November 19, 2010

செய்தியும் விசாரிப்பும்!

எப்போதும் இறைச்சிந்தனையில் இருக்கும் அந்தத் துறவியிடம் ஒருவர் வந்தார். ஐயா! தங்களின் சீடன் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்வதற்காக வந்திருக்கிறேன் என்றார்.


ஒரு நிமிஷம் பொறுங்கள் என்ற துறவி எழுந்து அவர் அருகில் வந்தார்.
எந்த விஷயத்தையும் நான் கேட்பதற்கு முன்பு மூன்று கட்டங்களில் அதை சோதித்துப் பார்ப்பேன். அதன்பிறகே நம்புவேன் என்று வந்தவரிடம் சொன்னார். வந்தவர் குழம்பிவிட்டார். அது என்ன சோதனை ஐயா? என்று கேட்டார்.


துறவி சிரித்தபடி சொன்னார். முதலில் உண்மைக்கான சோதனை. நீங்கள் சொல்லப்போகும் விஷயம் உங்கள் கண்ணால் பார்த்ததா?
வந்தவர் மறுத்தார். இல்லை சுவாமி! நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைத் தான் சொல்ல வந்தேன்.
ஓகோ! அப்படியானால் நீங்கள் சொல்லப்போவது உண்மையா... பொய்யா என உங்களுக்கே தெரியாது.


சரி! அடுத்த சோதனைக்குப் போவோம். இது நன்மைக்கான சோதனை. நீங்கள் சொல்ல வருவது என் சீடனைப் பற்றிய நல்ல விஷயமா... கெட்ட விஷயமா? கெட்ட விஷயம்தான் ஐயா!

என் சீடனைப் பற்றி உண்மையா, அல்லவா என்று தெரியாத ஒரு கெட்ட விஷயத்தைச் சொல்ல வந்திருக்கிறீர்கள்.


சரி! மூன்றாவது கட்டத்துக்குப் போவோம். இது மகிழ்ச்சிக்கான சோதனை  அதைக் கேட்டால் எனக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?
இல்லை. மனவருத்தம்தான் மிஞ்சும்.

துறவி மீண்டும் சிரித்தபடி கேட்டார்: எனக்கு மனவருத்தம் தருகிற, உண்மையா எனத் தெரியாத ஒரு கெட்ட விஷயத்தை நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்?
வந்தவர் பேசாமல் தலைகுனிந்து திரும்பிப் போனார்

No comments:

Post a Comment