November 15, 2010

செய்திதாளில் தக்கோலம் பற்றி

தக்கோலம் - குமுதம் பக்தி - பிப்ரவரி 15 2005
எழுதியவர் பாலகுமாரன்
சோழ தேசத்தை மட்டும் ஆண்டு கொண்டிருந்த சோழ மன்னர்கள் தங்கள் பெருவலிமையால் சோழ தேசத்தை விரிவுப்படுத்தினார்கள்.


குறிப்பாக சோழ தேசத்திற்கு வடக்கே இருக்கின்ற வயல்கள் நிறைந்த தொண்டை நாட்டை ஆட்சி செய்ய விரும்பினார்கள். பல்லவர்கள் ஆண்டு கொண்டிருந்த இந்த இடத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழதேசத்தை ஆட்சி செய்த ஆதித்த சோழன், பல்லவ மரபை கடைசியாக ஆண்ட அபராஜிதனிடமிருந்து போரிட்டு வென்று, தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டான்.

சோழதேசம் இந்த ஆதித்த சோழன் காலத்திலிருந்து வலுவுடைய நாடாக மாறிற்று. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ராசாதித்தன் என்ற சோழ மன்னன் திருநாவலூர் என்ற ஊரில் படைவீடு அமைத்து தன்னுடைய வட எல்லையை காப்பாற்றி வந்தான். அப்போது சோழதேசம் நோக்கி படையெடுத்து வந்த மூன்றாம் கிருஷ்ணன் என்கிற ராஷ்டிரகூட அரசனும், பூதகன் என்கிற கங்கதேச அரசனும் ஒன்று சேர்ந்து, ராசாதித்தனை எதிர்த்தார்கள். தக்கோலம் என்ற ஊரில் ராசாதித்தன் அவர்களோடு மிகக் கடுமையாக மோதினார். யானை மேல் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த ராசாதித்தனை பூதகன் எய்த அம்பு நெஞ்சை ஊடுருவிக் கொன்றது. அங்கேயே ராசாதித்தன் உயிரை இழந்தான். அவனுக்கு ‘ஆனைமேற் றுஞ்சிய தேவர்’ என்று பெயர் வந்தது. நடுவே இருபத்தைந்து ஆண்டுகள் ராஷ்டிரகூடர்களால் அபகரிக்கப்பட்ட இந்த இடம் மீண்டும் சோழமன்னர்கள் கைக்கு மாறியது. அந்த தக்கோலத்தில் மிக அழகான சிவன் கோவில் ஒன்று உண்டு.
தக்கோலத்தை திருவூறல் என்றும் அழைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் நீருக்குப் பஞ்சமில்லாமல் எப்போதும் பூமியில் நீர் ஊறிக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கு திருவூறல் என்ற பெயர் வந்தது. அருகே ஓடுகின்ற கொற்றவை என்கிற குசத்தலை ஆறு, மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஆறாகவும், கோடைக் காலத்தில் சிறிதளவு மண்வெட்டினாலும் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடும் ஆறாகவும் இருப்பதாலும் இந்த ஊருக்கு திருவூறல் என்று பெயர் வந்திருக்கலாம்.
கோவில் மிக அழகாக இருக்கிறது. ஊர் சிறியதாக இருந்தாலும், கோவில் பெரியதாக இருக்கிறது. ஆனால் கோவில் சரியாகப் பராமரிக்கப்படாமல் செடிகளும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. மிகப் பழமையான கோவில் என்பதை கோவிலின் ஒவ்வொரு அம்சமும் வெளிப்படுத்துகின்றன.
ஏன் தக்கோலம் என்று பெயர் வந்தது?
தட்சன், மகள் தாட்சாயிணியை ஈசனுக்குத் திருமணம் முடித்தான். தான் இறைவனுக்கே மாமனார் என்ற இறுமாப்பில் அலைந்தான். எல்லா மாமனார்களும் செய்வதுபோல மாப்பிள்ளையைப் பற்றி குறைபட்டுக் கொண்டான். மிகப்பெரிய யாகம் ஒன்று அமைத்து, அதற்கு ஈசனுக்கு அழைப்புவிடுக்காமல், தன் இறுமாப்பைக் காட்டினான். ஈசன் தன்னுடைய சக்தியான வீரபத்ரரை தட்சனை நோக்கி அனுப்ப, வீரபத்ரர் தட்சனின் படைகளைக் கலைத்து அவன் தலையை வெட்டி, அவனுடைய தலைக்கு பதிலாக ஆட்டுத் தலையை வைத்துவிட்டார். அந்நிலை கண்டு தட்சன் ஓலமிட்டான். ஈசன் மனமிரங்கி திருமாலும், பிரம்மாவும், விநாயகரும் பார்க்க அவன் தக்கோலத்தில் பூஜை செய்ய வேண்டுமென்றும், அந்த சிவபூஜையை அவர்கள் கவனித்து வருவார்கள் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கு கதிமோட்சம் கிடைக்குமென்றும் சொல்ல, விஷ்ணுவும் பிரம்மாவும் விநாயகரும் உள்ள அந்தக் கோவிலில் தட்சன் இடையறாது பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றான். தட்சன் வாய்விட்டு, ஓலமிட்டு, சிவனைப் பார்த்து அழுத தலமென்பதால் தக்கன் ஓலம் என்பதே தக்கோலம் என்று மாறியது என்று சொல்கிறார்கள்.
தட்சிணாயணத்திலும், உத்தராயணத்திலும் கோவிலிலுள்ள சிவலிங்கம் நிறம்மாறுகிறது என்கிறார்கள். தட்சிணாயணத்தில் வெண்மையாகவும், உத்தராயணத்தில் சிவந்தும் சிவலிங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கருவறையின் வாசலில் மிக அழகாக சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் ஒன்று இருக்கிறது. இரண்டு தேவகணங்கள், இரண்டு பூதகணங்கள் இருக்க, ஒரு கால் மடித்து அமர்ந்த நிலையில் இறைவனும், இறைவியும் இருக்கிறார்கள். சிற்பம் பார்க்கும்போதே கோவிலின் தொன்மை மிக நன்றாகத் தெரிகிறது.
மிக அழகான நிலையில் இரண்டு துவார பாலகர்கள் வெளியே வைக்கப்பட்டிருக்கிறார்கள். சோழர் காலத்து சிற்ப அமைதி அங்கு ததும்புகிறது. கோவிலைச் சுற்றியுள்ள உள்பிராகாரத்தில் பிரயோகச் சக்கரமுள்ள விஷ்ணுவும், பிரம்மாவும் இருக்கிறார்கள். துர்க்கை மிக அழகாக இருக்கிறாள். துர்க்கையினுடைய கை விரலும், உதடும், மூக்கும், புருவமும், உசிந்த இடையும், கனிந்த பார்வையும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்கின்றன.
இறைவனுக்கு ஜலநாதீஸ்வரர் என்று பெயர். இறைவிக்கு கிரிராஜ கன்னிகை என்றும் மோகனவல்லி என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.
கோவிலிலுள்ள கல்வெட்டுகளில் மிகத் தொன்மையானது, பல்லவ மன்னன் அபராஜிதவர்மனின் ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டின் துணைகொண்டு இக்கோவில் கற்கோவிலாக கி.பி. எண்ணூற்று எழுபத்தாறில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
வியாழ பகவானின் மகனான உதத்தியமுனிவர், தன் மைந்தனின் சாபம் தீர, இங்கு சிவலிங்கம் அமைத்ததாகச் சொல்லி குகைக்குள் இருக்கின்ற ஒரு சிவலிங்கத்தைக் காட்டுகிறார்கள். அதற்கும் தினமும் வழிபாடு நடந்துவருகிறது.
ஊருக்கு சரியான பாதை இருந்தும், பேருந்துகள் இங்கு கோயில் எல்லைவரை செல்லாததால், ஊரின் வெளிப்பக்கமே நிற்பதால், கோவிலுக்கு ஜனங்கள் வருவது அரிதாக இருக்கிறது என்று ஊர் மக்கள் குறைபடுகிறார்கள்.
தக்கோலம் மிகமிகப் பழமையான ஒரு கோவில். மிகப்பெரிய வணிக நகரமாக ஒரு காலத்தில் இது திகழ்ந்திருக்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், கிரேக்கநாட்டு நிலவியல் ஆசிரியர் தாலமி தாம் இயற்றிய நூலில் தக்கோலத்தை ‘தகோல’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மிலித்தபன்கா என்ற பௌத்த நூலிலும் தக்கோலத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அவனி நாரணன் என்கிற மூன்றாம் நந்திவர்மன் ஆட்சியின்போது இங்கிருந்து வணிகத்தின் காரணமாக மலேயா சென்ற வணிகர்கள், சியாம் நாட்டில் தகோப என்ற மாவட்டத்தில் புதிய தக்கோலம் என்ற ஊரை உருவாக்கினார்கள். ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், இந்த ஊரை, ‘கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலம்’ என்று தனது மெய்க்கீர்த்தியில் கூறியுள்ளான். அதாவது சபையில் உள்ள சான்றோர்களால் புகழப்படத்தக்க தகுதியை இந்தத் தக்கோலம் பெற்றிருந்தது என்று சொல்கிறான்.
ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இந்தத் தக்கோலம் இன்று ஒரு சிறிய கிராமமாக, வயல்கள் சூழ்ந்த இடமாக, விவசாயத்தை மட்டுமே நம்பிய ஊராக திகழ்கிறது.
தக்கோலக் கோவிலின் மிகச்சிறப்பு யோக தட்சணாமூர்த்தி. சற்று சாய்ந்த நிலையில் மாணவர்களை உற்றுப் பார்க்கின்ற ஆசிரியன் போல உத்திட்ட ஆசனத்தில் அமர்ந்து, நேரில் பேசுவது போன்ற ஓர் உணர்வை அந்தச் சிற்பம் தருகின்றது. தட்சணாமூர்த்தியை, யோகதட்சணாமூர்தி என்று அழைக்கிறார்கள். குரு பெயர்ச்சியின்போது இந்த தட்சணாமூர்த்திக்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்தத் தக்கோல ஊருக்கு ஒரு முறை சென்றால், அந்தக் கோவிலின் அழகைக் கண்டு நீங்கள் நிச்சயம் மகிழலாம்.
சென்னையை அடுத்த அரக்கோணத்திலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது, தக்கோலம்.

No comments:

Post a Comment