December 23, 2010

பேசும் கலை வளர்ப்போம் - 2

அப்போது வயது எனக்கு பதினைந்து! என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் சிலரையும் நான் வசித்த தெருவில் உள்ள இளந்தோழர்கள் சிலரையும் சேர்த்துக்  கொண்டு "சிறுவர் சீர்திருத்த சங்கம்" என்ற ஒரு அமைப்பை ஒரு ஒலைக் குடிசையில் தொடங்கினேன். அதில் காலணா கொடுத்தவர்களே உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். வராந்தோறும் அவரகள் சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு பைசா சந்தாக் கட்டணம் செலுத்திட வேண்டும்.

"நெஞ்சுக்கு நீதி" என்ற எனது வாழ்க்கை வரலாற்றுக்கு குறிப்புகளின் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ஒலைக் குடிசையில் இருந்த அந்தச் சங்கம், விரைவில்-பழுதுபட்ட ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு மாற்றப் பட்டது. அதற்கு முன்பே அந்த ஒலைக்குடிசையின் ஏழெட்டு சிறுவர்களை உட்கார வைத்துக் கொண்டு சங்கத்தின் தலைவனான நான் பேசுவேன். 

சிறுவர்கள் சுகாதாரத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பீடி சிகரெட் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. தீமை தரக்கூடிய வார்த்தைகளை யாரும் பேசக்கூடாது. இது போன்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்வேன்.

அந்த ஒலைக் குடிசைக்குப் பக்கத்து வீடுதான் மறைந்த இசை மணி டீ.வி. நமசிவாயத்தின் வீடு! நமசிவாயம் என் இளமைக்கால நண்பர். அவரது மாமன்கள் தான் டி.என. இராமன்- டி.என. லட்சப்பன் என்ற சுயமரியாதை இயக்கத்தின் சுடர்களாக அப்போது அந்தப் பகுதியிலே விளங்கியவர்கள். அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பணமுடிப்பு வழங்கிய விழாவுக்கு முயற்சி எடுத்துக் கொண்ட டி. எம். பார்த்தசாரதி, ஜலகண்டபுரம் கண்ணன் போன்றவர்களுடன் முன்னணியில் நின்று பாரதிதாசன் மலர் ஒன்றையும் வெளியிட்டவர்தான் டி.என்.இராமன்!

அத்தகைய அரசியல் சமுதாய ஈடுபாடு கொண்டவர்களை நண்பர் நமசிவாயம் இல்லத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அதன் காரணமாகப் பல புத்தகங்களையும் பத்திரிகைகளையும் காண முடிந்தது.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இது நமது கிராமங்களில் இன்றும் ஒலிக்கின்ற பழமொழி. அதைப்போல பேசுவதற்கும் ஏதாவது விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால்தானே பத்து பேர் கூட்டமென்றாலும் பேச வரும் பல தலைவர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் பழக்கம்-நாளிதழ்கள்-வார-மாத இதழ்களை ஆர்வத்துடன் காத்திருந்து வாங்கிப்படிக்கும் பழக்கம்-இவைகள் என் உள்ளம் என்ற சட்டியை நிரப்பி வைத்திருந்தன. அந்த வயதில் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சமுதாயப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த ஒலைக் குடிசைக் கூட்டங்களில் என்னால் நடுக்கமின்றி பேச முடிந்தது. அந்தத் தயாரிப்பு, நான் பயின்ற உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேடைப் பேச்சுப் போட்டிக்கு மிகவும் துணையாக இருந்தது.

அவை நடுக்கம்-அதாவது சபைக் கூச்சம்- அதிலிருந்து ஒருவன் மீண்டு விட்டால், அவன் நல்ல பேச்சாளனாக வாய்ப்பு பெற்று விட்டான் என்று கூறிவிடலாம். இன்றைக்கு மேடை அதிர முழங்குகிற பல பேச்சாளர்கள் தங்களது முதல் மேடைப்பேச்சின் போது உடலிலுள்ள நாடி நரம்புகள் எல்லாம் அதிக வியர்வை வழிந்தோட நாக்குழற மேடையில் நின்றிருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

அந்த சங்கடம் எனக்கு ஏற்படாமல் போனதற்கு இளம் வயது முதலே, சிறு சிறு கூட்டங்களில் நானே பேசிப் பழகிகொண்டதுதான்.  அப்படியிருந்தும்கூட பெரிய கூட்டங்களை காணும்போது ஆரம்பகாலத்தில் சிறிது நேரம் நடுக்கம் ஏற்பட்டதும் உண்டு. உயர்நிலைப்பள்ளியில், "நட்பு" என்ற தலைப்பில் எனது முதல் மேடைப்பேச்சை நிகழ்த்தினேன்.

எனது தமிழாசிரியர்களில் ஒருவரும், இன்று மகா வித்துவான்களாக விளங்கக் கூடியவருமான, தண்டபாணி தேசிகர் அவர்கள் தான் எனது பேச்சுக்குத் தேவையான பல குறிப்புகளை எனக்கு வழங்கினார். அந்தக் குறிப்புகளைப் பெற, அவரது வீடு தேடி நாலைந்து முறை நடந்திருக்கிறேன். திருவாரூர் குமர கோவில் தெருவில் அப்போது அவர் குடியிருந்தார். அவர் தந்துதவிய குறிப்புகளை அப்படியே எழுதி, பலமுறை மனப்பாடம் செய்து கொண்டேன். "நட்பு" என்ற தலைப்பில் பேசிய எனக்குத்தான் மிகப்பெரும் பாராட்டு கிடைத்தது.

நான் அந்தப் பாராட்டைப் பெறுவதற்கு இரண்டு மூன்று நாட்கள், நான் எழுதிய குறிப்புக் கோவையை உறக்கமின்றி மனப்பாடம் செய்திருக்கிறேன். என் வீட்டார் அனைவரையும் தாழ்வாராத்தில் உட்கார வைத்து, நான் முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தியிருக்கிறேன். அதனால் தான் எனது மாணவப் பருவத்து முதல் மேடைப்பேச்சு, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவராலும் பாரட்டப்படுகிற அளவுக்கு அமைந்தது.

சபை நடுக்கத்தால் ஏற்படுகிற வேதனையான விளைவுகளுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லமுடியும்.

""கடவுள்"" என்ற தலைப்பில் எனது பள்ளியில் ஒரு பேச்சுப்ப போட்டி! அதில் எனக்கு எதிராகப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ நண்பர், பேசத் தொடங்கும் போதே நாக்கு தடுமாறிற்று. எப்போது பேச்சை முடிப்பது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த நண்பர் ""இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்""  என்று கூறுவதற்குப் பதிலாக- ""இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்"" என்றாரே பார்க்கலாம்! 'கூட்டம் 'கொல்''லென்று சிரித்து விட்டது.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த ""கட்டபொம்மன்"" நாடகம் சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் எனக்குக் கிட்டியது. ""தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க!"" என்று அண்ணா சிவாஜிக்குக் கூறிய அன்பு வாழ்த்து- அந்த நிகழ்ச்சியில்தான்!

ஒரு பெரும பட அதிபர், நாடகம் காண வந்திருந்தார், திடீரென சிவாஜி அவர்கள் அவரை மேடைக்கு அழைத்து மாலை அணிவித்து இரண்டு வார்த்தை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் பட அதிபர் ஒலி பெருக்கியின் முன்னால் நின்றார். கை, கால்கள் உதறல் எடுத்தன. எத்தனையோ இயக்குனர்களை, நடிகர் நடிகைகளை, திரையுலக நிபுணர்களை உருவாக்கிய பெரியவர் அவர்! நூற்றுக்கணக்கானவர்கள் அவரது நிறுவனத்தில் பணிபுரிகிற அளவுக்கு படத்துறையில் சிறந்த அனுபவம் பெற்றவர். இந்தி மொழியிலும் கூடப் படங்கள் எடுத்து, தமிழகத்துக் கலைத் திறனை வெளிப்படுத்தியவர். மலை போன்ற உருக்கொண்டவர். அப்படிப்பட்டவர் ஒலிப்பெருக்கியின் முன்னாள் நின்றவுடன் வியர்வை கடலில் மிதந்தார். இறுதியாக அவர் பேசியது என்ன தெரியுமா?

""நானும் நீங்களும் கண்டு களித்த.... இந்த... இந்த...பொம்மன் கட்டன் நாடகமானது...""

அதுவரையில் அவையோர் சும்மா இருப்பார்களா? அதிர்வெடிச் சிரிப்பு! இதற்குமேல் அவருக்குத்தான் பேச வருமா? முடியுமா?

இதிலிருந்து பேசும் கலைக்கு பெருமை சேர்க்க வேண்டுமானால், முதலில் கூட்டத்தைக் கண்டு ஏற்படுகிற அச்சத்தை மெல்ல மெல்ல ஒத்திகை பார்த்தாவது போக்கிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை புரிகிறதல்லவா?

Courtesy: Muthuaram magazine

1 comment:

  1. The King Casino Hotel | Jamul Casino & Spa
    The King Casino Hotel is https://jancasino.com/review/merit-casino/ set 1 mile south of Jamul Casino, 1 MPRC Blvd, Jamul, Georgia. View map. This casino offers a worrione variety of gaming https://deccasino.com/review/merit-casino/ options 출장마사지 including ventureberg.com/ slots,

    ReplyDelete