December 24, 2010

பேசும் கலை வளர்ப்போம்-11

"சொல்லும் கருத்துக்கள் தெளிவாக அழகான சொற்களில் தர்க்கமுறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக்காட்டுகளோடு கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு, உணர்ச்சி தோன்ற, 'உண்மைதான் சொல்வது' என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்கவேண்டும். இப்படியிருப்பதுதான் சிறந்த பேச்சு. இதுதான் பேச்சின் இலக்கணமுமாகும்'.
என்று பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் அழகுபடக் குறிப்பிடுவார்.

'பேச்சு என்பது ஒரு கலை; பேராற்றல் வாய்ந்தது முத்தொழில் புரியும் வல்லமை வாய்ந்தது. பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை. மேடைப் பேச்சு நாட்டை வளப்படுத்தும்; வாக்காளரைப் பண்படுத்தும்; சட்டசபையைச் சீர்செய்யும்; நல்லமைச்சு அமைக்கும்.'
என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பொழிந்துள்ளார்.

மேடைப் பேச்சாளர் இவற்றையெல்லாம் காணமுடியும் என்பதற்குப் பதிலாக இவற்றையெல்லாம் காணத்தக்க அளவுக்கு மேடைப் பேச்சு அமையவேண்டும் என்பதைத்தான் திரு.வி.க அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.

மாலையில் இசை நிகழ்ச்சியென்றால் காலையில் ஒரு முறை இசைவாணன், தன் குழுவினருடன் இல்லத்திலோ, அல்லது தங்கியிருக்கும் விடுதியிலோ எல்லாவற்றையும்  சரிபார்த்துக் கொள்கிறான்.

இரவு நாடகமெனில் , பல இடங்களில் நடைபெற்றுப் பழகிப்போன காட்சிகள் என்றாலுங்கூட, காலையிலோ மாலையிலோ நடிகர்கள் தங்களது முக்கிய வசனங்களை உரக்க உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறார்கள்.

அதைப்போலவே பேச்சாளர்களும் தாங்கள் பேசப் போகும் கருத்துக்களை மேடைக்குப் போவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை வரிசைப்படுத்தி, எண்ணிப் பார்த்து அதன்பிறகு மேடையேறினால், நல்ல சொற்பொழிவாளர் என்ற வெற்றி முகட்டை விரைவில் அடையலாம்.
பேச்சுத்திறன் ஓரளவு பெற்றவர்கூட அவசரத்திலும், ஆத்திரத்திலும், நிதானமிழந்து பரபரப்புக்கு ஆட்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சொல்லக் கூடாததைச் சொல்லி பின்னர் வருந்துவதுண்டு.

பல ஆண்டுகளுக்கு முன்பு  நாகர்கோயிலில் தி.மு.கழக மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை இன்றைய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலாரும் நண்பர் ஜாண் என்பவரும் முன்னின்று நடத்தினார்கள். அந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் பேசினார். அவர் இப்போது கழகத்தில் இல்லை. வேறு கட்சியில் இருப்பதாகக் கேள்வி.

நாட்டில் ஏற்பட்டிருந்த வறுமை நிலையைக் குறிக்க அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதுண்டு. ''திண்டுக்கல்லிலேயிருந்த மதிப்பிற்குரிய எட்டு தோழர்கள் கத்தாழைக் கிழங்குகளைச்சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்ற செய்தியை; நான் எழுதியுள்ள இதே வாக்கிய அமைப்பில் பல கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். ஆனால் அன்று நாகர்கோயில் மாநாட்டில் பேசும்போது, 'திண்டுக்கல்லிலேயிருந்த எட்டு தோழர்கள், மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகளைச் சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்று பேசிவிட்டார். மதிப்பிற்குரிய தோழர்களுக்குப் பதிலாக மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகள் என்று 'சொல்' இடம் மாறிவிட்டது! அவசரப்பட்டுப் பேசுவதால் வருகிற வினை!

அதே மாநாட்டில் இன்னொருவர்! கவித்துவம் கொண்டவர்! அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்த இலக்கியப் பேச்சாளர் ஒருவரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு, தானே அந்தக் கூட்டத்தில் கேலிக்குரியவரானார்.
அந்தக் காங்கிரஸ் இலக்கியப் பேச்சாளர், சீதையை மணக்க இராமன் அயோத்தியாபுரியில் ஜனகனின் வில்லைமுறித்தான் என்று பேசினார்! பாவம்; அந்த இலக்கியப் புலிக்கு, ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா? அஸ்தினாபுரியா? என்று கூடத் தெரியவில்லை!'
என்று ஏளனம் செய்தார்! மேடையிலிருந்த அண்ணா, நான் பேராசிரியர், நாவலர், சம்பத், நாஞ்சிலார் அனைவரும் சிரித்துவிட்டோம்.அதற்குள் நண்பர் ஆசைத்தம்பி குறுக்கிட்டு, 'யோவ்! ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி அய்யா!' என்று திருத்தினார். அத்துடன் விட்டாரா அந்தப் பேச்சாளர்? 'மன்னிக்கவும்! நான் இராமாயன ஞாபகத்தில் தவறாகக் கூறிவிட்டேன்' என்று மக்களை நோக்கிச் சொன்னார்! மாநாட்டுப் பந்தல் சிரிப்பொலியால் அதிர்ந்தது!

நினைவு இழையில் வார்த்தை முத்துக்குளைக் கோப்பதற்கேற்ற நிதானத்தன்மை பேச்சாளர்களுக்கு மிக அவசியம்.

ஆங்கிலப் பேரறிவாளர் அடிசன் பதினெட்டாம் நூற்றாண்டில் புகழேணியில் இருந்தவர். அவர் ஒருமுறை பேசமுற்பட்டு ' I conceive, conceive, conceive" என்று மூன்றுமுறை மூச்சுத்திணறக் கூறிக்கொண்டே நின்றாராம்! 'கன்சீவ்' என்பதற்கு 'நினைக்கிறேன்' என்றும் பொருள் உண்டு! ' கருவுற்றிருக்கிறேன்' என்றும் பொருள் உண்டு!

அடிசன் இப்படி திணறிக் கொண்டிருந்தபோது, எதிரேயிருந்த ஒருவர் எழுந்து'அடிசன் மூன்றுமுறை கருவுற்றார்!  ஆனால், குழந்தையைத்தான் பெறவில்லை' என நகைச்சுவை பொங்கிடக் கூறினாராம்.

ஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான டிசரலி, முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம். ' நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிச்செல்ல அஞ்சிடமாட்டேன்; ஆனால் முதன்முதல் பாராளுமன்றத்தில் பேசத் தொடங்கி நான் பெரிதும் நடுங்கினேன்' என்று கூறினாராம்! அப்படித் தோல்வி மனப்பான்மையுடன் பேச்சாளராகத் தொடங்கி, பின்னர் அவரே மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அச்சத்தை விரட்டி, அதற்குப் பிறகு பெரும் பேச்சாளர் என்ற கீர்த்திக் கொடியை நாட்டினார்.

Courtesy: Muthuaram magazine

No comments:

Post a Comment