December 23, 2010

பேசும் கலை வளர்ப்போம் - 8

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சொற்பொழிவாளராகத் தமிழகத்தில் அறிமுகமான தொடக்கக் காலத்திலே அவரது பேச்சில் அடுக்குச் சொற்கள் மிகுதியாக வந்துவிழும். ஆனால், அந்த சொற்கள் எதுவும் பொருள் இல்லாமல் '''' வுக்கு '''' , '''' வுக்கு '''ய என்ற நிலையில் கையாளப்பட்டதில்லை! ''மாளிகையில் இருந்த நீதிக் கட்சியை மைதானத்திற்குக் கொண்டு வந்தவர் பெரியார்'' என்று அண்ணா பேசுவதின் மூலம், அந்தக் கட்சி ஏழை எளியோர்களின் கட்சியாக மாற்றப் பட்டுவிட்ட வரலாற்று உண்மையை அடுக்குத் தொடரால் விளக்கிவிடுவார். மக்கள் உள்ளம் கவர்ந்திடுவார்.     

அரசியலார் 144 தடைச்சட்டம் போடுவார்களேயானால் அதனை அப்படியே தகவலாகச் சொல்லித் தாக்கிடாமல், ''நாகரிக நாட்களிலே நாக்கறுக்கும் சட்டமா''? என்று மேடையில் கேள்விக்கணை பொழிவார்.இதனைக் கண்ட சிலர், தாங்களும் பேச்சாளராக அடுக்குச் சொற்களைக் கோத்துப் பேசினால் போதுமெனக் கருதினர். பேசும்பொழுது அடுக்குச் சொற்களானாலும் அழகான தமிழானாலும் தானாக வந்து பொழிந்திட வேண்டுமேயல்லாமல் அவற்றைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்திப் பேச முனைந்தால் பேச்சுக் கலையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும்.

''அடக்குமுறைகளால் முடக்கிவிடலாமெனத் துடுக்கு கொண்டு மிடுக்குடன் நடப்பது அடுக்குமோ என நான் ஆத்திரத்துடன் அரசாங்கத்தை அறைகூவல்விட்டுக் கேட்கிறேன்.''
இது அடுக்குச் சொல்லை மட்டும் நம்பிப் பேசுகிற பேச்சு! நான் முதலில் குறிப்பிட்டதைப்போல அண்ணாவுடன் நாடகத்துக்குச்சென்ற நிகழ்ச்சி வேறொன்றை நினைவு படுத்துகிறேன்.

தாம்பரத்திற்கருகே நாடகம்! நாடகத் தலைப்பு, ''மரணப்படுக்கையில்'' என்பது! நாடக விளம்பரங்கள் ''மரணப் படுக்கையில் அண்ணா'' என்றே சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. நாடகத்திற்கு அண்ணா தலைமை வகிப்பதைத்தான் அவ்வளவு அழகாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

அண்ணாவுடன் நானும் சென்றிருந்தேன்.  ஆரம்பம் முதல் ஒரே அடுக்குச் சொல் வசனம்தான்.
''பேயனே! அந்த பேப்பரை எடுத்துவரச் சொன்னால், என்னமோ பிரமாதமாக நின்றுகொண்டு பிரம்மராட்சசனைப்போலப் பேந்தப் பேந்த விழிக்கிறாயே!''
இது போன்ற வசனங்களுக்கெல்லாம் ஒரு உச்சக்கட்டம் என்ன தெரியுமா?
வில்லன், கதாநாயகனைப் பார்த்து, ''உன் விஷயத்தில் நான் சர்ப்பமாக இருப்பேன்'' என்கிறான். உடனே கதாநாயகன் வில்லனை நோக்கி,'நான் சர்ப்பத்தையும் சாம்பார் வைத்துச்சாப்பிடுவேன்.' என்கிறான், அய்யோ அடுக்குச் சொல் படும்பாடே!'' என்று அண்ணாவும் மற்றவர்களும் நினைத்துக் கொண்டோம்!
மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமிருக்கும்!''
''சாலையோரத்தில் வேலையற்றுதுகள். வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்! வேந்தே! அதுதான் காலக்குறி!''

இப்படி எழிலார்ந்த நடைபோட்ட அண்ணாவின் அடுக்குச் சொல்லைக் கையாண்டு எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. காரணம், அவர்கள் கையாண்ட அடுக்குச் சொற்களில் கருத்தோட்டமில்லை.


அண்ணா அவர்களேகூட, தனது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் மக்களுக்காகப் புரியவைப்பதில்-அவர்களது இதயங்களில் பதியவைப்பதில் அக்கறை காட்டினாரே தவிர-வெறும் அடுக்குச் சொல்லை அடுக்கி, சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல் விட்டுவிட்ட குறைபாட்டுக்கு என்றைக்குமே தன்னை ஆளாக்கிக் கொண்டதில்லை.

மேடையில் பேசுவதற்கு எடுத்துக் கொள்கிற பொருள்தான் மிக முக்கியம்! பொன் கட்டியைப் போன்றது பொருள் என்றால், அதனை அணியாகச் செய்து மெருகேற்றிடுவதுதான் சொற்களும்-சுவையான உவமைகளுமாகும்!

மேடையில்  ஏறி நின்று வெறும் வார்த்தை ஜாலங்கள் புரிந்துவிட்டு, தனக்குத் தெரிந்த நாலு கவிதைகளை அழகாகக் கூறிவிட்டு, எந்தக் கருத்தையும் வலியுறுத்தி மக்கள் உள்ளத்தில் பதிய வைக்காமல் இறங்கிவிட்டால், ஏதோ ஒரு வாத்தியக் கருவி செய்த வேலையைத்தான் செய்ததாக ஆகும்! அந்தச் சங்கீத்தைச் சிறிது நேரம் ரசிப்பது போலத்தான் அந்தப்பேச்சையும் மக்கள் ரசிப்பார்கள்!.
இதயமற்றவரைப்போல ஒரு முதலமைச்சர் நடந்து கொண்டு, மக்கள் மீது அடக்கு முறையை அவிழ்த்துவிட்டதை ஒரு முறை , கடற்கரைக் கூட்டத்தில் அண்ணா குறிப்பிட்ட அழகே அழகு!
''நமது முதல்வருக்கு உள்ளமிருக்குமென்று நம்பினேன். ஆனால் பாவம்; அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே ஒரு பள்ளம்தான் இருக்கிறது''!
''உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன''
சட்டசபையில் விநாயகம் அவர்கள் அண்ணாவை நோக்கி இந்தச் சொற்களை வீசியவுடன்,
''என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன!''
என்று அண்ணா பதில் அளித்த பாங்கினை விநாயகமே வியந்து போற்றினார்.
சட்டக்கல்லூரியில் ஒரு விழா! நானும் குமரி அனந்தன் அவர்களுன் கலந்து கொண்டோம்! அவர் என்னை விளிக்கும்மோது; ''குறளோவியம் போல் விளிக்கிறேன் ''மு.க.'' அவர்களே!'' என்றார்.
நான் அவரை விளிக்கும்போது. ''நானும் குறள் போல விளிக்கிறேன்;''அன்புள்ள குமரி'' அவர்களே!'' என்று கூறினேன்.
ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.

No comments:

Post a Comment