December 24, 2010

பேசும் கலை வளர்ப்போம் -15

இரவு பொதுக் கூட்டத்திலே ஆயிரக்கணக்கான மக்களிடையே முழக்கம். காலையில் ரயிலடிக்கோ அல்லது பேருந்து நிலைத்துக்கோ அந்தப் பேச்சாளர் வழியனுப்பி வைக்கப்பட அழைத்துச் செல்லப்படுவார். அவர் விரல்களின் இடுக்கில் சிகரெட்! வாய் வழி மூக்கு வழியே புகை மண்டலம்! முதல்நாள் பொதுக்கூட்டத்தில் பார்த்துக் களித்துப் பாராட்டியவர்களில் ஒருசிலர் அந்த இடங்களில் இருந்து பேச்சாளரைக் காண நேர்ந்தால் அவர் மீதுள்ள மரியாதையும் மதிப்பும் சிறிது குறைய்த்தான் செய்யும்.

நாலு பேருக்கு மத்தியில் சிகரெட் விஷயத்தில் கூட எவ்வளவு கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகிறபோது-மற்ற விஷயங்களைப்பற்றி விவரிக்கத் தேவையில்லை.

இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமென நம்புகிறேன். தான் ஈடுபாடு கொண்டுள்ள இயக்கத்திற்காக-தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக சில பழக்கவழக்கங்களைத் தியாகம் செய்ய வேண்டியதுதான் என்ற முனைப்பும் உறுதியும் அந்த இயக்கத்தின் பேச்சாளர்களுக்கு மிகமிகத் தேவை.

எந்த ஒரு கட்சியிலும், அல்லது பெருங்குழுவிலும் பேச்சாளர்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. தொண்டர்குழாம் அவர்களைச் சுற்றியிருக்கும். அந்தத் தொண்டர்கள் அமைத்துத் தருகிற மேடையிலேதான் நாம் பேச்சாளராக  ஒளிவிடுகிறோம் என்ற உணர்வு பேச்சாளர்களுக்கு இருந்திடவேண்டும்.

பேச்சாளர்கள், ஒரு இயக்கத்தின் அல்லது பெருங்குழுவின் எஜமானர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டு வேலைக்காரர்களைப் போலக் கருதி நடத்தக்கூடாது. தோழமை உணர்ச்சி பெருக்கெடுத்திடல் வேண்டும்.

தொண்டன் உண்டியல் குலுக்கி, ஒரு காசு இரு காசு என சேர்த்து பேச்சாளருக்கு வழிச் செலவுக்குப் பணம் அனுப்பி, விளம்பரச் சுவரொட்டியடித்து இரவு பகல் கண் விழித்து அவன் கையாலேயே பசை தடவி அவைகளை ஒட்டி, கம்பங்களிலும் மரங்களிலும் ஆபத்தை மறந்து ஏறித் தோரணங்கட்டி, மேடைபோட்டு, ஒலிபெருக்கி அமைத்து இறுதியாகப் பேச்சாளர் வரவில்லை என்ற செய்தி கேட்டால் எப்படிச்சோர்ந்து போவான் என்பது, தொண்டர்களாக இருந்து இயக்கம் வளர உழைத்தவர்களுக்கும்-உழைப்பவர்களுக்கும்தான் தெரியும். அத்தகைய ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு தருவது கூடாது.

தவிர்க்கமுடாயாத-எதிர்பாராத-நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.

என் தந்தை இறந்து எரியூட்டல் நடந்த அன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் ஒத்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குத் தவறாமல் சென்று வந்தேன்.

முதல் மனைவி பத்மா, மரணப்படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்திற்குச் சென்றுவிட்டு இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன்; அவள் என்னைப் பிரிந்து நீங்காத்துயில் கொண்டுவிட்டாள் என்ற செய்தியைக் கேட்க!

இப்படிப் பல நிகழ்ச்சிகள் என் பொது வாழ்க்கையில்!

பெரியாரிடம் கற்ற பாடங்களில் இந்தக் கடமை தவறா பயிற்சியும் ஒன்று!

கடுகுபோல் ஒரு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து நிகழ்ச்சகளை ரத்து செய்துவிடுகிற பேச்சாளர்களை இன்று காணும்போது, என்னைப் பற்றிச் சில குறிப்புகளைச் சொல்ல நேர்ந்தது.

பேச்சாளர்களைக் கூட்டத்திற்கு அழைக்கிறவர்கள் சிலரும், கூட்டம் முடிந்தபிறகு அவர்களைத் திண்டாடித் தெருவிலே நிற்குமாறு விட்டுச் செல்லுகிற நிகழ்ச்சிகளும் இல்லாமல் இல்லை.

எல்லாக் கட்சிகளிலுமே ஊடுருவியுள்ள இந்தக் குறைபாடுகளைப் பேச்சாளர்களும் கூட்ட அமைப்பாளர்களும் நீக்கிக் கொள்ளவேடண்டும்.

மேலவைத் தலைவராக விளங்கிய அண்ணன் சி.பி.சிற்றரசு, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி, தன்மான இயக்கத் தளகர்த்தர் அண்ணன் அழகிரிசாமி ஆகியோர்-கூட்டத்தில் தங்கள் பேச்சை முடிக்கும்போது; மேடையில் இருக்கும் கட்சியின் செயலாளரது கைகளைக் கெட்டியாகப் பிடித்தவாறே-மக்களைப் பார்த்து-'இவ்வளவு நேரம் சொன்னவற்றை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! என்று கேட்டுக் கொண்டே மேடையிலிருந்து இறங்குவோம் என்று அவர்களே பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி ஊருக்குச் செல்ல வழிச் செலவுப் பணத்திற்கு என்ன செய்வது? யாரைத் தேடுவது? அதனால்தான் செயலாளர் கைகளை அன்போடும் பாசத்தோடும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேச்சை முடிப்பார்களாம்.!

இதோ இந்தத் தம்பியிருக்காரே; உங்க ஊர் செயலாளர்-தங்கக் கம்பி! நல்ல உழைப்பாளி. இவருடன் நீங்கள் ஒத்துழைத்து இந்த ஊரை நமது கட்சிக் கோட்டையாக்க வேண்டும்.

இவ்வாறு செயலாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுபோல, ஆளை விடாமல் கூட்டம் முடிந்ததும் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிட எத்தகைய தந்திரம் கையாள வேண்டியிருந்திருக்கிறது! அதுவும் அந்தக் கால்த்தில் பெரும் புகழ் பெற்ற அந்தப் பேச்சாளர்களுக்கே சில இடங்களில் அப்படிப்பட்ட ஒரு நிலை!

Courtesy: Muthuaram magazine

No comments:

Post a Comment