November 15, 2010

தக்கோலம் வரலாறு, பெயர் காரணம்

தக்கோலம் என வழங்குதல் திருவூறல் அமைவிடம் சான்றோர் உடைய தொண்டைவள நன்னாடு தமிழ் நாட்டில் வட அரணாக உள்ளது. தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பது இரண்டனுள் பன்னிரண்டாவது திருத்தலமாக விளங்குவது தக்கோலம் என வழங்கும் திருவூறல்.


அக்காலத்தில் கல்வியில் வல்ல சான்றர்களால் புகழ்படத்தக்க தகுதியைத் தக்கோலம் பெற்றிருந்தது என்பதை முதல் இராசேந்திரன் (கி.பி. 1012-1044) 18 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு தக்கோலத்தை கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம் என்று குறிப்பிடுவதால் அறியலாம்.


தக்கோலம், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அழகிய திருவூர் தக்கோலம்.

கொற்றலை (குசத்தலை) என்று அழைக்கப்பெரும் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் பண்டைப் பெருமக்கள் பலவற்றைக் கொண்டதாகும்.



தக்கோலம் - பெயர் காரணம்
தக்கன் என்ற அரக்கன் தான் கொண்ட ஆணவத்தால் தன் தலையை இழுத்து, ஆட்டுதலை பெற்றவனாய் இறைவனை வழிபட்ட நிகழ்ச்சியின் வாயிலாக அருள்புரிய வேண்டி இறைவன் ஒரு திருத்தலத்தையும் தோற்றுவித்தார்.
அந்தத் திருத்தலம் தான் தக்கோலம்.


இத்தலம் தோன்றுவதற்குக் காரணமான அமைந்ததுதான் தக்கன் நடத்திய வேள்வி. தக்கன் தன் மகள் தாட்சாயணியை ஈசனுக்கு மணமுடித்தால் தான் ஈசனுக்கே மாமனாராகி அவரைவிட உயர்ந்து விடலாம் எனக் கர்வம் அடைந்தான். இந்நிலையில் தக்கன் ஒரு யாகம் செய்ய எண்ணினான். அதில் கலந்து கொள்ள ஈசனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. அதன் மூலம் தான் ஈசனை அவமதித்துவிட்டதாக எண்ணினான். தக்கன், தன் கணவருக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட தாட்சாயணி, தக்கன் அடையப்போகும் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசன் அனுமதி அளிக்காமலே தக்கன் யாகம் செய்யும் இடத்திற்க்கு வந்தாள். ஆனால், தக்கனோ தன் மகள் என்றும் பாராமல் அவமதித்தான்.
இதைக் கேள்விப்பட்ட ஈசன் கோபம் கொண்டு, தக்கனின் யாகத்தையும், அவனையும் தமது அம்சமாக வீரபத்திரனை அனுப்பி வைத்தார். வீரபத்திர சுவாமி தக்கனின் யாகத்தை அழித்து, அவன் தலையை வெட்டி, அதற்குப் பதிலாக ஆட்டுத்தலை தக்கனுக்குப் பொருத்திவிட்டார்.


தக்கன் ஆட்டுத்தலை பொருந்திய வீரபத்திரத் திருக்கோயில், இத்திருத்தலத்தின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு வீரபத்திரரை அடுத்து ஆட்டுத்தலையுடன் தக்கன் நிற்பதையும் காணலாம்.


இந்த தண்டனையைத் தாங்கமுடியாமல் தக்கன் இறைவனிடம் மனம் கசிந்து அழுது வேண்ட, இரக்கம் கொண்ட ஈசன் அவனை நோக்கி தக்கனே, நீ விருந்தி க்ஷீர நதிக்கரையில் சென்று எம்மை நோக்கி வழிபாடு செய். நீ வழிபாடு செய்யுமிடத்தில் விநாயகர், விஷ்ணு, பிரம்ம தேவர் ஆகியோரை இருக்கச்செய். உனது வேண்டுகோளுக்கு செவி மருந்து அவர்கள் நீ வழிபாடு செய்யுமிடத்தில் அமர்ந்து கூர்ந்து கவனிப்பார்கள். அப்போது நான் அருள்புரிகிறேன் என்று திருவாய் மலர்தருளினார். அதன்படியே விநாயகர், விஷ்ணு, பிரம்மதேவர் ஆகியோர் முன்னிலையில் ஆட்டுத் தலையுடனேயே சிவவழிபாடு செய்தான் தக்கன்.

ஈசனின் அனுமதி இல்லாமலே தக்கனின் வேள்விக்கு சென்ற அன்னை தாட்சாயணி அதற்குப் பிராயச்சித்தமாக ஒவ்வொறு தலமாகச் சென்று ஈசனை வழிபாடு செய்து கொண்டு, தக்கன் வழிபாடு செய்து கொண்டிருந்த விருத்த நதிக்கரைக்கு வந்து சேர்கிறார். தாட்சாயணி இங்குள்ள ஆற்றில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபடும் போது, வெள்ளம் வர, அன்னை தன் மார்புத்தழுவி லிங்கத்தைக் காப்பாற்றினார். இதன் காரணமாகவே சிவலிங்கத்தின்மீது படிந்த அன்னையின் மார்புத்தழும்புகள் வடுக்களாக இன்னும் இருக்கின்றன. தக்கன், தாட்சாயணி இருவரின் வழிபாட்டில் மனம் இரங்கி ஈசன் தோன்றி இருவருக்கும் அருள்புரிந்தார்.


தக்கன் ஓலமிட்டு வழிபாடு செய்ததால், தக்கன்+ஓலம்= தக்கோலம் என இத்தலத்திற்குப் பெயர் வந்ததாகப் புராணக்கதை வழங்குகிறது.

No comments:

Post a Comment