December 23, 2010

பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்

முத்தாரத்தில் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பேசும் கலை வளர்ப்போம்.

கலையை வளர்ப்போம் என்ற பொருளில், கலையைக் கலைக்காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!

''கலை என்பது கலைக்காக” என்றால், விளக்கு என்பது விளக்குகாக என்று மட்டுமேயென விவாதிப்பது போலாகிவிடும்.


விளக்கு ஒளி தருவதற்காக அதைப்போலவே கலையும், சமுதாயத்துறையில் பொருளாதாரத் துறையில் அரசியல் துறையில் அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை, செயலாற்றும் ஒளியைத்தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளில் கலையை மட்டுமே காணுகிறோம்.ஆனால் ‘இராக, ‘தாள, பாவங்களுடன் இனிய குரலில் இசைவாளர் பாடுகிறார். அவரது இசைத் திறனை வியந்து பாரட்டிகிறோம். மண்டபத்திலுள்ள நூற்றுக்கணக்கான தலைகள் தம்மை மறந்து ஆடுகின்றன. ஆகா! சபாஷ்!” என்று ஒலிகள் எழுப்புகின்றன அந்த இசை, வெறும் நுணுக்கத்துடன் நின்று விடாமல் ‘வெண்ணிலா வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே கன்னல் தமிழும் நானும் அல்லவோ’ ‘என்ற  பாரதிதாசனாரின் பாடலாக இருந்தால் இசையைப் பருகுகிறோம். அத்துடன் தமிழ் இன்பத்தைப் பருகுகிறோம் கவிஞரின் கவிதைச் சுவையைப் பருகுகிறோம் அனைத்துக்கும் மேலாகத் தாய்மொழி உணர்வோடு கலந்துவிடுகிறோம்.

எனவே, இசைப் பாடலாயினும், கூத்தாயினும் அவை உணர்வு கலந்த கலையாக இருந்திடல் வேண்டும்.

மேடையில் பேசுவதும் ஒரு கலைதான்- இசையில், நடனத்தில், நாடகத்தில் அதற்குரியோர்- ஏற்கனவே பசிற்சி பெற்று ஒத்திகை பார்த்துகொண்டு திரும்ப திரும்ப அதே பாடலை, அதை ஆடலை, அதே நடிப்பை, அந்தந்த நிகழ்ச்சிகளுக்கேற்ப காட்டிட இயலும்.

‘ஆனால், பேச்சுக்கலை ‘அப்படியல்ல! ஜனநாயகம் வளர்ந்து வரும் இந்த யுகத்தில் எல்லாவற்றையும் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.’

‘பள்ளிக்கூடங்களிலேயே பேச்சு போட்டிகள், பரிசளிப்புகள் என்று ஆரம்பமாகிவிடுகின்றன.’

‘ஊராட்சி மன்றங்களில் ஊருக்குத் தேவையான விஷயங்களுக்காகப் பேசவேண்டியிருக்கிறது.’

‘நகராட்சிமன்றங்களிலும், மாநகராட்சி மன்றங்களிலும் அதே மாதிரியான தேவைகளைப் பற்றி நறுக்குத் தெறித்தாற் போல பேசவேண்டியிருக்கிறது.’

‘சட்டமன்ற அவைகளில் தொகுதியைப் பற்றியும் மாநிலத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சுவையாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. சூடாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.’

‘பாரளுமன்ற இரு அவைகளிலும் நாட்டுப் பிரச்சினை, மாநிலங்களின் பிரச்சினை, அரசியல் கட்சி பிரச்சினை, அந்நிய நாட்டுப் பிரச்சினையென்று எத்தனையோ பிரச்சினைகளைப்பற்றிக் கனிவுடனும் பேசவேண்டியிருக்கிறது; காரசாரமாகவும் பேசவேண்டியிருக்கிறது;’

‘கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே வாதம் எழும்போது உண்மைகளை எடுத்து வைப்பது மட்டு
மல்லாமல்,’ அவற்றை வாதாடும் திறமையுடனும் நடத்திட வேண்டியிருக்கிறது.’

‘நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில்- வாதாடுகிற வழக்குரைஞர் எவ்வளவு பெரிய சட்டமேதையாக இருந்தாலும் நியாயத்தை நிலைநாட்டப் பேச்சாற்றல் தேவைப்படுகிறது.’

இப்படியுள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும் விமர்சிக்கிற’ அரசியல்வாதிக்கு மேடையில் பேசிடும் கலை மிகமிகத் தேவையானது--எல்லாத் துறைகளின் பெயர்களையும் நான் இந்தத் தொடர்- கட்டுரையின் முகப்பிலேயே கோடிட்டு காட்ட வில்லையென்றாலும் கூட பல்வேறு துறைகளிலும் தேவைப்படுகிற பேச்சுக்கலை குறித்து, பலசெய்திகளையும்,  விளக்கங்களையும் அளிக்க இருக்கிறேன். அவை ‘உங்களில் பலருக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்கிட உதவுமென்று நம்புகிறேன்.

ஏற்கனவே பேச்சாளராக இருக்கிற  சிலருக்குத் தங்களின் குறைபாடுகளை நீக்கிக் கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராகத் திகழத் துணை புரியும் என்று எதிர்பார்க்கிறேன்.- அத்தகைய நல்ல நோக்கத்துடன் தான் இந்தத் தொடர் கட்டுரை தீட்டப்படுகிறது..


குறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனைடைய வேண்டுமென்றல்ல. பேச்சுக் கலையில்- சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்ற இளந்தலை முறையினர் அனைவருமே இந்தக் கருத்துக்களைச், சிந்தித்து பார்த்து ஏற்க முடிந்தவைகளை, ஏற்கக் கூடியவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.

"விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
 சொல்லுதல் வல்லார்ப் பெறின்”

என்றார் வள்ளுவர்!
கருத்துக்களை ஒழுங்காக அமைந்து இனிமையாகச் சொல்லக்கூடியவரைப் பெற்றால் அவருடைய ஏவலை உலகம், விரைந்து கேட்டு அவ்வாறு நடக்கும், என்பது இந்தக் குறளுக்குப் பொருள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பே எண்ணத்தில் எழிகின்ற கருத்துக்கள் மட்டும் போதாது, அவற்றைச் சொல்ல வேண்டிய முறையில் சொன்னால்தான் வெற்றி கிட்டும் என்று சொல்வன்மை என்ற அதிகராத்தையே வழங்கியுள்ளார் வள்ளுவர்.

“அம்மா அப்பா” என்று மழலை பேசத் தொடங்கி ஆங்கிலம் போன்ற மொழிகளில் பட்டம்பெற்று எண்ணற்ற சொற்களைக் கற்றவர்களாகக்கூட இருக்கலாம்.

‘சொற்களை தெரிந்து வைத்திருப்பது வேறு அவற்றை ஆள்வது என்பது வேறு!’

அந்தச் சொல்லை ஆள்வது பற்றிய சுவையான தகவல்களைத்தான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

1970- ஆம் ஆண்டு மேல்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இலண்டன் மாநகரத்தில் பல பகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. “ஹைட் பார்க்” (Hyde park) என்று ஒரு அழகான இடம்! அதனை ஒரு சொற்பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம்.  அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் புல் தரைகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று கொண்டிருப்பர். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல; பல இடங்களில்! அங்கெல்லாம் ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது, யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர்.

நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும். அந்தச் சொற்பொழிவாளர்கள் அந்த இடத்தைத்  தங்களின் பயிற்சிக் கூடமாகவே ஆக்கிக் கொண்டு பேசுகின்றனர். அவர்கள் அங்கே எதைப் பேசினாலும் தடையில்லை. ஆங்கிலேய அரச பரம்பரையினரைப் பற்றிக் கூட ஆசை தீர தாக்கிப் பேசுவார்கள். பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிக் கடுமையாக அலசுவார்கள்.

‘பார்க்கிற்கு வருகின்ற மக்களும் ஒவ்வொருவர் பேச்சாக கேட்டுக்கொண்டே அன்றைய பொழுதைக் கழித்துவிட்டு வீடு திரும்புவர். அந்தப் பார்க்கிலே பேசி இந்திய நாட்டு உரிமைகளை அந்த நாட்டு மக்களுக்கு விளக்கிய ஒரு தலை சிறந்த இந்தியப் பேச்சாளருடைய பெயர் உங்களுக்குத் தெரியுமா?

ஐ. நா. சபையில் மிக நீண்ட நேரம் பேசி பெரியதொரு “ரிக்கார்டையே ” ஏற்படுத்திய வி.கே. கிருஷ்ணமேனன் தான் அந்த பூங்காவிலே ஆரம்ப காலத்தில் பேசியவர்.

அவர் இலண்டன் நகரத்து “ஹைட் பார்க்கில் நூற்றுக்கணக்கானவரை வைத்துக்கொண்டு பேசியபோது அவர் ஒரு காலத்திலே, ஐ.நா. அவையில் புகழ்மிக்க சொற்பொழிவாளராக விளங்குவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

‘எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி திருவினையாக்கும் முதலில் நான் எப்படி பேசக் கற்றுக் கொண்டேன்? அதைச் சொல்ல வேண்டாமா?

மேடையில் பேசியதைத்தான் குறிப்பிடுகிறேன்; வீட்டில் பேசக் கற்றுக் கொண்டதை அல்ல!

Courtesy: Muthuaram magazine

No comments:

Post a Comment