December 23, 2010

பேசும் கலை வளர்ப்போம் - 7

உருவத்திற்கும் பருவ்த்திற்கும் ஏற்ற வண்ணம் பேச்சு அமைந்திட வேண்டும் என்பது கூட அலட்சியப்படுத்திடக்கூடிய கருத்தல்ல!  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலும் என்னுடைய முன்னிலையிலும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு நடைபெற்ற இரண்டு நாடகங்களை இங்கே இரண்டு விஷயங்களுக்காக நான் குறிப்பிட விரும்புகிறேன்.

வடசென்னைப் பகுதியில் நடைபெற்ற நாடகம், கட்சித்தோழர்கள் தயாரித்து நடத்திய நாடகம். ஏழைகளுக்காகப் பாடுபடக்கூடிய ஒருவன். அவன் ஊர் மடாதிபதியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறான்.  ஏழைகள் பின் தொடர அந்த ஏழை பங்காளன் மடத்திற்குள் நுழைந்து தங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் மடாதிபதியைப் பார்த்துக் கோடையிடியென முழங்குகிறான்.

''உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கும் எங்கள் தொழிலாளர் வர்க்கத்த்தைப் பாரும்; உண்டு ஊதி உப்பிக் கிடக்கும் உம்மைப் போன்ற மடாதிபதிகள் கொழுத்திட எங்கள் வியர்வை ஆறாக ஓடவேண்டுமோ?''

இப்படி உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சியுடன் ரசித்துக் கையொலி எழுப்பிட வேண்டிய அந்தக் கட்டத்தில் நாடகம்  பார்த்திட அந்த மண்டபத்தில் குழுமியிருந்தோர் அனைவரும்  ஏகடியமாகச் சிரித்துவிட்டனர். அண்ணாவும் புன்னகை புரிந்தவாறு என்னை நோக்கினார். நான் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் தவித்தேன்.


கையொலி பெறவேண்டிய வசனங்கள் கேலிச் சிரிப்புக்கு உள்ளானது ஏன் தெரியுமா?''
ஏழை பங்காளன் எந்த மடாதிபதியைப் பார்த்து, 'உண்டு-ஊதி-உப்பிக்கிடக்கிறாய்!'' என்று சொன்னாரோ அந்த மடாதிபதி வேடம் போட்டவர் கொத்தவரங்காய் போன்ற உடல் படைத்தவர். கூனிக்குறுகி எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தார்.  ''உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கிறோம்'' என்று முழங்கியவரோ வாட்ட சாட்டமாகவும் தொந்தியும் தொப்பையுமாகவும் சுமார் முந்நூறு பவுண்டு எடையுள்ளவராகத் தோற்றமளித்தார். ஒன்று வசனத்தை மாற்றியிருக்க வேண்டும். அல்லது வேடத்திற்குப் பொருத்தமாக நடிகர்களையாவது மாற்றியிருக்க வேண்டும்.

இதேபோன்ற தவறு சொற்பொழிவாற்றும் மேடைகளிலும் ஏற்படுவதுண்டு. பருமனாக உள்ள ஒருவர் ஏழைப் பாட்டாளிகளைப் பற்றியப் பேசும்போது, தன்னையும் அவர்கள் பட்டியலிலே இணைத்துக்கொண்டு, ''எங்களின் பஞ்சடைந்த கண்களைப் பாருங்கள். பசித்துக் குமுறி ஒட்டிய வயிறுகளைக் காணுங்கள். உலர்ந்த உதடுகளை நோக்குங்கள்.

வாடிய மேனியை மேலும் வதைக்கும் வறுமை நீங்க வழி காணுவோம் வாருங்கள்!.''
என்று பேசினால், கூட்டத்திலிருப்போர் அந்த உரையில் உள்ள உணர்வை மறந்துவிட்டு, உரையாற்றுபவரின் உடலை விமர்சித்துக் கொண்டிருப்பர்.
ஏழை எளியோருக்காக வக்காலத்து வாங்கிப் பேச வேண்டுமே தவிர, பேசுகிறவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட, தன்னையும் பஞ்சடைந்த கண்கள் கொண்டோர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு பேசுவது உரிய பயனைத்தராது.

புல் தடுக்கினால் கீழே விழக்கூடிய அளவுக்கு உடல் வலிவு படைத்தவர்களாக இருக்கும் பேச்சாளர்கள் அலெக்சாண்டரின் ஆற்றலை-நெப்போலியனின் அஞ்சா நெஞ்சத்தை-சேர சோழ பாண்டியர்களின் வீர வரலாற்றை விவரித்துச் சொல்வதின் மூலம் கூடியிருக்கும் மக்களைக் கவரலாம். ஆனால், அந்தப் பேச்சாளர்கள் தங்களின் உள்ளத்து உறுதியை வெளிக்காட்டுகிற அளவுக்கு வார்த்தைகளைத் தொடுக்க வேண்டுமேயல்லாமல்-தங்களின் உடல் வலிவை மிகைப்படுத்திப் பேசினால் அதனை மக்கள் ஏகடியமாகக் கொள்வார்களே தவிர, பேச்சாளரின் உணர்வுகளோடு ஒன்றிவிடமாட்டார்கள்.
உருவ்த்தைப் போலவேதான் பருவமும்! வயதுக்கேற்ற பேச்சாக இருக்க வேண்டும். வயது மீறிய பேச்சுக்களை ஏதோ ஒப்புக்குப் பாராட்டுவார்களேத் தவிர அந்தக் கருத்துக்களுக்கு உரிய மதிப்பை மக்கள் வழங்க மாட்டார்கள்.

''ஒளவைப்பாட்டி ஆத்திச்சூடி இயற்றினார். அறஞ்செயவிரும்பு-ஆறுவது சினம் போன்ற ஒளவையாரின் அறிவுரைகளை நாம் இந்த இளமைக் காலத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் மறந்துவிடக்கூடாது''-இப்படியொரு சிறுமியோ, சிறுவனோ பேசும்போது இயற்கையாக இருக்கும். அதே சிறுமி அல்லது சிறுவன்;

''ஒளவையார் என்ற பெயரில் ஒருவர் மட்டுமல்ல! வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். புறநாநூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள ஒளவை வேறு!-ஆத்திச்சூடி பாடிய ஒளவை வேறு. இரண்டு ஒளவையார்களையும் ஒருவரேயென எண்ணிக் குழம்பிக் கொள்வது கூடாது.!
எனக் கூறிவிட்டு புறநானூற்றிப் பாடல் ஒன்றையும் பாடிக்க காட்டினால், அது இயற்கையாடதாகவோ, அந்தச் சிறுமியோ சிறுவனோ உணர்ந்து பேசுவதாகவோ அமையாது.
வயது வந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதை இளைஞர்கள் பேசுவதும்-வயது வந்தவர்களும், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதைத் தங்களின் வரம்பை மீறிப் பேசுவதும்-சுவைக்கத் தக்கவைகளாக இருந்திடமாட்டா!

''கல்யாணம் பண்ணிக்கிறதே முட்டாள்தனம்! ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்பினால் அவுங்க பாட்டுக்கு ஒழுங்கா வாழ்க்கை ந்டத்த வேண்டியதுதான். பிடிக்கலேன்னா ரத்து பண்ணிட்டுப் போக வேண்டியதுதான்.கல்யாணங்கிறதிலே என்ன புனிதம் வந்து கிடக்கு; வெங்காயம்!''
இப்படி ஆயிரக்காணக்கான மக்களுக்கு மத்தியில்-மேடையில் மணமக்களையும் அவர்களது உற்றார் உறவினர், நண்பர்களையும் வைத்துக்க்கொண்டு தமிழ்நாட்டில் பெரியார் ஒருவரால்தான் பேச முடிந்தது.!

அவரது வயது-உழைப்பு-தியாகம்-ஓய்வில்லாத தொண்டு-கொள்கைக்கும் அப்பாற்பட்டு அவரிடம் ஆத்திகர்களும் கூடக் கொண்டிருந்த மரியாதை-இவ்வளவும் அவருக்குத்துணை நின்ற காரணத்தால் திருமண வீட்டிலேயே திருமணத்தை எதிர்த்து அவர் பேசியபோது அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்; வெறுப்பைக் காட்டாமல் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். பெரியார் போலப் பேசுவதாக எண்ணிக்கொண்டு வேறு யார் அப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணியில் மேடைகளில் உரையாற்றினாலும் எதிரை வீற்றிருப்போர் முகஞ்சுளிக்கவே செய்வர்.

அழகு தமிழில் அமைப்புக்களோடு சொற்களை வரிசைப் படுத்தி பேசுகிற வழக்கம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் பிரச்சனைகளை அவரது பேச்சின் மூலம் அணுகும் முறை தனித்தன்மை வாய்ந்தது. தங்களுக்காகப் பேசுகிற ஒரு தலைவர் என்ற நிலையில் மக்கள் அவரது நீண்ட சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்பார்கள். அவரது வயது, சொயல்திறன், தியாகம், உழைப்பு, சொல்வாக்கு, இவையனைத்தும் அவரது பேச்சுக்கு அடித்தளமிட்டிருந்தன. எனவே அவரது உரையில் எளிமையே மிகுந்திருந்ததையும் மக்கள் குறையாகக் கருதாமல் -அவர் சொன்ன கருத்துக்களை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டனர். ''பெருந்தலைவர் காமராஜரைப் போலப் பேசினேன்; மக்கள் ஆர்வத்துடன் கேட்கவில்லையே!'' என்று எந்தப் பேச்சாளராவது ஆதங்கப்பட்டுக் கொள்வார்களேயானால்-அந்தப்பேச்சாளர் காமராஜராக வளரவில்லையே என்பதுதான் நமது பதில்.

No comments:

Post a Comment