November 30, 2010

திருமுருக கிருபானந்த வாரியார்திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

கிருபானந்த வாரியாரின் தந்தை பெயர் மல்லையாதாசர் பாகவதர். பக்தி சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தாயார் பெயர் கனகவல்லி அம்மாள். இவர்களுக்கு 11 பிள்ளைகள். இதில் 4வதாக பிறந்தவர் வாரியார். 1906 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ந்தேதி வாரியார் பிறந்தார். வாரியார் 3 வயது குழந்தையாக இருந்தபொழுதே அவரது தந்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். இதனால் தனது 5 வயதிலேயே தானே புத்தகங்களை படிக்க தொடங்கி விட்டார். பள்ளிக்கூடம் அனுப்பினால் கெட்டு விடக்கூடும் என கருதிய அவரது பெற்றோர்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வில்லை. அவரது தந்தையே வீட்டில் இருந்து படிப்பு சொல்லிக்கொடுத்தார்.


அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட வேண்டும். 5.30 மணிக்குள் குளித்துவிடவேண்டும். 6 மணியில் இருந்து 7 மணி வரை இசைப்பயிற்சி. 7 மணிக்கு பிறகு நன்னூல் முதலிய இலக்கண படிப்பு. பிற்பகலுக்கு பிறகு தேவாரம், திருப்புகழ், சரித்திர கீர்த்தனை முதலியவற்றை அவரே கையால் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவேண்டும். இரவு நேரத்தில் சரித்திர பாடங்களை சொல்லிக்கொடுப்பார். தந்தையின் கடுமையான பயிற்சியினால் வாரியார் தனது 12 வயதுக்குள்ளேயே பதினாறாயிரம் பாடல்களை மனப்பாடம் செய்து பாராட்டு பெற்றார். 8 வயதில் வெண்பா முழுக்க தெரிந்தவர் வாரியார். இளம் வயதிலேயே தந்தையாருடன் சேர்ந்து சிறு சிறு கூட்டங்களில் சொற்பொழிவு செய்தார். பிற்காலத்தில் மக்களை வசீகரித்த மிகப்பிரபலமான சொற்பொழிவாளர் ஆனார்.

கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர்பட்ட பாடு. அவர் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கிவிடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார்.

பல நல்லுபதேசங்களையும் ,தனி மனித ஒழுக்கத்தையும் எடுத்துரைத்த வாரியார் சுவாமிகள் அதன் படி வாழ்ந்தும் காட்டினார்.  கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம்(உண்ணா நோன்பு) இருப்பார். இவ்விரதத்தை கடைப்பிடிக்குமாறு தன்னை சார்ந்தவர்களுக்கும் அறிவுறுத்துவார்.


இந்திய அரசு அவருடைய பிறந்த நூற்றாண்டு நினைவாக 2006-ம் ஆண்டு சிறப்பு தபால் தலை வெளியிட்டது. வேலூர் மாநகராட்சி லாங் பஜார் தெருவுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் பெயரிடப்பட்டது.

No comments:

Post a Comment