December 17, 2010

எமனீசுவரர்


சிவமயம்திருவூறல் திவ்வியத் தலத்தின் கண்ணே சிவாசாரர் என ஒரு சிவனடியார் இருந்து கொண்டிருந்தனர், அவர் தேக முழுவதும் விபூதி தூளனம் செய்து கொண்டிருப்பர், சிரம். நெற்றி. காது. கழுத்து. மார்பு. தோள். நாபி. இரண்டு முழங்கை இரண்டு மணிக்கட்டு. இரண்டு முழந்தாள். முதுகு. இவ்விடங்களிலே விபூதி குழைத்து இடுவர், சிகையிலே ஒன்றும் சிரசிலே முப்பத்தாறும். காதுகளிலே அவ்வாறும் கழுத்திலே முப்பத்திரண்டும். புயங்களிலே தனித் தனி பதினாறும் கைகளிலே தனித் தனி பனிரெண்டும், மார்பிலே நூற்றெட்டுமாக உருத்திராட்ச மணி தரித்துக் கொண்டிருப்பர்.


சிவ பூசை செய்வர்,சிவாலய சேவை புரிவர், சிவபணி ஆற்றுவர், சிவனடியார்ளைச் சிவமெனப் பாவிப்ப.ர் சிவபுராண பாராயனஞ் செய்வர், இவர் ஒரு நாள் கங்காதரர் ஆலயத்திற் கங்கையோடி வரும் கரையிலிருந்து கொண்டு சிவானுட்டானம் செய்து கொண்டிருந்தனர்,


அவ்வமயம் 2 எமதூதர்கள் வந்து இவ்வடியாரை நெருங்கி முன்னும் பின்னுமாக நின்று கொண்டருந்தனர் அடியவர் அப்போது வலது கரத்தில் சலத்தினை வார்த்து இடது கரத்தினால் கும்ப முத்திரை பிடித்துக் கொண்டு பிரம மந்திரத்தினால் சிரசின் மேலே தெளித்துக்கொண்டனர், அந்நீர்த்துளிகள் அத்தூதர்கள் மேல்பட்டவுடன் அவர்கட்குச் சிவ ஞானமுண்டாகி அவ்வடியார் திருவடியில் விழுந்து நமஸ்காரம் செய்து தங்கள் வரவைக் கூறித் தங்களை அடிமைகளாக்கிக் கொள்ளும் படி வேண்டினர், அச் சிவனடியார் அவ்விருவருக்கும் விபூதி அளித்து சிவாலயத் தொண்டு அத்தலத்தில் செய்து கொண்டிருக்கும் படி கட்டளையிட்டனர்,

அத்தூதுவர்கள் எமலோகத்திற்கு வராமல் இருக்கவே மறுபடியும் இரண்டு பேர்களை ஏவினர், அவர்கள் வந்து நெருங்கிய போது சிவனடியார் திருவூறல் ஆலயத்தின் பிரகாரத்தில் புல் செதுக்கிக் கொண்டிருந்தவர் அப்புல்லினை எடுத்து உதர அப்புல்லிலிருந்த மண் அத் தூதரவர்கள் மேல் பட்டவுடன் அவர்கள் நல்லறிவு பெற்றுச் சிவனடியார் காலில் விழுந்து எழுந்து தங்கள் வரவினைக் கூறித் தங்களை ஆட் கொண்டு அருள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ள அவர்கட்கு விபூதி அளித்து அவர்களை நந்தவனக் கைங்கரியம் செய்து கொண்டிருக்குமாறு கட்டளை விட்டேவினர்,


இத்தூதுவர்களும் சிவனடியார்களாகச் சஞ்சரித்துக் கொண்டிருப்பதனை அறிந்து அனந்த கல்யாண குணபரி பூரணனாகிய சிவபெருமானுக்குத் திருமாலைக் கட்டிக்கொண்டிருக்கும் சிவாசாரரைக் கண்டு ஐயா! நாம் அனுப்பியிருந்த நான்கு தூதுவர்களையும் ஏதோ சாலத்தினால் மயக்கிச் சிவனடியார்களாகச் செய்து விட்டனை, நாமே இப்போது வந்திருக்கின்றோம் என்ன சொல்லுகிற் என்றனர்,


இயமன் வார்த்தையினைக் கேட்டு இதென்ன சனியன் சிவ பூசை வேளையில் கரடி புகுந்தது போலத் திருப்பணி வேளையில் வந்து வம்பு செய்கின்றனன் என்றுதன் சமீபத்திலிருந்த ஒரு வாழை நாரெடுத்துத் திருவூறல் நாத! என்றலறி அவன் மீது எறிந்தனர், உடனே அந்த நார் அவ்வியமன் இரண்டு கரங்களையும் இரண்டு கால்களையும் பின்னிக் கொண்டு விலங்கு போலாயிற்று,


அவ்வியமன் அந்தக் கயிற்றை அறுக்கத் தன்னால் வேண்டிய முயற்சி செய்தும் சிறிதும் பயன்படாமல் போய் விட மிக வெட்க மடைந்து சிவாசார முனிவரே! என் கதி என்னவென்று மனத்ததால் இரங்கிக் கேட்டனன், இயமனை நோக்கி முனிவர் காலனே! இத்தலத்தில் தக்கோலத்தடியில் திருவுருக் கொண்டு சுயம்பு மூர்த்தயாக விளங்கும் பால் வண்ண நாதனாகிய தேவாதி தேவனான மகாதேவனைப் பூசித்து வருவையேல் இப்பாசத்தினின்று நீங்கி உனது லோகத்திற்குச் சுகமாகப் போய் வாழக் கடவைய் என்றனர்,


இயமன் கேட்டுச் சந்தோஷித்து அம்முனிவர் சொற்படி நெடுநாள் பூசித்து வருகையில் ஒரு நாள் கண்ணுதற்பெருமான் காட்சி எய்த ஆன்மாக்கள் இருதய கமலமே கோவிலாகக் கொண்டருளும் ஞான சோதியாய் உத்தமராயினோர்க்கு உற்ற துணையாய் உலகெலாம் கடந்த உண்மைப் பொருளாய் விளங்கும் ஒரு தனி முதல்வனை தன்னிரு கண்களால் கண்டு தரிசிக்கப் பெற்ற இயமன் அருமறை மொழிகளால் அப்பரமேச்சுரனைத் துதித்து அவர் பாதார விந்தங்களை முடியின் மேற்சூடி ஆனந்த வெள்ளம் அளவிறந்து பெருக அவனது திருவருளைக் கொண்டாடிப் பாடி நிற்கையில்


சிவபெருமான் இயமனை நோக்கிக் காலனே! உன் அறியாமையினைப் பற்றி நான்  என்ன என்று உரைப்பேன், எத்தனைத் தரம் உனைத் தண்டித்தாலும் மேலும் மேலும் தீமை செய்கிறாய்,திருக்கடையூரில் மார்க்கண்டேயன் பொருட்டு உன்னைத் தண்டித்து தனையும் மறந்தாய்,
திருவெண்காட்டில் சுகேதுவின் பொருட்டுச்சிட்சை செய்ததனையும் நினைத்தாயில்லை
இது மூன்றாவது பிழை இப்போதும் மன்னித்து இருக்கிறோம், விபூதி ருத்திராட்சம் பூண்ட சிவனடியார்கள் வாழும் திசையினையும் நீ கண்ணெடுத்துப் பார்த்தலும் கூடாதெனப் பல தரமும் சொல்லி இருக்கவும் மறந்து விட்டனை,


இனிச் சகியேம். இனியும் இது போன்று சிவனடியாரிடம் நெருங்கிப் பயமுறுத்துவையேல் சிவனடியாரை நிந்தித்தவர்கள் அனுபவிக்கும் எந்நாளும் நீங்கப் பெறாத மகா நரகத்தில் நீயும் அனுபவிக்கும் படி நேரிடும் இனி இங்ஙனம் செய்ய வேண்டாம் கயிறாகிய விலங்கின்னிறும் நீங்கி நினது உலகம் அடையக் கடவையென்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தனர்.


புனர்சென்மமடைந்தோம், புண்ணியமும் பெற்றோம் என இயமன் தனது துன்பத்தினின்று நீங்கி ஆலயத்தினின்று வெளி வந்து அத்தலத்தின் அருமையினையும் பெருமையினையும் அடிக்கடி சிந்தித்துத்தன் பெயரால் ஒரு சிவலிங்கம் வட திசையில் தாபித்துப் பூசித்துப் பலவரம் பெற்றுத் தன்னுலகடைந்து சிவத் தியானப் பரனாய் இருந்து கொண்டிருந்தனன்,


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment