் பொருத்திவிட்டால், பார்வைத்திறன் மிகச்சிறப்பாக இருக்கும். எண்பது வயதுக்காரரின் கண் பார்வை கூட, இருபது வயதுக்காரரின் பார்வையைப் போல அத்தனைத் தெளிவாக இருக்கும்.


காடராக்ட் அறுவைச் சிகிச்சையிலேயே நவீன சிகிச்சை முறை என்ன?
ஃபேகோ எமல்ஸிஃபிகேஷன் என்று அல்ட்ரா சவுண்ட் முறையில், கண் பார்வையை மறைக்கும் புரை அல்லது படலத்தை, சிறு துவாரம் வழியாகக் கரைத்து விட்டு, அதே துவாரம் வழியாகவே லென்ஸைக் கண்ணுக்குள், தையல் இல்லாமல் பொருத்துவது தான் இன்று நவீன காடராக்ட் சிகிச்சை முறை.


மிகவும் வலிக்குமோ?
இப்போது ஓர் ஊசி கூட இல்லாமல் புரை அறுவைச் சிகிச்சை செய்து வருகிறோம். சொட்டு மருந்து விட்டு, எட்டு முதல் பத்து நிமிடங்களில் முழு அறுவைச் சிகிச்சையும் முடிந்துவிடுகிறது. கண்களுக்குக் கட்டுப் போட வேண்டிய அவசியம் கூடக் கிடையாது!


கட்டுப்போட வேண்டாம் - ஆனால் கட்டுப்பாடு ஏதும் உண்டா?
எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. சாதாரணமாக உணவு உட்கொண்டுவிட்டு, குளித்துவிட்டு, மருத்துவமனைக்குப் போனால், அன்றே சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம். உணவு, டீவி பார்ப்பது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது, வெளியூர்ப் பயணம் என்று எதிலுமே கட்டுப்பாடு கிடையாது. ஆறு வாரங்களுக்குக் கண்ணில் சொட்டு மருந்து விட வேண்டும். இரண்டு வாரங்களுக்குத் தண்ணீர் கண்களில் படாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்தே பழையபடி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடலாம்.


இரண்டு கண்களுக்கும் ஒரே நாளில் ஆபரேஷன் செய்யலாமா?
செய்யலாம்.என்றாலும், முதலில் ஒரு கண்ணைச் சீராக்கிய பிறகு சற்று இடைவெளி கொடுத்து இரண்டாவது கண்ணை ஆபரேட் செய்வது நலம். பொதுவாக, ஒரு வார இடைவெளி போது மானது.


காடராக்ட் அறுவைச் சிகிச்சையில் என்ன தவறு நேரலாம்?
பத்து நிமிடங்களில் அறுவைச்சிகிச்சை முடிந்து விடுகிறது என்பதற்காக, காடராக்ட் சிகிச்சையைக் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது.
எல்லா முன்னெச்சரிக்கைகளையும் மேற் கொண்டு எல்லா முன்னேற்பாடுகளையும் முறையாகச் செய்து முடித்து, தேர்ந்த கண் மருத்துவரின் உதவியுடன் நவீன முறை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.அப்படிச் செய்யாவிட்டால், பார்வை போவது உட்பட, பல சிக்கல்கள் ஏற்படக்கூடும்.


மனைவி கண்ணாடி அணிகிறாள். மகனும் கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டி வருமா?
ஹெரிடிடரியாக - அதாவது பரம் பரையாக - இப்படிப்பட்ட ரிஃப்ராக்டிவ் எர்ரர் எனும் பார்வைக் குறைபாடு இருந் தால், அதைத் தவிர்க்க முடியாது. அதற்காக, அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் எல்லோருக்குமே அப்படி வரும் என்று சொல்லவும் முடியாது. ஆனால் இப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பரிசோதனை மிகவும் அவசியம். கண்டு கொள்ளாமல் மட்டும் இருந்துவிடக் கூடாது. கண்டுபிடித்து விட்டால் சரிசெய்து விடலாம்.


ரிஃப்ராக்டிவ் எர்ரர் என்றால் என்ன?
கிட்டப் பார்வை (மையோபியா) அதாவது மைனஸ் பவர்; தூரப் பார்வை (ஹைபரோபியா)அதாவது ப்ளஸ் பவர் இருந்தால் அதை ரிஃப்ராக்டிவ் எர்ரர் என்பார்கள். கிட்டப் பார்வையில் கண்ணின் அளவு பெரிதாக இருக்கும்; தூரப் பார்வையில் கண்ணின் அளவு சிறியதாக இருக்கும். இவை இரண்டும் அல்லாமல், கருவிழியின் வளைவான அமைப்பில், மாறுபாடு இருந்தால் அதன் காரணமாக சிலின்ட்ரிகல் பவர் ஏற்படுகிறது. இதை அஸ்டிக்மாடிஸம் என்பார்கள். இவை எல்லாவற்றுக்குமே மைனஸ் அல்லது ப்ளஸ் கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸ்களோ அணியலாம். அல்லது லாசிக் சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.


நிறைய காரட், கீரை, ஜூஸ் குடித்தால், பார்வைக்குறைபாட்டைத் தவிர்த்து விட முடியுமா?
இது தவறான எண்ணம். காரட் ஜூஸ் குடிப்பது வைட்டமின் அளவில் நல்லது. ஆனால் அதற்கும் ரிஃப்ராக்டிவ் எர்ரர் எனப்படும் பார்வைக் குறைபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது ஒரு நோயும் அல்ல. வைட்டமின் குறைபாட்டால் மட்டுமே வருவதுமல்ல. முன் குறிப்பிட்ட மாதிரி பெற்றோர் வழியாக வருவதும் உண்டு. டீவி திரையைப் பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் கேம்ஸ் பார்ப்பதாலும் மட்டுமே பார்வைக் குறைபாடு வருவதில்லை.


வெள்ளெழுத்துக்கும் இதுவேதான் காரணமா?
நாற்பது வயதுக்கு மேல் பார்வைக் கோளாறு ஏற்படும் போது, அதை சாளேசுவரம் அல்லது வெள்ளெழுத்து என்கிறோம். இது தூரப் பார்வைக் குறைவும் அல்ல. கிட்டப் பார்வை குறைவும் அல்ல. கண்தசைகள் பலவீனம் அடைவதால், இயற்கையாகவே எல்லோருக்கும் உண்டாவதுதான்.


நாற்பத்தைந்து வயதாகும் ஒருவர், படிப்பதற்குக் கண்ணாடி போட்டிருக்கிறார். ஆனால் கம்ப்யூட்டரில் வேலை..
படிக்கிற கண்ணாடி போட்டுக் கொண்டால் மட்டுமே போதுமான கரெக்ஷன் செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது கம்ப்யூட்டர் பணிக்குத் தொடர்பு இல்லாதது. கம்ப்யூட்டர் திரை அருகிலும் இல்லை, தூரத்திலும் இல்லை. அதனால், அணிந்திருக்கும் படிப்பதற்கான கண்ணாடி மட்டுமே பயன்படாது. கிட்டப் பார்வை- தூரப் பார்வை இரண்டுக்குமே இடைபட்ட குறைபாட்டுக்கு பிராக்ரஸிவ் கண்ணாடிதான் சிறந்தத் தேர்வு.


கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
நாம் அச்சில் படிப்பது போன்ற எழுத்துக்கள் அல்ல, கம்ப்யூட்டர் திரையில் பார்ப்பது. கம்ப்யூட்டர் எழுத்து, பல புள்ளிகள் சேர்ந்து உருவான எழுத்து. இதை ‘பிக்ஸெல்’ என்பார்கள். இதைப்பார்த்துக் கொண்டே இருக்கும் போது அதிலிருந்து பார்வை விலகி ( driftஆகி ) விடும். மறுபடி மறுபடி ஃபோகஸ் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது பாதிப்பு ஏற்படுவதால் வலி உண்டாகிறது.


பையன் கம்ப்யூட்டர் கேம்ஸ் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, அரை மணி கழித்து, தலை வலிக்கிறது என்கிறான். கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் இப்படி தலைவலி வருகிறதா?
ஓரளவுக்கு இது கம்ப்யூட்டர் திரையின் ஒளியால் ஏற்படும் பாதிப்புத்தான். ஆனால், நவீன எல்சிடி திரையுள்ள கம்ப்யூட்டரில், இந்த ஒளியின் அதீத பாதிப்பு வரும் வாய்ப்பு குறைவு. கண்ணில் பவர் காரணமாகவோ, கண் தசை பலவீனத்தின் காரணமாகவோ இது ஏற்படலாம். அப்போதும் இம்மாதிரி அறிகுறி தெரியலாம். ஆனால் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க, செக்-அப் செய்து கொள்வது நல்லது.


கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் வந்தால் எப்படி குணப்படுத்துவது?
கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களை, அந்தத் திரையின் அதீத ஒளி (க்ளேர்) பாதிக்கும். இடையிடையே சிறு இடை வெளி கொடுத்துப் பணியைச் செய்யலாம். தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் இடைவிடாமல் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சரியான தூரத்திலும், சரியான நிலையிலும் அமர்ந்து கொள்ள வேண்டும். (படத்தில் காட்டியபடி) இப்போது கண்களுக்குத் தேவையான லூப்ரிகன்ட் ட்ராப்ஸ் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.


தலைவலி என்று சிலர் கண் பரிசோதனை செய்து கொள்கிறார்களே?
எல்லா தலைவலிகளுக்குமே காரணம் கண் என்று எண்ணிவிடக் கூடாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முன்பு கூறியது போல, கண்ணின் தசை பலம் குறைந்து போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். கண்ணில் பவர் குறைபாடு இருந்தால் கண்ணாடி அவசியம். எனவே, கண்களைப் பரிசோதித்தபின், காரணம் அறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


ஒரு பெண்ணுக்கு 14 வயதாகிறது. தடிமனான கண்ணாடி அணிந்திருக்கிறாள். அது வேண்டாம் என்கிறாள். என்ன செய்வது?
லேசர் சிகிச்சை மூலம் பார்வையைத் திருத்த, 18 வயதாக வேண்டும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான். ஏனெ னில் 18 வயது வரை கண்கள் வளர்ந்து பவர் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்னோர் எளிய வழி கான்டாக்ட் லென்ஸ் அணிவது. இப்போது மிக நவீன கான்டாக்ட் லென்ஸ்கள் கிடைக்கின்றன. வருடத்துக்கு ஒருமுறை அணிவது, மாதத்துக்கு ஒரு முறை அணிவது, வாரத்துக்கு ஒருமுறை அணிவது, ஏன்-தினசரி ஒருமுறை அணிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு கான்டாக்ட் லென்ஸ்கள் வந்துவிட்டன. வசதிக்கு ஏற்ப அணியலாம்.


க்ளகோமா என்றால் என்ன?
கண்ணின் முன் பாகம் அக்வஸ் எனும் நிறமற்ற திரவத்தால் நிரம்பியுள்ளது. இது கண்ணுக்குள் இருக்கிற பாப்பா மற்றும் லென்சுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. இது கண்ணுக்குள்ளேயே உற்பத்தியாகி, சல்லடை போன்ற வழி மூலம் வெளி யேறுகிறது. இந்த திரவம் உற்பத்தி ஆகிற அளவும், வெளியேறும் அளவும் சமமாக இருந்தால்தான் கண் அழுத்தம் (பிரஷர்) சரியான அளவில் இருக்கும்.


அந்த அழுத்தம் அதிகமானால்?
அழுத்தம் அதிகமா வதால் வருவதுதான் க்ளகோமா. கண்ணில் அந்தத் திரவத்தின் அழுத்தம் அதிகமாகி, கண்ணுக்குள்ளே இருக்கும் நரம்பை (ஆப்டிக்நெர்வ்) பாதிக்கும் போது க்ளகோமா உண்டாகிறது. க்ளகோமாவால் ஏற்படும் பார்வை இழப்பு நிரந்தரமானது. அதுதான் இந்த நோயிலுள்ள அபாயம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


க்ளகோமா எந்த வயதிலும் வருமா?
எந்த வயதிலும் வரலாம் என்பது மட்டுமல்ல. பிறவியிலும் கூட வரலாம். க்ளகோமா நடுவயதிலும் அதற்குப் பின்னரும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். பாதுகாப்பாக இருக்க, 40 வயதுக்கு மேல் ஆனால் வருடத்துக்கு ஒருமுறை கண் அழுத்தத்தை (பிரஷர்) செக்-அப் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான் கண்டுபிடித்த நிலையிலேயே தடுத்து நிறுத்த முடியும்.


யாருக்கெல்லாம் க்ளகோமா வர வாய்ப்பு அதிகம்?
ஸ்டீராய்ட்ஸ் மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு. டயபடீஸ் நோய் இருப்பவர் களுக்கு. அதிகமான மைனஸ் பவர் உள்ளவர்களுக்கு. குடும்பத்தில் பரம்பரையாக க்ளகோமா இருப்பவர்களுக்கு. இவர்கள் கட்டாயம் வருடம்தோறும் கண் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண்ணில் அடிபட்டு, நீர் போகும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலும் க்ளகோமா வரலாம்.


க்ளகோமாவால் முழுப் பார்வையையும் இழந்து விடும் அபாயம் உண்டா?
கவனிக்காமல் விட்டுவிட்டால், நிச்சயம் உண்டு. இன்ட்ரா ஆக்யுலர் பிரஷர் அதிகமானால் இது ஏற்படுகிறது. அப்போது கண் நரம்பு செயலிழந்து போய், முழுப்பார்வை இழப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான் இதை ‘சைலன்ட் விஷன் ஸ்டீலர்’ என்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக இருந்தால்தான் அதிலிருந்து தப்பிக்க முடியும்.


க்ளகோமா வந்தவர்கள் எப்போது செக்-அப் செய்து கொள்ள வேண்டும்?
4-5 மாதங்களுக்கு ஒருமுறை. அதாவது, டயபடீஸ் வந்தவர்கள் மாதிரி, அடிக்கடி செக்-அப் செய்து கொண்டாக வேண்டும். சொட்டு மருந்து மட்டுமே போதாது. அதில் பலன் கிடைக்காதபோது, அழுத்தம் கட்டுப்படாவிட்டால், அறுவைச் சிகிச்சையோ, லேசர் சிகிச்சையோ தேவைப்படும்.


பிறந்த குழந்தைக்கு க்ளகோமா வருமா?
வர வாய்ப்பு இருக்கிறது. கருவிழி பெரிதாக இருந்து கண்ணில் நீர் வரும். கண் கூச்சம் அதிகமாக இருக்கும். இவை க்ளகோமாவின் அறிகுறிகள். கண் டாக்டரிடம் காண்பித்து கண்ணில் அழுத்தம் (பிரஷர்) எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


குழந்தைக்கு மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சிலர் நம்புகிறார்களே?
தவறு. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்து பார்வையைச் சீர்செய்ய வேண்டும். அழகுக்காக மட்டுமல்லாமல், இரு கண்களிலும் சமமான பார்வை இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிகிச்சை அவசியம்.


டயபடீஸ் வந்தால் கண்கள் பாதிக்கப்படுமா? எந்தவித அறிகுறியும் தெரியாதா?
எத்தனை வருடங்களாக சர்க்கரை நோய் இருந்து வந்திருக்கிறது என்று தெரிய வேண்டும். டயபடீஸ் பாதிப்பு பல வருடங்கள் இருந்தால் அதனால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். இருபது வருடமாக என்றால், நிச்சயமாகப் பாதிப்பு இருக்கும். டயபடீஸ் வந்து கண்கள் பாதிக்கப்படுவதை, டயபடிக் ரெடினோபதி என்பார்கள். அதற்கு டயபடீஸ் மருத்துவரை மட்டுமே அணுகினால் போதாது. விழித்துறைப் பிரிவில் தேர்ந்த கண் மருத்துவரையும் வருடத்துக்கு ஒருதடவையாவது பார்க்க வேண்டும்.


கண்ணில் ரெட்டினா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
மேற்படி கண் மருத்துவர் பரிசோதனை செய்யும்போது கண்டறிந்து சொல்லி விடுவார். அந்தச் சில பரிசோதனைகளில் ஆஞ்சியோகிராமும் அடங்கும். அடுத்ததாக OCT மூலம், எந்த அளவுக்குக் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அறியலாம். பாதிப்புக் குறைவாக இருந்தால் லேசரில் சரிசெய்யலாம். அதிகமாக இருந்தால் அறுவைச் சிகிச்சை. இதை விட்ரக்டமி என்பார்கள்.


டயபடீஸ் வந்து பாதிக்கப்பட்ட அல்லது ரெடினல் டிடாச்மென்ட் ஆனதை சரிசெய்ய முடியுமா?
முடியும். இது மிக நவீன தொழில்நுட்பத்துடன் செய்யப்படும் சிகிச்சை. இதை 23-G விட்ரக்டமி என்பார்கள். இதில் தையல்களே இருக்காது. நேரமும் குறைவாகவே ஆகும். விரைவாகச் செய்துவிடலாம். அதனால் அறுவைச் சிகிச்சையின் பலன் இன்னும் நன்றாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.


அதிக ரத்த அழுத்தம் (ஹை பிளட் பிரஷர்) கூடக் கண்ணைப் பாதிக்குமா?
ஆம். கண் நரம்பைப் பாதிக்கும். ரத்தக் கசிவு ஏற்பட்டு சீரியஸ் ஆனால், கண் பார்வை போய்விடும் அபாயமும் இருக்கிறது. கண்ணிலுள்ள ரத்தநாளங்கள் மூடிக்கொள்ளும் அபாயம் அதிகமாகிறது. எனவே உயர் ரத்த அழுத்த நோயாளிகள் முறையாக அவ்வப்போது செக்-அப் செய்து கொள்வது அவசியம்.


வயதாவதன் காரணமாக கண் விழித்திரை பாதிக்கப்படுமா?
வயதாவதால் விழித்திரையில் பார்வைக்கு மிக முக்கியமான மேக்குலா என்ற பகுதியில் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதை Age Related Macular Degeneration ( ARMD ) என்பார்கள். இது மேக்குலாவில் உள்ள செல்கள் வளர்ச்சி அடையாமல் உயிரிழந்து போகிற போது உண்டாகிறது. 60-70 வயதுகளில் மேக்குலா செல்கள் முழு வளர்ச்சி அடையும் முன்பே உயிரிழப்பதும், புது ரத்தக் குழாய்கள் வழியே ரத்தமோ, திரவமோ கசிவதும் சற்று சீரியஸான பிரச்னைதான்.
ஃபோட்டோ கோயாகுலேஷன் மூலம், விழித்திரையில் உருவாகும் புதிய ரத்தக் குழாய்களை அழிக்க அல்லது செயல் இழக்கச் செய்யலாம். இதற்கும் கண்ணுக்குள் ஊசி மருந்து செலுத்தி குணப்படுத்தலாம்.


கண் பார்வையின் தரத்தை உயர்த்த முடியுமா?
முடியும். மையோபியா (கிட்டப் பார்வை), ஹைபரோபியா (தூரப் பார்வை) அஸ்டிக்மாடி ஸம் (கோளவடிவக் கருவிழி) ஆகிய குறைபாடு களைப் போக்க, லாசிக் சையாப்டிக்ஸ் முறை சிகிச்சை இருக்கிறது. லாசிக் முறையில் மைனஸ் 2 முதல் மைனஸ் 12 வரையும், +1 முதல் +5 வரையும், அஸ்டிக்மாடிஸ கோளாறில் மைனஸ் 5 முதல் + 8 வரை சிலின்ட்ரிகல் பவரையும் சரிசெய்து விடலாம். இந்த மைனஸ், ப்ளஸ் குறைபாடுகள் தவிர, நம் கண்களில் ‘ஹையர் ஆர்டர் அபரேஷன்’ இருக்கும்பட்சத்தில், ஸையாப்டிக்ஸ் பயன்படுத்தி இந்த ‘ஹையர் ஆர்டர் அபரேஷனை’யும் போக்கிவிட முடியும். இதனால் மிக உயர்தரமான பார்வை கிடைக்கும்.


லாசிக் சிகிச்சை பாதுகாப்பானதா?
லாசிக் சிகிச்சை மிகவும் துல்லியமான, பாதுகாப்பான சிகிச்சை. கருவிழியின் தடிமனைப் பரிசோதித்து அறிந்து ஆப்ஸ்கான் டோபோகிராஃபியின் மூலம் கருவிழியின் மிகச்சரியான அளவைப் படம் எடுத்து, இந்தச் சிகிச்சைக்கு ஒரு நபர் ஏற்றவர்தானா என்பதை நிச்சயிக்க முடிகிறது. அப்படி அந்த நபர் தகுதியானவர் இல்லை என்றால், அவரை சிகிச்சைக்கு உட்படுத்துவதில்லை.


ஒவ்வொரு நோயாளியின் தேவைக்குத் தகுந்த மாதிரி இது உதவுமா?
இன்ட்ராலேஸ் முறையில் அதுதான் சிறப்பு. கருவிழியில் உருவாகும் மூடியின் குறுக்களவு, ஆழம், இணைப்புப் பகுதி, அகலம் முதலியவை, சிகிச்சை பெறுபவரின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. அதாவது ‘கஸ்டமைஸ்ட் ட்ரீட்மென்ட்’ என்று இதைச் சொல்லலாம்.


இந்த லாசிக் சிகிச்சையிலும் முன்னேற்றமடைந்த நிலை இருக்கிறதா?
அதுதான் இன்ட்ராலேஸ் முறை சிகிச்சை. முதல் லாசிக் சிகிச்சை முறையில் திரை போன்ற மூடியை ( flap )உருவாக்குகிறோம்.
இரண்டாவது நவீன முறையில் லேசர் உதவியுடன் மூடியை ( flap ) உண்டாக்குவதால், சிகிச்சைக்குப் பின்னர் அதை மீண்டும் பொருத்துவது இயல்பாக அமைகிறது. அதனால் இது இன்னும் சிறப்பான சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது.


IPL தெரியும். ICL என்கிறார்களே, அதென்ன?
ICL என்பது லென்ஸ்தான். கருவிழி தடிமன் போதுமான அளவு இல்லாமல் அல் லது பவர் அதிகம் இருந்து விட்டால், லாசிக் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது. அப்போது அதிக பவர் இருப்பவர்களுக்கு ICL என்ற செயற்கை லென்சை கண்ணுக்குள் நிரந்தரமாகப் பொருத்தி விடுகிறோம். இதனால் அதிகபட்சபவர் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முடிகிறது.


கண்ணில் கண்ணீர் எப்போதும் இருந்துகொண்டே இருக்குமா?
ஆம். கண்ணுக்குள் நீர் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும். இது வறண்டு போய் ட்ரை ஆகிவிடும் போதுதான் பிரச்னை. அதாவது, சீக்கிரம் காற்றில் கரைந்து போகிற போது, கண் வறட்சி ஏற்படுகிறது. கண் இமையை சாதாரணமாக மூடித் திறக்காமல் இருந்தால் கண் வறட்சி (ட்ரை ஐஸ்) ஏற்படும். மின்விசிறிக்குக் கீழே நேரடியாகத் தொடர்ந்து காற்றுப் படுகிற மாதிரி அமர்ந்திருந்தாலும் கண் வறட்சி ஏற்படலாம்.


கண்ணுக்குள் சதை வளர்ந்து உறுத்துகிறது என்பார்களே, அது என்ன?
அதை டெரிஜியம் ( Pterygium ) என்பார்கள். இதை அறுவைச் சிகிச்சை மூலம், வளர்ந்து கண்ணை உறுத்தும் சதையை நீக்கி, நன்றாக இருக்கிற சதைப் பகுதியை எடுத்து அந்த இடத்தில் பொருத்திவிடுவோம். இதை ‘கஞ்சக்டைவல் ஆட்டோ கிராஃப்டிங்’ என்பார்கள்.


கண்ணில் தூசி விழுந்தால், கண்ணைப் போட்டுத் தேய்க்கலாமா?
அப்படித் தேய்த்தால் கண் புண்ணாகி விடும். அந்தப் புண்ணை சிகிச்சை செய்து குணப்படுத்தாவிட்டால், கருவிழியில் வெள்ளைத் தழும்பு ஏற்பட்டு, பார்வை நிரந்தரமாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. கண்ணில் நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, தூசியை எடுப்பதுதான் நல்லது. இதற்குப் பிறகும் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தால் கண் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.


கண்ணில் குச்சியோ, கூரான பொருளோ குத்திவிட்டால்?
அப்படிக் காயம் ஏற்பட்டுவிட்டால், ஐஸ்க்ரீம் கப் போல ஒன்றை எடுத்துக் கண்ணைப் பாதுகாப்பாக மூடிவிட்டு கண் மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இன்ஃபெக்ஷன் உண்டாகி கண் பாதிக்கப்படும். கண்ணில் ஆஸிட், அல்கலீன் விழுந்தாலும், உடனே நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.


கண்ணில் கட்டி வந்துவிட்டது என்றால்?
தாய்ப்பால் ஊற்றுவது, நாமக்கட்டியைத் தேய்த்துப் பூசுவது கூடவே கூடாது. அதே போல, தூசி விழுந்து விட்டால் நாக்கால் எடுப்பது, காகித நுனியால் எடுப்பது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அவற்றால் கருவிழி பாதிக்கப்பட்டு, அல்ஸர் வரும் அபாயம் இருக்கிறது. அதனால், மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.


கருவிழியில் தழும்பு ஏற்பட்டால், அதற்குச் சிகிச்சை என்ன?
கார்னியல் ட்ரான்ஸ்பிளான் டேஷன் என்ற சிகிச்சை மூலம், இறந்தவர்களின் கருவிழியை தானமாகப் பெற்று, மாற்று அறுவைச் சிகிச்சை செய்து பார்வை பெறலாம். மாற்று அறுவைச் சிகிச்சை என்பது, கருவிழியை மட்டுமே மாற்றிப் பொருத்துவதுதான். முழுக் கண்ணையும் அல்ல.


கருவிழி பார்வையற்றுப் போக வேறு என்ன காரணம்?
போதுமான சத்துள்ள உணவு கிடைக்காத நிலை. அதை ‘மால் நியூட்ரிஷன்’ என்பார்கள். தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து கிடைக்காத போதும் அப்படி ஏற்படும்.


கண்தானம் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
மரணம் நிகழ்ந்தபின், ஒரு பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, இறந்தவரின் நெற்றியில் வைப்பது நல்லது. மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மூடிய கண்கள் மேல், ஈரமான துணி அல்லது பஞ்சை வைத்துவிட வேண்டும்.


எப்போது கண் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்?
இறந்தவரின் கண்களின் கருவிழியை ஆறு மணி நேரத்துக்குள் கண் மருத்துவர் எடுத்துவிட வேண்டும். தானம் செய்யும் எண்ணம் இருந்தால், அருகிலுள்ள கண் மருத்துவமனையில் தெரிவித்து விட வேண்டும். கண் மருத்துவர் வந்து கார்னியாவை எடுத்துப் பத்திரப்படுத்தி விட்டு, முன்பு இருந்த மாதிரியே கண்களை மூடிவிடுவார். எடுத்த சுவடே தெரியாது. ஒருவர் அளிக்கும் தானம் இருவருக்குப் பார்வையைத் தருகிறது.


கண்தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா?
ஒரு வயதுக் குழந்தை முதல் யார் வேண்டு மானாலும் கண் தானம் செய்யலாம். ஆனால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவும் வகை கான்சர் நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மூளைக் காய்ச்சல் வந்தவர்கள், விஷம் உட்கொண்டு இறந்தவர்கள் - இவர்கள் கண்களைத் தானமாக ஏற்பதில்லை.
உலகிலுள்ள பார்வையற்றவர்களில், கிட்டத் தட்ட நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறார்கள். எனவே கண் தானம் பரவ வேண்டும்.


டயபடீஸ் வந்தவர்கள் கண்தானம் செய்யலாமா?
டயபடீஸ் வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கண்ணாடி போட்டவர்கள் - இவர்கள் எல்லாருமே கண் தானம் செய்யலாம்.
ஒரு நம்பிக்கையூட்டும், மகிழ்ச்சியான செய்தி: இந்தியாவிலேயே தமிழ்நாட் டில்தான் கண்தான விழிப்பு உணர்ச்சி அதிகம்!


கண்களில் அதிகம் நீர் தேங்கி, வடியாமல் இருந்தால் என்ன செய்வது?
சாதாரணமாகக் கண்ணிலுள்ள நீர் நாசி வழியேதான் வெளியேறும். அப்படி அந்தப் பாதை அடைபட்டிருக்கும்போது விழியின் நுனியில் ஒரு துவாரம் செய்து, தனி வழி ஒன்று ஏற்படுத்தி, நாசி வழியாகவே அந்த நீர் வெளியேற வழிசெய்ய முடியும். இது அறுவைச் சிகிச்சை மூலமாகச் செய்யப்படுகிறது. இதை DCR என்பார்கள். இப்போது இதை லேசர் மூலம் செய்வதால், பத்து-பதினைந்து நிமிடங்களில், இரத்தக்கசிவு இல்லாமல், வலி ஏதும் இல்லாமல், தழும்பு ஏதும் இல்லாமல் செய்ய முடியும்.


சிலருக்கு இமை பாதியாகவோ, முழுமையாகவோ மூடியிருக்கும். இதற்குச் சிகிச்சை இருக்கிறதா?
சிறு வயதாக இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிக அவசியம். ஏனென்றால் அவர்கள் பார்வையை இது பாதிக்கும். இதைச் சரிசெய்ய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம். அதன் பிறகு பார்வையும் முழுமையாகி விடும். வயதானவர்களுக்கும் அவர்களின் பாதிப்பு நிலையைப் பொறுத்து அறுவைச் சிகிச்சை செய்யலாம்.


சிலருக்கு இமை ரோமம் வளர்ந்து வெளியே நீட்டிக் கொண்டோ, உள்ளுக்குள் வளைந்து கொண்டோ கண்ணை உறுத்தும்...
இதை Ectropion (வெளியே நீட்டிக் கொண் டிருப்பது),Entropion (உள்ளே வளைந்திருப்பது) என்பார்கள். இது கண் பார்வையை நிச்சயம் பாதிக்கும். பாதிப்பைத் தவிர கண் உறுத்தலும், கண்ணிலிருந்து நீர் வடிதலும் ஏற்படலாம். இதைச் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும். ரோமத்தின் அடி வேரை அழித்து, மேலும் வளராமல் தடுக்க முடியும். இதை எலக்ட்ரோலிஸிஸ் என்பார்கள்.


விபத்தில் அடிபடும்போது, தலை தப்பினால் கூட, சில சமயம் கண்கள் அடிபட்டு, கண் உள்ளே போய்விடும்போது என்ன செய்வது?
அந்த இடத்தில் எலும்பு ஆதரவாக (சப்போர்ட்) இல்லாததால்தான் கண் உள்ளே போய்விடுகிறது. இதை எலும்பு கிராஃப்ட்டிங் செய்து, கண்ணைப் பழைய இடத்தில் வைத்து, அந்தக் குறையைச் சரிசெய்ய முடியும். அதற்குப் பிறகு கருவிழி இயல்பாக நகரும்.


விபத்தில் பாதிக்கப்படாமலே சிலர் இரட்டைப் பார்வை தெரிகிறது என்கிறார்களே?
இரட்டைப் பார்வை தெரிந்தால், பரிசோதித் துப் பார்க்க வேண்டும். கண் நரம்பு பாதிக்கப் பட்டிருந்தால் இரட்டைப் பார்வைக் கோளாறு வரும். அது மட்டுமல்ல, மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று காண்பிக்கும் முக்கிய அறிகுறி அந்தப் பரிசோதனைதான். வெளியே பார்க்க கண்கள் எப்படி உவுகின்றனவோ, அதே போல், ரத்தக் குழாய்கள், நரம்பு எல்லாவற்றையும் கண்களின் வழியே கண் மருத்துவர் பார்த்துப் பரிசோதிக்க முடியும்.


சிலருக்கு விழிகள் பெரிதாகி வெளியே தெரியும். இதற்குச் சிகிச்சை இருக்கிறதா?
இது தைராய்ட் பிரச்னை காரணமாக ஏற்படலாம். அறுவைச் சிகிச்சை மூலம் கண்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.
சிலர் இமையில் கான்சர் வந்து அவதிப்படுவார்கள். அதையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி, கிராஃப்டிங் மூலம் புதிய இமையை உருவாக்கி அமைத்து விடலாம். சிலருக்குப் பக்கவாதம் வந்து கண் இமையே மூட முடியாமல் இருக்கும். இதையும் அறுவைச் சிகிச்சை மூலம் குணமாக்க முடியும்.

மற்றவர்களுக்குக் கண் சிகிச்சைக்காகக் கொடுத்த மருந்தை நாமும் உபயோகிக்கலாமா?
கூடாது. அது மட்டு மல்ல. திறந்த மருந்து பாட்டிலை, ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்திருந்து ஒரு மாதக் காலத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.


மாலைக் கண் நோய் வர என்ன காரணம்?
நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, வைட்டமின் ஏ குறைபாடு. இன்னொன்று, பரம்பரையாகவே குடும்பத்தில் இருந்து வருவது. இதை ரெடினைடிஸ் பிக்மென்டோசா என்பார்கள். இவர்கள் கிட்டத்து உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஜெனடிக் கவுன்சலிங் இவர்களுக்குப் பயனளிக்கும்.


கண் டாக்டரிடம் போனாலே, சொட்டு மருந்து விட்டு டைலேட் பண்ணுகிறார்களே?
ஆப்டிக் நெர்வ் எனப்படும் கண் நரம்பு எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் டைலேட் செய்யப்படுகிறது.
கண்ணாடி பவர் செக் பண்ணும்போது டைலேட் பண்ண அவசியம் இல்லை.
சொட்டு மருந்து விட்டால் கண் பாப்பா டைலேட் ஆகி விரிந்து, பின்னால் இருக்கிற விழித்திரை நன்றாகத் தெரியும். அதற்காகத்தான் பரிசோதிக்கும்போது டைலேட் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.


மெட்ராஸ் ஐ வந்தால் அடுத்தவரை விரைவில் தொற்றிக்கொள்ளுமா?
மெட்ராஸ்-ஐ வந்து பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட எந்தப் பொருளைத் தொட்டாலும், நமக்கும் அந்தப் பாதிப்பு வரும். அதனால்தான் கறுப்புக் கண்ணாடி அணிவது இருதரப்பினருக்குமே பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்படுகிறது.


வயதானவர் சிலர் கறுப்புப் புள்ளி தெரிகிறது என்கிறார்களே?
இதை போஸ்டீரியர் விட்ரியஸ் டிடாச்மென்ட் என்பார்கள். விட்ரியஸ் திரவம் நம் கண்களில் இருப்பது, பார்வை துல்லியமாகத் தெரிய உதவுகிறது. வயதானால் அது பழுதடைந்து போய் கரும்புள்ளி தெரியத் துவங்குகிறது. இதற்குச் சிகிச்சை கிடையாது. ரெடினாவைப் பரிசோதித்து, அது ஆரோக்யமான நிலையில் இருக்கிறதா என்று அறிவது முக்கியம்.


‘தி ஐ ஃபவுண்டேஷன்’ சில மைல் கற்கள்:
1. தென்கிழக்கு ஆசியாவிலேயே மல்ட்டி ஃபோகல் லென்ஸ் பொருத்தி மிக அதிக அளவு சிகிச்சை செய்த கண் மருத்துவமனை.
2. இந்தியாவில் 1997ல் முதன் முதலாக லேசிக் சிகிச்சையை அறிமுகப்படுத்தியது.
3. இந்தியாவில் 2000ல் ஃபேக்கிக் ஐசிஎல் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.
4. டாக்டர் டி.ராமமூர்த்தி அகில இந்திய கண் மருத்துவர்கள் கழகத்தின் விஞ்ஞானப் பிரிவுத் தலைவராக 2008 முதல் செயல்பட்டு வருகிறார்.Courtesy : Mangaiyar Malar

No comments:

Post a Comment