November 15, 2010

தக்கோலம் வரலாற்றுச் சிறப்பு

வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் தக்கோலம் திருவூறல் உடையார் கோயில் உள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த தாலமி, தம் நூலில் தகோல என்று தக்கோலத்தைக் குறிப்பிடுவதால் இவ்வூரின் தொன்மை புலப்படும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர் இதனைத் திருவூறல் என்றும், திருநாவுக்கரசர் ஊறல் என்றும் தத்தம் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தக்கோலத்தைச் சுற்றி ஆறும், ஏரிகளும் நீர் நிறைந்தும், பூமியில் ஊற்றுநீர் சுரந்து பொங்கி நீர் வளத்துடன் காணப்படுவதால், திருவூறல் என்பது காரணப் பெயராகவும் அமைந்துள்ளது எனலாம். கோயிலே நீர்ச்சூழலில் இங்கு இருப்பதால், நீர்த்தலமாகிய திருவானைக்காவில் மூலவர் நீர்ச்சூழலில் இருப்பதை ஒப்பிட்டுக் காணலாம்.

சம்பந்தரும் அப்பரடிகளும் பதிகம் பாடிய காலத்தில் இக்கோயில் மண்ணால் கட்டப்பட்டிருந்து, பல்லவன் அபராசிதவர்மன் காலத்தில் (கி.பி. 876 இல்) கற்கோயிலாக மாற்றப்பட்டது.

பழமைச் சிறப்புடைய திருஊறல் உடையார் கோயில் கிழக்கு நோக்கி இருப்பினும், நுழைவாயில் மேற்கே அமைந்துள்ளது. நுழைவாயிலிலுள்ள இராசகோபுரம் மூன்று நிலைகளுடையது; இக்கோபுரம் சைவ - வைணவச் சுதைச் சிற்பங்களுடையது; இக்கோபுரம் விசயநகர மன்னர் வீரப்பிரதாப சதாசிவ மகாராயர் காலத்தில் கட்டப்பட்டது.

கோயில் வெளியே உள்ள சிறிய மண்டபத்தில் அமர்ந்த நிலை சிங்கத்தூண்களும், கருவறை நுழைவாயிலின் மேலேயுள்ள சோமாஸ்கந்தர் திருவுருவமும் கண்ணப்பரின் பக்தியெழிற் கோலமும், பல்லவர் காலக் கலைப்பாணியில் அமைந்துள்ள பாலகோட்டச் சிலைகளும், இக்கோயில் பிற்காலப் பல்லவனால் கட்டப்பட்டது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன. மேலும், தக்கோலம் ஏரியின் உள்ளே நின்றிருக்கும் கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள நந்தித் திருவுருவம் இக்கோயிலுக்கும் பல்லவர்க்குமுள்ள தொடர்பைப் புலப்படுத்தும். கருவறையிலுள்ள திருவூறலுடையார் திருமேனி வெண்மணற் கல்லாலான சுயம்பு மூர்த்தமாகும். பல்லவர் கலைப்பாணியும் முற்காலச் சோழர்கலைப் பாணியும் இக்கோயிற் கட்டடக்கலைச் சிறப்புடன் இணைந்து பெருஞ்சிறப்பைப் வெளிப்படுத்துகின்றன.

Source : http://www.tamilvu.org

No comments:

Post a Comment