December 23, 2010

பேசும் கலை வளர்ப்போம் - 9

சென்னை புரசைவாக்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம். நானும் பேராசிரியர் அன்பழகனார் அவர்களும் கலந்துகொண்டோம்.  பேராசிரியர் பேச எழுந்தபோது அவரிடம் ஒரு பெண்மணி கைக்குழந்தையொன்றைத் தந்து , பெயர் சூட்டும்படிக் கேட்டுக்கொண்டார். அது பெண் குழந்தை! பேராசிரியர் அதற்குக் ''கருணாநிதி'' என்று பெயர் சூட்டினார்.  கருணாநிதி என்ற பெயர் எல்லா மதத்தினருக்கும், ஆடவர்-பெண்டிர் இருபாலருக்கும் பொருந்துகிற பெயர்!

ஒரு காலத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் திராவிடர் இயக்கம் வளர்ந்த திரு. பாஸ்கரன் அவர்களின் துணைவியார் பெயர்கூட கருணாநிதிதான்! ''கருணை-நிதி'' அதாவது அருட்கருவூலம்-அல்லது அருட்செல்வம்-இப்பெயர் எம்மதத்திற்கும்-ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக் கூடியதுதானே-அதனால் பேராசிரியர் சிரித்துக்கொண்டே, அந்தப்பெண் குழந்தைக்கு 'கருணாநிதி' என்று பெயர் வைத்ததும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு!

பின்னர் அவர் பேசி முடித்தார். நான் பேச எழுந்தேன்.என்னிடமும்  ஒரு தாய் தன்னுடைய பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து பெயர் சூட்டுமாறு கேட்டார். நான் அந்தக் குழந்தைக்கு ''அன்பழகி'' என்று பெயர் வைத்து-பேராசிரியர் மீது எனக்கிருந்த செல்லக் கோபத்தைத் தணித்துக் கொண்டேன்.

ஒரு பேச்சாளர் கூட்டங்களில் தூக்கிக்கொண்டு வருவார்! பெயர் வையுங்கள் என்பார்! இன்னாருடைய குழந்தைக்கு இன்ன பெயர் சூட்டப்படுகிறது என்று ஒலிபெருக்கியில் சொல்வதற்காக அவரைப் பார்த்துக் குழந்தையின் தகப்பனார் பெயர் என்னவென்று கேட்போம்! உடனே அவர் ''நான்தான்'' என்பார். பரபரப்பில் பெயரைச் சொல்லத்திணறுவார். பிறகு ஒரு வழியாகத் தன் பெயரைக் கூறுவார். அவரது பெயர் அப்துல் ரகுமான் என்று இருக்கும்.

அந்தக் குழந்தைக்கு என்ன பெயரை அவர் விரும்புகிறார்-இஸ்லாம் மார்க்கத்துக்கேற்ற பெயரையே விரும்புகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆம் என்றால் ஷாஜகான்-ஜகாங்கீர்-இக்பால்-என்பன போன்ற பெயர்களில் ஒன்றை ஆண் குழந்தைக்கும், நூர்ஜகான், மும்தாஜ், கதீஜா போன்ற பெயர்களில் ஒன்றை பெண் குழந்தைக்கும் சூட்ட வேண்டும். அந்தப் பெயர்களைக் கேட்டுப் பெற்றோரும் அவர்கள் உற்றாரும் மகிழ்ச்சி அடைவர்!

பொதுவான பெயர்களைச் சூட்டுவதெனில் கதிரவன், கதிரொளி, அன்புமணி, அறிவுமணி, கணிமொழி, கயல்விழி, எழிலரசி என்பன போன்ற எல்லா மதத்தினருக்கும் பொருந்தக்கூடிய பெயர்களைச் சூட்டலாம்.

இப்படிப் பெயர் வைப்பதிலேயிருந்து கூட்டத்தில் பேசிப் பெயரெடுப்பது வரையில் பேச்சாளர்கள், மிகுந்த அக்கறையுடன் இருந்திடல் வேண்டும்.

மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு அ.தி.மு.க. ஆட்சியினரால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டையொட்டித் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலாவாரிய  ஓட்டலுக்கு ''இராசராசன்'' என்று பெயர் சூட்டி, அதற்கான பெரிய அளவு விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டன.  ஓட்டல் முகப்பில் 'இராசராசன்'' என்ற பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், திடீரென்று திறப்புவிழா நாளன்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பெயரை அகற்றச் சொல்லிவிட்டார். அச்செயல் தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அச்சமயம் எனது சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் தஞ்சை, திருச்சி, புதுக் கோட்டை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  அந்த நிகழ்ச்சிகளின்போது மேடைகளில் என்னிடம் பெயர் சூட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தைகள் பலருக்கு''இராசராசன்'' என்றே பெயர்வைத்தேன். உடனே கூட்டத்தினர் ''இராசராசன்'' வாழ்க!'' என முழங்கினர். பெயர் வைப்பதில் கூட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்தம் இதய ஒலியை எதிரொலிக்கப் பயின்றிருக்க வேண்டுமெனில், நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்சனைகளில் மக்களின் கவனத்தைக் கவருவதற்கு ஏற்றவண்ணம் பேசும் கலையை வளர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாத்து அல்லவா?

 ''ஈஸ்த்துகிணு போ!'' என்ற சென்னை தமிழும், ''எலே! வாலே!' என்ற நெல்லைத்தமிழும், ''அந்தாண்டே! இந்தாண்டே'' என்ற தஞ்சைத் தமிழும் ''கீறியா? என்னாப்பா பேப்பர் கீதா?' வட ஆற்காட்டுத் தமிழும். இவ்வாறு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுகிற தமிழும்-பேசுகிறவர்கள், மேடையில் ஏறிப்பேசினால், அவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்றால், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மேடைக்கேற்ற இலக்கணத் தமிழையே பேசுவர்!

சொற்பொழிவு மேடைக்கு அத்துணைச் சக்தி உண்டு! அந்தச் சக்தியை அலட்சியப்படுத்தி, எந்தப் பேச்சாளராவது தாங்கள் பழக்கத்தில் பேசுகிற வழூஉச்சொற்களையே மேடையில் பயன்படுத்தினால் அவர்கள் நல்ல பேச்சாளர் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். ஏதோ அந்தக் கூட்டத்தில் சொல்லவேண்டிய கருத்தைச் சொன்னார் என்ற அளவிலேதான் அவரது பேச்சு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அவர் ஒரு பேச்சாளராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்.

No comments:

Post a Comment